- அணுசக்தியின் கொடைகள் பற்றி ஓர் பார்வை - 

உலகம் முழுமையும் ஆண்டொன்றுக்கு ராணுவத்துக்குச் செலவிடும் தொகையில் ஒரே ஒரு சதவீதத்தை மட்டும் கொடுத்தால், பூமியில் வாழும் அனைத்து குழந்தைகளுக்கும் அடுத்த பத்தாண்டுகளுக்கு கல்வி வழங்க முடியும். 

இது எவ்வளவு தூரம் உண்மை என்பதை பற்றி யோசிக்கும் முன் மற்றொரு அவலமான உண்மையையும் பார்த்துவிடுவோம். ராணுவத்துக்காகச் செய்யும் செலவும், ஆயுத வர்த்தகமும்தான் உலகிலேயே மிகப் பெரிய வியாபாரம். ஆண்டொன்றுக்கு 4,00,000 கோடி ரூபாய் (80,000 கோடி டாலர்) இதில் புழங்குகிறது. 

"எந்தக் காலத்திலும் முதலில் அணுகுண்டை வீச மாட்டோம்" என்று தலையில் அடித்து சத்தியம் செய்யும் இந்திய அரசிடம் 75-110 அணுகுண்டுகள் உள்ளன. 

இப்படியாக, பாழாய் போன மனித இனம் அடித்துக் கொண்டு சாவதில் காட்டும் வெறியைவிட, அறிவுக் கதவுகளைத் திறக்கும் அக்கறையை குறைவாகவே கொண்டிருக்கிறது.

1938 ஆம் ஆண்டு ஓட்டோ ஹான், பிரிட்ஸ் ஸ்டிராஸ்மான் என்ற இரண்டு ஜெர்மன் அறிவியலாளர்கள் யுரேனிய அணுவை நியூட்ரான்களுடன் மோதச் செய்வதன் மூலம் அந்த அணுவைப் பிளக்க முடியும் என்று செய்து காட்டினர். அப்படிப் பிளக்கும் போது ஒரு குறிப்பிட்ட அளவு நிறை, பெரும் சக்தியாக மாற்றப்படுகிறது. இதைத் தொடர்ந்து அமெரிக்கா இரண்டாம் உலகப் போரை நிறுத்துவதற்கு என்ற போலிக் காரணத்தைக் கூறி, 1945ல் ஜப்பான் நகரங்களான ஹிரோஷிமா, நாகசாகி மீது இரண்டு நாட்கள் இடைவெளியில் அடுத்தடுத்து அணுகுண்டுகளைப் போட்டு மனிதர்களிடையே எந்தவிதமான மாறுதல்கள் ஏற்படுகின்றன என்பதை பரிசோதனை செய்து பார்த்தது. ஜப்பானின் அகங்காரத்தை அடக்குவதற்காகவும், போரை நிறுத்துவதற்காகவும் என்ற பெயரில் அமெரிக்கா நிகழ்த்திய ஒரு பயங்கர பரிசோதனை இது என்பதை நிரூபிக்க பல்வேறு ஆதாரங்கள் உள்ளன. குண்டு வெடித்தவுடன் அமெரிக்க அரசு தரப்பினர் அங்கு மேற்கொண்ட பதிவுகள், ஆய்வுகளில் தொடங்கி, போரை நிறுத்துவதற்கு ஒரே ஒரு குண்டு மட்டுமே போதுமானதாக இருக்கையில் எதற்காக இரண்டு முறை குண்டு போட வேண்டும் என்ற ஆதாரமும் முக்கியமானது. ஒன்று யுரேனிய குண்டு, மற்றொன்று புளூடோனிய குண்டு. இரண்டின் பாதிப்புகளை அறியவே இரண்டு முறை பரிசோதிக்கப்பட்டுள்ளது. 

எப்பொழுதுமே ராணுவ தேவைகளுக்காக, அல்லது எதிரி நாட்டை அடக்கி தன் கையை மேலோங்கச் செய்ய புதிய அழிவு சக்திகளைக் கண்டுபிடிப்பது அமெரிக்காவின் வழக்கம். இரண்டு உலகப் போர் ஆயுதங்களுக்காக பெருமளவில் தயாரிக்கப்பட்ட தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல்சத்து (நைட்ரஜன், பாஸ்பேட், பொட்டாஷியம்) போன்றவற்றை வளரும் நாடுகளுக்கு உரம் என்ற பெயரில் டன்டன்னாக ஏற்றுமதி செய்தது போல, அணுகுண்டுகளுக்கு பதிலாக அணுவைப் பிளந்து குறைந்த செலவில் மின்சாரம் தயாரிக்க முடியும் என்று அமெரிக்கா கதைவிட்டது. 65 ஆண்டுகளுக்குப் பின் இந்தியாவுடன் 123 ஒப்பந்தம் போட்டு காசாக்கிக் கொள்வது வரை அமெரிக்காவின் அணுசக்தி வியாபாரம் இன்றுவரை செழித்தோங்கி நடைபெற்று வருகிறது. 

"ஆக்கத்துக்கான அணுசக்தி" என்ற திரைக்குப் பின்னால் மறைந்து கொண்டு இந்தியாவில் 5 அணு மின் நிலையங்களில் 10 அணு உலைகள் உள்ளன. மகாராஷ்டிராவில் தாராபூர், குஜராத், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், தமிழ்நாடு ஆகிய பகுதிகளில் இவை அமைந்துள்ளன. ஜார்கண்டில் உள்ள ஜடுகுடா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அணுஉலை எரிபொருளான யுரேனியம் வெட்டியெடுக்கப்படுகிறது. தமிழகம், கேரளத்தின் தென்பகுதி கடற்கரைகளில் அரியமணல் என்ற பெயரில் தோரியம் வெட்டியெடுக்கப்படுகிறது. இந்த இரண்டு பகுதிகளிலும் புற்றுநோய் பாதிப்பு உள்ளிட்டவை மோசமான நிலையில் உள்ளன. இந்தியாவின் மொத்த மின்உற்பத்தியில் அணுஉலைகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் வெறும் 3.8 சதவீதம். உற்பத்தி செய்யச் செலவழிக்கப்படும் தொகைக்கு ஈடானதாகவும் இது இல்லை என்பது எளிய குழந்தைக் கணக்கு. அணுஉலையை நிர்வகித்தல், அணு எரிபொருள் பாதுகாப்பு, கதிரியக்கக் கழிவு போன்றவை அணுசக்தியை மிகப் பெரும் செலவாளியாக்கி விடுகின்றன. 

அணுசக்தியின் விலை குறைவு என்று கூறுவது மிகப் பெரிய பொய். அணுசக்தி உற்பத்திச் செலவை மட்டும் இதற்கு கணக்கில் கொள்ளக் கூடாது. அணுசக்திக்கான விலையை நிர்ணயிக்கும்போது அணுக்கழிவு வெளியேற்றம், அது ஏற்படுத்தும் பின்விளைவுகள்-பாதிப்புகள், அணுஉலைகள் செயலிழந்த பிறகு பராமரிக்க வேண்டிய செலவு உள்ளிட்டவற்றை வசதியாக கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. ஒவ்வொரு அணுஉலையை அமைக்கவும் கோடிக்கணக்கில் செலவாகிறது, பெருமளவு சூழலியல் அம்சங்களும் காவு கொடுக்கப்படுகின்றன. மேலும் எந்த அணுஉலையும் காலாகாலத்துக்கும் மின்சாரத்தை உற்பத்தி செய்வதில்லை. 30-40 ஆண்டுகள் என ஒவ்வொன்றுக்கும் ஆயுள்காலம் உண்டு. 

கதிரியக்கக் கழிவுகள் நீண்ட காலம் அழியாது என்பதால், அவை ஏற்படுத்தும் பாதிப்புகளைத் தடுக்கவும் இன்று வரை வழி கண்டுபிடிக்கப்படவில்லை. கதிரியக்கக் கழிவுகள் புற்றுநோய், மரபணுக் கோளாறுகள் உள்ளிட்ட பயங்கர பாதிப்புகள் மட்டுமின்றி மரணத்தையும் ஏற்படுத்தக்கூடியவை. படியாக்கம் மூலம் உயிரினங்களையே பிரதியெடுக்கத் தெரிந்த அறிவியலால், கேவலம் அணுக்கழிவை இன்று வரை ஒன்றும் செய்ய முடியவில்லை. இதற்கு அறிவியல் கண்டுபிடித்த மிகப் பெரிய வழி என்ன தெரியுமா? திருடர்கள் திருட்டுப் பொருளை மறைத்து வைக்கப் பயன்படுத்தும் வழிமுறைதான். அது புதைத்து வைப்பது. கதிரியக்கக் கழிவுகளை மண்ணில் புதைப்பது அல்லது கடலில் புதைப்பது. இதுவே அணுக்கழிவை வெளியேற்ற அறிவியல் இன்று வரை சொல்லி வரும் வழிமுறை. இதையும் மீறி அணுசக்தி பசுமையானது, காலாகாலத்துக்கும் நிலைத்தது என்ற புரட்டுகள் பரப்பப்படுகின்றன. 

அணுஉலைகள் காற்றையும், தண்ணீரையும், மண்ணையும் மாசுபடுத்துவதில்லை என்று கூறப்படுகிறது. உண்மையில் சென்னைக்கு அருகேயுள்ள தமிழகத்தின் முதல் அணுஉலையான கல்பாக்கமோ நமக்கு வேறு விஷயங்களை தந்து வருகிறது (பார்க்க: புள்ளி விவரம்). 

செர்னோபில் அணு விபத்து நிகழ்ந்து 10 ஆண்டுகளுக்குப் பின், 1996ல் குழந்தைகளிடையே தைராய்டு புற்றுநோய் பாதிப்பு அதிகரித்தது பதிவு செய்யப்பட்டது. அதேபோல மரபணுக் கோளாறுகளும் அதிகரித்திருந்தன. பிறந்த குழந்தைகளின் விரல்கள் ஒன்றுடன் ஒன்று ஒட்டியிருப்பது (monoadactyly), கைகள்-கால்களில் இயல்பான எண்ணிக்கையைவிட அதிகமான விரல்கள் முளைப்பது (polydactyly) போன்ற பிரச்னைகள் பதிவு செய்யப்பட்டன. இதேபோன்ற பாதிப்புகளை மருத்துவர் புகழேந்தி தலைமையிலான பாதுகாப்பான சுற்றுச்சூழலுக்கான மருத்துவர்கள் அமைப்பு (டோஸ்) கல்பாக்கம்-சென்னையில் நடத்திய ஆய்வில் உறுதிப்படுத்தியுள்ளது. அது தொடர்பான தகவல்கள் "புள்ளி விவரம்" பகுதியில் விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன.  

பாதிப்புகள் கல்பாக்கத்தோடு முடிந்து போகக் கூடியவை அல்ல. அணுஉலைகள், கதிரியக்கக் கழிவுகள் வெளியிடும் கதிரியக்கத்தால் புற்றுநோய் (தைராய்டு புற்றுநோய், ரத்தப் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய்), பிறப்புக் கோளாறுகள், மரபணு மாற்றத்தைச் சிதைக்கக் கூடிய ஐசோடோப்புகள், நோய் எதிர்ப்புத்திறன் குறைவு, மூளைவளர்ச்சி குன்றுதல் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். அணுசக்தி பரிசோதனை, யுரேனியம் வெட்டியெடுத்தல், கதிரியக்கக் கழிவு புதைப்பு, அணுஆயுத தயாரிப்பின் அனைத்து நிலைகள், அணுசக்தி உற்பத்தியின் அனைத்து நிலைகளிலும் இதுபோன்று நிகழக்கூடும். 

அணுகுண்டுகள், அணுஉலை, கதிரியக்கக் கழிவு என அணுசக்தி சம்பந்தப்பட்ட எந்த விஷயமாக இருந்தாலும் எதையும் மறைத்து பேசுவதையே அரசு வழக்கமாகக் கொண்டிருக்கிறது. அவர்கள் தரும் வாக்குமூலப்படி அறிவியல்பூர்வமாக அணுஉலைகள் பத்திரமானவை என்றால், ஏன் ஒவ்வொரு விஷயத்தையும் இப்படி மூடி மறைக்க வேண்டும்?  

- பூவுலகின் நண்பர்கள் 

(ஜப்பான் நகரங்களான ஹிரோஷிமா, நாகசாகியில் அமெரிக்கா அணுகுண்டு வீசி பரிசோதனை நடத்திய நாட்கள் ஆகஸ்ட் 6, 9. அதையட்டி நமக்கு அருகே உட்கார்ந்திருக்கும் அணுகுண்டுகளைப் பற்றி புரிந்துகொள்ள வேண்டிய அவசியம் பொருட்டு இக்கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது)

Pin It