‘உலக பெண் விஞ்ஞானிகள்’ புத்தகத்தை வாசித்த போது இவ்வளவு பெண் விஞ்ஞானிகளா? என்று வியப்பில் ஆழ்ந்தேன். நான் அறிந்த வரையில் பாடப்புத்தகத்தின் வழியாக மேரி கியூரி மட்டுமே பெண் விஞ்ஞானியாக எனக்கு அறிமுகமானவர். உலகில் சாதித்த மற்ற பெண் விஞ்ஞானிகள் பற்றி எந்தப்பாட புத்தகத்திலும் நான் படிக்கவில்லை. சமீப காலத்தில் மறைந்த இந்திய விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா பற்றி நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால், ஆசிரியர் தன் முன்னுரையில் கூறியிருப்பதைப் போல பெண் விஞ்ஞானிகளின் அறிவியல் கண்டுபிடிப்புகளும், அறிவியல் துறையிலும் இருட்டடிப்பு செய்யப் பட்டிருப்பது பெண்களின் வரலாற்றுக்கு செய்கிற துரோகம்தான். ‘உலகின் முதல் விஞ்ஞானி ஒரு பெண்ணாகவே இருந்திருக்க வேண்டும்’ என சமூக

விஞ்ஞானியும் சிந்தனையாளருமான லெவிஸ்ட்ராஸ் கூறுவது முக்கியமானது. இந்தப் புத்தகத்தில் முப்பத்தி இரண்டு பெண் விஞ்ஞானிகளின் வாழ்வில் நடந்த சோதனைகளையும், விடா முயற்சிகளையும், சாதனைகளையும், பெற்ற விருதுகளையும் ஆசிரியர் தனது எழுத்து நடையில் கூறிச் செல்லும் போது நம் மனமும் இதைப் போன்ற சாதனைகளை பெண்கள்மத்தியில் வளர்க்க வேண்டும். விழிப்புணர்வு தூண்டப்பட வேண்டும் என்று ஆர்வம் கொள்ளும் வகையில் அமைந்துள்ளது.

ஆண்கள் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம். சாதிக்கட்டும். அதை சாதனை என்று உலகம் உடனே புகழும். புகழட்டும். ஆனால் ஒரு பெண் தன் வாழ்வோடும், வறுமையோடும், குடும்பச் சூழலோடும் போராடி, தான் நினைத்த பாதையில் வெற்றி காண்பதை இவ்வுலகம் பெண் என்பதாலேயே ஏற்றுக் கொள்ள மறுப்பதை நினைக்கும் போது, இதை என்னவென்று சொல்வது? இந்த நிலை அறிவியல் துறையையும் விட்டு வைக்கவில்லை என்பதை இந்தப் புத்தகத்தை வாசிக்கும் போது எங்களைப் போன்ற பெண்களின் நிலை என்னவென்று இன்னமும் ஆழமாகப் புரிந்து கொள்ள முடிகிறது.

ஆனால், இந்த வீரப் பெண்கள் அவற்றையெல்லாம் ஒரு தூசைப்போல உதறிவிட்டு அறிவியல் உலகத்திலும் விஞ்ஞான உலகத்திலும் தங்கள் பெயரை நிலைநாட்டியிருப்பதும் இந்த மண்ணிலும் விண்ணிலும் பெண்களால் இயலாதது எதுவும் இல்லை என்பதை தக்க ஆதாரங்களின் மூலம் ஆசிரியர் எடுத்துரைத்திருப்பது மிகவும் பாராட்டத் தக்கது.

உலக பெண் விஞ்ஞானிகள் | இரா. நடராசன் | பாரதி புத்தகாலயம் | பக்:112 | ரூ. 50

Pin It