1986இல் நிகழ்ந்த செர்னோபில் அணுஉலை விபத்துக்குப் பிறகு மிக மோசமான அணுஉலை விபத்து ஜப்பான் ஃபுகுஷிமாவில் உள்ள டாய்ச்சி அணுஉலை விபத்துதான். இதன் மூலம் ஓர் அணுஉலைக்கு ஏற்படும் நெருக்கடியை எப்படிச் சமாளிப்பது என்பதை, இந்தியாவின் செயல்பாடுகளோடு ஒப்பிட்டு புரிந்துகொள்ள முடியும். கதிரியக்க பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் உலக மக்களை நெருக்கடிக்கு உள்ளாக்கியிருப்பதை இந்த நேரத்தில் கவனத்தில் கொள்ள வேண்டும். அணுசக்தி துறையின் புதிய, அதிவேக வளர்ச்சி காணும் சந்தையாக மாறியுள்ள இந்தியா, ஜப்பானிய நிகழ்வுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டாக வேண்டும். ஜப்பானில் என்ன நடந்தது, ஒரு பதிவு:

மார்ச் 11

உள்ளூர் நேரப்படி காலை 5.46 மணிக்கு ரிக்டர் அளவுகோலில் 9.0 அளவுள்ள மோசமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக தூண்டப்பட்ட ஆழிப் பேரலை ஃபுகுஷிமா டாய்சி அணுஉலையில் மின்சாரத்தை தடை செய்தது. இந்த அணுஉலையின் பதிலி மின் அமைப்புக்குள்ளும் வெள்ளம் புகுந்ததால், அணுஉலைகள் குளிரூட்டப்படுவது பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக அணுஉலை செயலிழந்தது.

ஐந்து மணி நேரத்துக்குப் பிறகு, ஜப்பானிய பிரதமர் நவோடோ கான் கதிரியக்க ஆபத்து எச்சரிக்கையை வெளியிட்டார்.

அடுத்த இரண்டு மணி நேரத்தில் அந்த மின் நிலையத்தின் 1.3 மைல் சுற்றளவில் உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

மார்ச் 12

"மக்களின் உடல்நலம் பாதிக்கப்பட விட மாட்டோம்" என்று ஜப்பானின் தலைமை அமைச்சரவை செயலாளர் கூறினார். அடுத்த ஒரு மணி நேரத்தில் அணுஉலை வெடித்தது.

மக்கள் வெளியேற்றப்படுவதற்கான பகுதி 6 மைல் சுற்றளவாக அதிகரிக்கப்பட்டது.

கதிரியக்கம் ஃபுகுஷிமா நகரை எட்டிவிட்டதாக அரசு தெரிவித்தது.

அணுஉலைகளை குளிர்விக்க கடல் நீர் உள்ளே செலுத்தப்பட்டது.

மற்றொரு அணுஉலையில் குளிரூட்டும் அமைப்பு செயலிழந்தது.

மார்ச் 13

ஃபுகுஷிமாவின் இரண்டு அணு உலை களில் கதிரியக்க பொருள்கள் உருகு வதாக அரசு ஒப்புக் கொண்டது. மூன்றாவது அணுஉலை வெடிக்கலாம் என கூறப்பட்டது.

அன்று மாலையே அணுஉலைக்கு அருகேயுள்ள பகுதிகளில் இருந்து 2,00,000 பேர் வெளியேற்றப்பட்டனர். 22 பேர் கதிரியக்கத்தால் பாதிக்கப்பட்டனர்.

 மார்ச் 14

மூன்றாவது அணுஉலை வெடித்தது. கதிரியக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 190 ஆக அதிகரித்தது.

மூன்றாவது அணுஉலையில் யுரேனிய எரிபொருள் குழல்கள் உருகுவதாக அரசு ஒப்புக்கொண்டது.

மார்ச் 15

மூன்றாவது அணுஉலை பாதிக்கப் பட்டுள்ளது, நான்காவது அணுஉலையில் தீப்பிடித்துள்ளது என்று அரசு ஒப்புக் கொண்டது.

19 மைல் சுற்றளவுக்கு கதிரியக்க பாதிப்பு இருக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. இரண்டு லட்சம் பேர் வீட்டுக்குள் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

மிக அதிக அளவு கதிரியக்கம் வெளியேறுவதாக அரசு ஒப்புக்கொண்டது.

மார்ச் 16

அணுஉலை இருக்குமிடத்தில் என்ன நடக்கிறது என்று தெரியாவிட்டாலும், கடுமை யான கதிரியக்கம் காரணமாக ஊழியர்களை திரும்ப அழைத்துவிட்ட தாக டோக்கியோ மின் சக்தி அமைப்பு தெரிவித்தது.

துல்லியமான தகவல்களைத் தருமாறு அணுஉலை நிறுவனத்துக்கு அரசு அறிவுறுத்தியது.

மார்ச் 17

ஜப்பானிய ராணுவ ஹெலிகாப்டர்கள் சிதைந்த அணுஉலை 3இன் மேலும், பயன்படுத்தப்பட்ட எரிபொருள் கிடங்கு 4இன் மேலும் கடல்நீரைக் கொட்டின. ஆனால் பெரும்பாலான தண்ணீர் காற்றிலேயே கலந்து விட்டது.

மார்ச் 18

அணுஉலை 2, 3, 4இல் வெள்ளை புகை வெளியே வந்தது. செர்னோபில் அணுஉலை மூடப்பட்டதைப் போலவே, நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட அணு உலையை மணல், காங்கிரீட் கலவை கொண்டு மூடத் திட்டமிட்டாலும்கூட, மின்சார தொடர்பை மீண்டும் கொடுத்து உலையை குளிரூட்ட முயற்சிப்பதாக ஜப்பானிய அணு பாதுகாப்பு முகமை தெரிவித்தது.

மார்ச் 19

டோக்கியோ குழாய் விநியோக தண்ணீர் மாதிரியில் சிறிதளவு கதிரியக்க அயோடின் 131 இருந்தது. ஃபுகுஷிமா அணுஉலைக்கு அருகே இருந்த பால், கீரையில் தேசிய பாதுகாப்பு அளவைவிட அதிக கதிரியக்கம் இருப்பது கண்டறியப்பட்டது.

மார்ச் 20

பால், கீரையில் வழக்கத்துக்கு அதிகமான அளவு கதிரியக்கம் கலந்திருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து, அணுஉலை வளாகம் அருகே உணவுப்பொருள் சரக்குக் கப்பல்கள் செல்லவும், உணவு பொருள்களை பெறுவதையும் தடை செய்ய அரசு தீர்மானிக்க முடிவு செய்தது.

மார்ச் 21

பசிபிக் பெருங்கடல் தண்ணீரில் கதிரி யக்கம் உள்ளதாக டோக்கியோ மின் சக்தி அமைப்பு கண்டறிந்தது.

மார்ச் 24

டோக்கியோ குழாய் விநியோகத் தண்ணீரில் அணுஉலையின் கதிரியக்கம் பரவியிருந்தது. இளம் குழந்தைகளுக்கான பாதுகாப்பு தரத்தை அது தாண்டியிருந்தது. அதே நேரம் இந்த தண்ணீர் வயதுவந்தோருக்கு பாதுகாப்பானது என்று அரசு கூறியது. மீன்கள் பாதிக்கப்பட்டுள்ளனவா என்பதை அறிய, கடலில் இருந்து மாதிரியை பரிசோதிக்க அரசு திட்டமிட்டது.

ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்ப்பும் தொகுப்பும்: ஆதி

நன்றி: டவுன் டு எர்த்

Pin It