இது கனவென்று நானே நினைத்தாலும் பிற்காலம் ஆம் என்று தான் சொல்லும். ஆனால்... கயிற்று கட்டிலில் படுத்தபடி விரியும் கண்களில் இரவில் திடும்மென முளைக்கும் வீடாய் அந்த எதிர் வீடு.

காலம் எப்போதோ நின்று விட்ட வீடு போல அது. நினைக்க நினைக்க உதிரும் சித்திரம் தான் அந்த மெத்தை வீடு. பக்கவாட்டில் வாசல் இருக்கும் வீடு... சைடு போஸில் எங்கள் வீட்டை பார்த்தபடி இருக்கும். கேன் டின்னை நட்டு வைத்து வளர்த்தது போல தான் அந்த வீட்டின் வடிவம். இந்த வீட்டில் முன்பு யார் இருந்தார்கள் என்று யோசித்ததே இல்லை. இப்போது சித்ராக்கா குடும்பம் இருக்கிறது.

பென்சிலை ஷார்ப்பர் வைத்து சீவுகையில் சுழலும் துகள்களின் நீட்சி போல தான் அந்த வீட்டில் முகப்பிலிருந்தே மேலெழும் படிக்கட்டுகள். இருளும் பழுப்பும் கலந்த அழுக்கு வாசத்தில் சட்டென வேறெங்கோ வந்து விட்டது போல தோன்றியது. மெல்ல படியேறுகையில்.... குட்டி குட்டி படிக்கட்டுகள் பட் பட்டென சுழன்று கொண்டே போனது ஆழமாய் ஓர் தலைகீழ் ஓவியம் போல இன்னமும் மனதில் எட்டி பார்க்கிறது. ஒரு பூனையை போல சத்தமில்லாமல் நடக்க அவ்விரவு கற்றுக் கொடுத்தது. பத்தடி தூரத்தில்.... பல வண்ண உலகத்தில் இருப்பது போல எண்ணம்.

மேலேறி படி முடிந்த போது முதலில் தலையை நீட்டவா கால்களை நீட்டவா என்று குழப்பம். கண்களில்... பளீரென இருள் கவ்விய திரைக்கு நடுவே ஒரு சிம்னி விளக்கு ஒற்றைக்கண்ணில் ஒளி வீசிக் கொண்டிருக்க... அதிலிருந்தும் விலகிய வெளிச்சம் அந்த அறை சுவற்றில்.... ஆங்காங்கே கலங்கிய அச்சமாய் வழிந்து கொண்டிருந்தது. ஒரு ப வடிவ அறை அது. வலது பக்க சுவரோரத்தில் சித்ராக்காவின் அப்பா படுத்த படுக்கையாக இருந்தார். நேரே பார்த்தும் கண்கள் முட்டும் சுவரின் கீழே ஓர் அடுப்பு. சட்டி கொதிக்க வால் முளைத்த இரவு சூரியன் எரிந்து கொண்டிருந்தது. எதிரே அமர்ந்து அவ்வப்போது ஊதாங்குழலால் ஊதிக் கொண்டே... ஏதோ பேசிக் கொண்டிருந்தது சித்ராக்காவின் அம்மா. அருகே பக்கவாட்டில் பொன்னிறத்தில் அடுப்பு வெளிச்சம் முகத்தில் பட சித்ராக்கா சித்திரம் தான். இந்த பக்கம் அதன் தம்பி ஜீவராஜன். அந்த அறையே ஓர் ஓவியம் தான் போல.

ஒரு ஆங்கில படத்துக்குள் நுழைந்து விட்டது போல காட்சி நுட்பம் இனம் புரியாத இசையை பூனை நினைப்புக்குள் மீட்டிப் பார்த்தது. கண்களில் பூனையின் கால்கள். மூச்சொலியை முகர்ந்துக் கொண்டே முன்னே போகலாமா என்று யோசிப்பதற்குள்... ஓவியத்துள் இருந்து திரும்பி பார்த்தது போல சித்ராக்கா.... கனத்த உதட்டில் எப்போதும் வெற்றிலை சாறு சிவந்தே இருக்க... "டேய்.... வெற்றி......வா வா..... சூப்பு... இந்தா இப்ப ஆகிடும்.......வாங்கிட்டு போய்டுவியாம்....உக்காரு..." என்று சொல்லி அம்மாவைப் பார்த்து..." அம்மா சீக்கிரம் " என்றது.

சிரிப்பு எப்போதும் வாயோரம் மணந்து கொண்டே இருக்கும் சித்ராக்காவுக்கு. ஒருமுறை பார்த்துக் கொண்டேன்.

சித்ராக்காவின் அம்மா சின்னத்தாய்.... முக சுருக்கம் விரிய சிரித்தது. குறட்டை விடும் சத்தத்தில் நெஞ்செலும்பு உடைந்திருக்கும் பாவத்தை குரல் வழியே மூடிய போர்வைக்குள் இருந்து சுழற்றிக் கொண்டிருந்தார் சித்ராக்காவின் அப்பா. அனிச்சையாய் திரும்பி பார்த்து கொண்டேன். கொஞ்சம் மஞ்சள் ஒளியும் அடர்ந்து கிடந்த அந்த அறையில்.... ஊரிலிருந்து ஒதுங்கிய ஒரு தனித்த இருள் அண்டிக் கிடந்தது.

கொதிக்கும் சூப்பு வாசம்.... அந்த அறையில் குறைக்காத நாய்க்குட்டியாய் சுழன்றது. என்னை இழுத்து... அடுப்புக்கு அருகே அமர்த்திக் கொண்டார்கள். அவர்களின் பேச்சே ரகசியம் பேசுவது போல தான் இருந்தது. எல்லோரின் கண்களும் சூப்பை நோக்கி தான் குதித்தன. கரண்ட் இல்லாத மெத்தை வீட்டில் இந்த அறையை மட்டும் தான் வாடகைக்கு விட்டிருக்கிறார்கள் வீட்டுக்காரர்கள். மொட்டைமாடிக்கு போக வேண்டும் என்பது ஊர் பையன்கள் எல்லோரின் ஆசையும். எனக்கும் கூட உண்டு. படி எங்கிருக்கும் என்று மெல்ல திரும்பி சுற்றி சுற்றி பார்த்தேன். ம்ஹும் அகப்படவில்லை. கண்களில் சில் சில்லென பட்டதென்னவோ தூணில் சாய்ந்து நிற்கும் அந்த ஹிப்பிக்காரி தான்.

முணுமுணுப்பு தொடர்ந்து கொண்டே இருப்பினும்... என் கண்கள் தூணில் சாய்ந்து நிற்கும் அந்த ஹிப்பிக்காரி மீதே குவிந்திருந்தது. அவ்வப்போது திரும்பி கண்களாலே மெல்ல புன்னகையை எதேச்சையாக செலுத்துவது போல செய்தாலும்.... அந்த ஹிப்பிக்காரி என்னையே கண்களில் ஒளி மினுங்க பார்த்தாள். முக்கால் காலுக்கு பேண்ட். சுருட்டி விடப்பட்ட சின்ன சட்டை. லண்டனில் இருந்து வந்தவள் போல கலர். அடுப்பிலெரியும் நெருப்பின் ஜுவாலை அவள் நீண்ட முகத்தை சதுரமாக காட்டியது. கொழுத்த கன்னங்களில் பழுத்த உதடுகள். இது யார்.... என்ற யோசனையோடே... காது வரை திரும்பி திரும்பி.... ஹிப்பிக்கு வாய்த்த கண்ணை எடுக்கவே இல்லை. நெற்றியில் வியர்வை கொப்பளிக்க... இருள் சூழ்ந்த வீட்டில் இன்னொரு விளக்கென கழுத்து சாய்ந்து பார்த்தது... தூணோடு வீடு கட்டியவனின் ரசனை... சிற்பம் ஒன்றை செதுக்கி... வேண்டுமென்றே விட்டு போய் விட்டான் என்று கூட நினைக்கலாம்.

கவிதையில் வார்த்தைகள் கிடைத்தாலும் சிறுவன் எனக்கு சிந்தனையில் சில்லிடல் தான் அப்போது.

ஜீவராஜன்... முருகன் தியேட்டரில் டிக்கெட் கொடுக்கும் வேலையில் இருக்கிறான். சித்ராக்கா பீஸ் பார்க்க செல்லும். சித்ராக்காவின் அம்மா சின்னத்தாய் பாட்டியோடு கடலைக்காய் பறிக்க செல்கிறது. படுத்த படுக்கையாக சித்ராக்காவின் அப்பா விக்டர்.

 

"சரி பாட்டி இதெல்லாம் சரி.... அந்த ஹிப்பிக்காரி யாரு...." என்றேன். " நான் இங்க வந்த இந்த ஆறு மாசத்துல நான் பாத்ததே இல்லையே..." என்றேன் அழுத்தமாக.

பாட்டிக்கு ஒரே குழப்பம். அவுங்க வீட்ல அவுங்க நாலு பேர் தான. இதுல ஹிப்பிக்காரி எங்கிருந்து வந்தா..." முகத்தை சுருங்க செய்து பவுடரை பூசி விட்ட பாட்டி கூடையை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டது.

*

"இந்த வெற்றிப்பையன் யாரை சொல்றான்....?"

"அன்னைக்கு கூட சூப் வாங்க வந்தப்ப... தூணை புடிச்சிட்டு நின்னுட்டு இருந்துச்சே... அந்த ஹிப்பிக்காரிக்கா" என்றேன்.

"டேய்... ஏதும் கனவு கீற கண்டயா.....!" சித்ராக்கா வாயில் வெற்றியையே மடக்கி மெல்லுவது போல மென்றது வெற்றிலையை. பலத்த யோசனை.

கூட இருந்த பாப்புக்கா...." ஏய் சித்து.... இவன் அந்த சின்னராசு தங்கச்சி ராணிய சொல்றான்னு நினைக்கறேன்..." என்றது.

எங்கோ மென்ற பார்வையை பாப்புக்கா மீது குவித்த சித்ராக்கா... " அட ஆமா... அவ ஜீவராஜன் செட்தான... அப்பா விஷயத்துல கூட உதவி பண்ணினாளே... ஆமா கொஞ்ச நாளா ஹிப்பி வெட்டிட்டு தான் திரியறா...... அவ ஊரை விட்டு போயி வருஷமே இருக்குமே... இவன் அவள பாத்திருக்க வாய்ப்பில்லை... " வாய்க்குள் நிரம்பிய எச்சிலில் வெற்றிலை வாசம் கமகமத்தது.

சட்டென யோசனையை விட்டு... என் பக்கம் திரும்பிய சித்ராக்கா... " டேய்... ஒழுங்கா சொல்லு... அன்னைக்கு அவள பாத்தியா....வேற யாரையாவது பாத்தியா?" என்றது.

"அட ஆமாக்கா... சூப்பு வாங்க வந்தப்ப இந்தப்பக்கம் தூண்ல சாஞ்சி நின்னுட்டு இருந்துச்சு... அது யாருன்னெல்லாம் தெரியல. ஆனா அது ஹிப்பித்தலை தான்... நான் உங்க பிரெண்டு தான் யாரோ நிக்கறாங்கன்னு அப்ப கேக்கல." என்றேன் பொதுவாக பார்த்தபடி.

அவர்கள் இருவருக்கும் ஒரே குழப்பம். எனக்கும் தான். ஏன் உள்ள வந்து நிக்கற ஒருத்தரை தெரியலன்னு சொல்றாங்க.

*

மாலை வழக்கம் போல கயிற்றுக் கட்டிலில்.....அமர்ந்திருந்தேன். இரவை நகர்த்திக் கொண்டே ஹிப்பிக்காரி மெத்தை வீட்டு ஜன்னல் வழியே தெரிந்தாள். கூர்ந்து பார்க்கும் என்னை பார்த்து புன்னகைத்தாள். சற்று தள்ளி எதிரே நிற்கும் மின் கம்ப வெளிச்சம் மீந்து ஜன்னலில் பட்டு அவள் புன்னகையை புறுபுறுக்க செய்தது. பதிலுக்கு அனிச்சையாய் வாய் மலர்ந்தேன்.

வீதியில் காற்றே இல்லை போல புழுக்கம் அடை காத்துக் கொண்டிருந்தது. வேகமாய் வீட்டுக்குள் நுழைந்து பாட்டியின் கையைப் பற்றி இழுத்தேன்.

"அவுங்க வீட்டுக்கு எதுக்கு இந்த நேரத்துக்கு..." பாட்டி சமாதானம் சொல்ல சொல்ல பாதி கதவுக்கு இழுத்து சென்று விட்டேன்.

"சரி வா அது எந்த ஹிப்பிக்காரின்னு பாத்தரலாம்..."

பாட்டியும் வெற்றிலையை எடுத்து வாய்க்குள் போட்டுக்கொண்டது. உள்ளே இருள் சூழ்ந்த அதே வெளிச்சம்.

"இந்த ஜன்னல் வழியா தான் பார்த்துச்சு" என்றேன். சித்ராக்கா கண்களில்..... தொடர்பற்ற மினுங்கல் சுழன்று நின்றது.

சின்னத்தாய்... பாட்டி காதில் முனகியது. "என்னக்கா சொல்றான்... ஏதும் காத்து கருப்பா இருக்குமோ....?"

"யம்மோ லூசு மாதிரி உளறாத. அவ உயிரோட தான் இருக்கா.... விசாரிச்சிட்டேன். மெட்றாஸ்ல இருக்காளாம். அப்றம் எப்பிடி பேய் பிசாசுன்னுட்டு..."

திடும்மென தரையை பிளந்து கொண்டு எழும்பிய இருமலை படாரென கொட்டினார் படுத்திருந்த சித்ராக்காவின் அப்பா. எல்லாருமே ஒரு கணம் கனம் கூடி விலகினோம்.

"சித்த பேசாம கிட......" அவர் படுத்திருந்த திசையை பார்த்து பேசி விட்டு... " வெற்றி... நிஜமா தான் சொல்றய்யாய்யா! " என்றது... சின்னத்தாய் பாட்டி.

நான் வெளிச்சம் சிமிட்டுவது போல தலையாட்டினேன். பாட்டி ஒரு பக்கம் தேடியது. சின்னத்தாய் பாட்டி ஒரு பக்கம் தேடியது. பாப்புக்கா ஒரு பக்கம். சித்ராக்கா ஒரு பக்கம். ஜீவராஜனும் சேர்ந்து கொண்டான். தேடி தேடியே இருளை விரட்டினோம். ஒவ்வொரு சந்திலும்.... கட்டிலுக்கடியில்... மொட்டைமாடிக்கு செல்லும் படிக்கட்டுகளின் அடியே.... என்று ஹிப்பிக்காரியை தேடினோம். ஒவ்வொருவர் முகத்திலும் இனம் புரியாத தவிப்பு. ரகசியங்களின் வாசலில் நிற்கையில்....ராத்திரி நிறம் தான் நினைப்புக்கு.

மெல்ல மெல்ல இது தான் வாய்ப்பென்று சித்ராக்காவை கூட்டிக் கொண்டு மொட்டைமாடிக்கு சென்றேன். அங்கிருந்து தான் அகிலம் விரிகிறது போல கண்கள் விரிய கண்டேன். முதல் முறை ஊரின் பாதியை பார்த்த போது நெற்றியில் கழுகு சூடிக்கொண்டது போல இருந்தது. வார்த்தைகள் அமைதியாக... வாக்கிய குறுக்கு வெட்டில் கண்கள் அலைந்தன. திடும்மென தலை சுற்றுவது போன்ற நினைப்பு. அதீத சூடும் அதீத குளிரும் உள்ளங்காலில் கூசியது.

மீண்டும் வீட்டுக்குள் அலைந்தோம். பெருமூச்சில்.... பயம் கூடிக் கொண்டே போனது. பாட்டி அமைதியைக் கலைத்தது.

"ஹிப்பிக்காரியும் இல்ல. குல்லாக்காரியும் இல்ல. சின்னத்தாயி நீ சின்ராசு வீட்டுக்கு போயி ஒரு எட்டு பாத்து கேட்டுட்டு வா.... என்ன ஏதுன்னு விசாரிச்சிருவோம்..."

நான் பாட்டியின் பின்னால் சத்தமில்லாமல் படியில் இறங்கினேன். படியும் சத்தமில்லாமல் தான் இறங்கியது. படியின் வாசல் வரை வந்து எட்டி பார்த்த சித்ராக்காவை திரும்ப ஒரு முறை பார்க்க தோன்றியது. கடைசி படியில் கால் இருக்கையிலேயே மெல்ல திரும்பி கழுத்தை உயர்த்தி மேலே பார்த்தேன்.

முகத்தில் இருந்து வெளிச்சம் தொங்க... ஹிப்பிக்காரி....என்னை கூர்ந்து பார்த்தபடி ஸ்ஸ்ஸ்ஸ்...... என்று ஒற்றை விரலை வாய் மேல் வைத்து "சொல்லாதே" என்பது போல தலையாட்டினாள்.

நிலைகுத்திய பார்வையோடு வீடு வந்தவனுக்கு பாட்டி மந்திரித்து விட்டது. எத்தனை சொல்லியும் நம்பவில்லை.

*
நானும் ரவியண்ணனும் மேட்டாங்காட்டில் சூரியன் பொறுக்கி விட்டு சுகமென கிடக்கும் சனியை தோளில் தூக்கி அலைந்து வீடு நோக்கி நடக்கையில் இரவு 7 மணி. செம்மண் சாலையில் இருந்து தார் சாலைக்கு வருகையில்... கார்மேகம் கூட கூடு கட்டி விட்டிருந்தது. புளிய மரத்தடியே வரும் போதே மக்கள் கூட்டம் முருகன் தியேட்டர் வாசலில் முகிழ்ந்து கொண்டிருந்தது. வழக்கமாய் தியேட்டர் முன் நிற்கும் தேங்காய்ப்பால் தள்ளு வண்டியில் ஒரு கோப்பை தேங்காய் பால் 25 காசு என்று தள்ளுபடியா... இத்தனை கூட்டம். அருகே செல்ல செல்ல அலறல் சத்தம். ஒவ்வொரு கண்களிலும் பாதி பாதி ஆந்தைகள் தான் விழித்தன. விலக்கிக் கொண்டு பார்த்தால்.... விதி ரத்தத்தில் சாலையை பிராண்டிக் கொண்டிருந்தது.

முருகன் தியேட்டர் சுவரொட்டியின் தலையில் கால்நீட்டி படுத்திருக்கும் மின் விளக்கின் வெளிச்சம் சரியாக சாலையில் கால் அகன்று கிடக்கும் அவள் மீது பட்டு துடித்துக் கொண்டிருந்தது.

"மணல் லாரிக்காரனுக்கு இதே பொழப்பு தான்.... போலீசுக்கு போன் பண்ணுங்கப்பா.....ஓரமா போய்ட்டிருந்த புள்ள மேல உட்டேத்திருக்கானா.... கண்ணென்ன பொடனிலயா இருக்கு..."

"அவனுக்கெல்லாம் கண்ணு தெளிவா தான் இருக்கும். வண்டி வண்டியா மணல் அள்ளிட்டு போறத பாத்தும் பாக்காத மாதிரிதானே இருக்கோம்... நமக்கு தான் கண்ணு பொடனில இருக்கு. இல்லனா இப்டி அடிச்சிட்டு போவானா..."

ஆளாளுக்கு வழக்கம் போலான விபத்து நொடிகளை உடைத்துக் கொண்டிருந்தார்கள்.

"ரவிண்ணா.......இது.......இது.... ஹிப்பிகாரிதான...!" என்று கூர்ந்து கவனித்தேன். அவளே தான். ஒரு வருசமாக ஊரில் இல்லாதவள்... போன வாரம் என் கண்ணுக்கு தெரிந்தவள்....இதோ இங்கே வயிற்றில் வண்டி ஏறி குடல் வெளியேறி கிடக்கிறாள். எனக்கு பதற்றம் தொற்றிக் கொண்டது. பற்கள் திறக்க இயலவில்லை. வார்த்தைக்குள் விசும்பல். அவள் தூணில் சாய்ந்து அழகாய் நின்று என்னைப் பார்த்து ஸ்ஸ்ஸ்ஸ்....வா என்று என்னைக் கூப்பிட்டது... நொடிக்கு நொடி மாறி மாறி நெற்றியில் சொட்டும் வியர்வையில் துளிர்த்துக் கொண்டே இருந்தது. இப்போது நினைத்தால் அவள் மீது பயம் இல்லை. அழகு தான் கூடியது.

கூட்டம் சலசலத்துக் கொண்டே இருந்ததே தவிர... ஹிப்பிக்காரியை யாரும் தொடவில்லை. தொட்டால் இன்னும் சரிந்து விடும் குடல். குடலில் இருந்து எழும்பும் குருதி வாசம் குமட்டிக் கொண்டு வந்தது. ஈக்கள் மொய்க்கத் தொடங்கி விட்டன.

ரவியண்ணன் பல்லைக் கடித்துக் கொண்டு செய்வதறியாது பார்த்தது. எனக்கோ மூச்சு பெருமூச்சாகி... அழுகைக்கு ஆரம்பம் அது.

"அண்ணா பாவண்ணா.... ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டு போலாண்ணா...." - குரல் எழும்பவில்லை. சுற்றி சுற்றி பார்த்தேன். என் நோக்கத்தை புரிந்துக் கொண்டவர்கள்... என் முகத்தை பார்க்க தவிர்த்தார்கள். நொட்டை சொல்ல முந்திக் கொண்டு வரும் மனிதர்கள் உதவி என்றால் பின் வாங்கி விடுகிறார்கள்.

எங்கிருந்து தைரியம் வந்ததோ தெரியவில்லை. நான் ஹிப்பிக்காரியின் கால்களை சேர்த்து இணைத்தேன். முக்கால் கால் பேண்ட் முழுக்க ரத்தம். ரவியண்ணன் லுங்கியை இறுக்கிக் கட்டிக் கொண்டு... சரிந்து கிடந்த குடலை பொத்தினாற் போல கை கூப்பி அள்ளி அவள் வயிற்றுக்குள்ளாகவே வைத்து அழுத்தியது. அவள் கழுத்தில் எம்பி எம்பி அமிழ்ந்தது உயிராகத்தான் இருக்க வேண்டும்.

வாயைத் துண்டால் பொத்திக் கொண்டு குமட்டலை அடிக்கியபடியே "தம்பி வம்புல மாட்டிக்காதீங்க... ஆம்புலன்ஸ்க்கு சொல்லி இருக்கு" என்ற பெருசைப் பார்த்து.... "ம்ம்ம்ம் மயிர்ல சொல்லி இருக்கு....மூடு" என்றது ரவியண்ணன். அதற்குள் தியேட்டர் வாசலில் அந்த காட்சிக்கான வேலை முடிந்து வெளியேறிய ஜீவராஜனும் வேகமாய் வந்து எங்களோடு சேர்ந்து கொண்டான். ஆப்பக்கூடலில் இருந்து வந்த டவுன் பஸ்ஸை மரித்தோம். டிரைவர் மிரண்டு முடியாது என்று மூச்சு வாங்கினார். கடவுள் கண்டக்டரிடம் குடி இருந்தான் போல.

"வா வா வா தூக்கிட்டு வா..." என்று கத்த.......பேருந்தில் கூட்டமும் அவ்வளவாக இல்லாதது வசதி செய்து கொடுத்தது. பின்னால் படபடவென பாதி பேருந்து காலியானது. சடுதியில் சலசலப்பும்... தவிப்பும் கூடி விட.... கூட்டத்தின் அசைவு அதிகமாகியது. இதுவரை பூனைக்கு மணி கட்ட தயங்கி நின்றவர்கள்.. இப்போது ஆளாளுக்கு ஐடியா கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள்.

ரவியண்ணன் ரத்த சகதியில் கால்கள் நடுங்க கழுத்தோடு தூக்க... நான் கால்களை பிடித்துக் கொண்டேன். எங்கு பிடிக்கிறான் என்றே தெரியாமல் பொதுவாக எங்களை உள்ளே நகர்த்தினான் ஜீவராஜன். வண்டிக்குள் சதையோடு சதையாக பரபரத்தோம். மூவருக்குமே நடுக்கம் எங்களை மீறிக் கொண்டிருந்தது.

குடல் மினுங்கும் குருதியில்.... உயிர் நடுங்க பார்த்த ஹிப்பிக்காரி... என் கண்களையே ஊடுருவினாள். வாய் முனங்கியது. எனக்கு பெரிய மனிதன் மாதிரி நடந்து கொள்ள தெரியவில்லை. கையைப் பற்றி கடைசி நேர நம்பிக்கையைத் தர தெரியவில்லை. என் கண்களில் நீர் கொட்டியது. தலையில் பாரம். என் சட்டையில் வயிற்றுப்பகுதி எல்லாம் ரத்தம். மனதுக்குள் இன்னதென தெரியாத யுத்தம். பேரழுகையை வாய் பிதற்றி அடக்கினேன். இவர்கள் யாவருக்கும் தெரிந்த ஹிப்பிக்காரியை விட எனக்குத் தெரிந்த ஹிப்பிக்காரி பேரழகி. அவன் கண்களில் அகல் மின்னும் ஜொலிப்பை நான் மட்டுமே கண்டிருக்கிறேன். ஒரு மாயத்தில் இருந்து மறைந்து கொண்டிருக்கிறாள் என்று தோன்றியது.

"பேக் டயர் ஏறி இறங்கிருக்குப்பா...... கஷ்டம்..." என்றார் குறுகுறுவென கம்பி பிடித்து நின்று பார்த்த கண்டக்டர். ட்ரைவர் திரும்பி திரும்பி பார்த்தபடியே வேகமெடுத்தார். நாங்கள் சொல்ல எதுவும் இல்லாமல் அவள் முகத்தையே பார்த்தோம். பூக்கடை முக்கு தாண்டுகையில்... ஹிப்பிக்காரியை காலம் எடுத்திருந்தது.

 

*
ஹிப்பிக்காரியின் மர்மம் ஒரு பக்கம் துரத்த.... இரண்டு நாட்களுக்கு முன் நடந்த அவளின் மரணம் துக்கத்தில் ஆழ்த்தி இருந்தது. சிந்தனையும் வருத்தமும் கொண்ட பரபரப்பை அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தார்கள். அடுப்பில் தேநீர் ஆகிக் கொண்டிருந்தது. சிம்னி விளக்கு வீட்டின் நடுவே அச்சத்தை வெளிச்சமாக விட்டுக் கொண்டிருந்தது. ஆளுக்கொரு ஓரத்தில் அமர்ந்திருந்தார்கள்.

"அது எப்டி வெற்றி..... ஊருலயே இல்லாதவள பாத்தேன்னு சொல்லி ஒரு வாரம் தான் இருக்கும். அவ ரெண்டு நாளு முன்னால வண்டில அடிபட்டு சாகறா....அன்னைக்கு காத்தால தான் அவ மெட்றாஸ்ல இருந்து வந்திருக்கா.. சின்ராசு சொல்றானே... விதி கூட்டிட்டு வந்திருக்குன்னு அழறானே....."

"அதெல்லாம் சரி... ஆனா அவளை போன வாரம் எப்பிடி இவன் இங்க பாத்திருப்பான்..."

"ஒன்னும் விளங்கலயே.... செத்தவ பேய் பிசாதா வர்றதுக்கு கூட வாய்ப்பிருக்கு... ஆனா....இதென்ன புதுசா இருக்கு....!"

"ஏய் வெற்றி.... நிஜமா சொல்லு..... நீ வேற கதை கற்பனைன்னு எப்ப பாத்தாலும் பினாத்திக்கிட்டே திரியற.... அவளை பாத்தேன்னு நீயா கற்பனை பண்ணிக்கிட்டதான..."

"ஐயோ இல்லக்கா..... இங்க தான்... இங்க தான்....நின்னுச்சு" என்று சொல்லிக்கொண்டே அந்த தூணில் சாய்ந்து ஹிப்பிக்காரி மாதிரியே நின்று திரும்பினேன். ஒரு கணம் நானே ஹிப்பிக்காரியாகவே ஆகி விட்டது போல ஒரு எண்ணம் வந்து போனது. சித்ராக்கா.. பாப்புக்கா... ஜீவராஜன்......சின்னத்தாயி பாட்டி... எங்க பாட்டி... எல்லாருமே என்னையே பார்த்தார்கள். அவர்கள் ஒவ்வொருவரின் கண்களிலும் இரண்டிரண்டு தீ பந்தங்கள் எரிந்தது.

ஜன்னல் அருகே நின்ற ரவியண்ணனுக்கு இன்னுமே நடுக்கம் போகவில்லை. வெறித்து பார்த்துக் கொண்டே இருந்தது. நானும் கூட இன்னும் ஹிப்பிக்காரியின் ரத்த சூட்டை... பிசுபிசுப்பை... என் கைகளில் உணர்ந்தபடியே தான் இருந்தேன்.

"என்னவோ சரி இல்லையே.. நாளைக்கே கருப்பராயன பாத்துட்டு வந்துரலாம்..." என்று முனகியது பாட்டி. அச்சத்தின் விளிம்பில் ஒருவரோடு ஒருவர் நெருங்குவது போலவே நின்றார்கள்.

சுவரொரம் படுத்திருந்த சித்ராக்காவின் அப்பா போர்வைக்குள் இருந்து இரும ஆரம்பித்தார். திடும்மென கிளம்பிய இருமல் ஒரு ஓவியத்தை நிகழ்த்திக் கொண்டிருந்த என்னை சிலீரென நடுங்க வைத்தது. எல்லாருமே அந்த கணத்தில் சிதறி கூடினார்கள். அந்த அறையின் இதயம் வேகமாய் துடிக்க ஆரம்பித்தது போல... சுவர் கடிகாரத்தின் டிக் டிக் சத்தம் திக் திக் சத்தமாக வெளியேறியது.

அது சாதாரண இருமலாக இல்லை. தொடர்ந்து தொண்டைக்குள் ஐ விரல்களையும் விட்டு பிராண்டுவது போல. சற்று நேரத்தில் நெஞ்செலும்பு உடைந்து உள்ளிருக்கும் ஆன்மா பல்லிளித்துக் கொண்டு வெளியேறிவிடும் போல. அங்கலாய்ப்பு குறுகி எழும்பி குதர்க்கம் கொட்டும் அந்த வெறித்த வறட்டு இருமலில் ஏதோ செய்தி இருக்கிறதென உள்ளே ஒரு கெவுளி கத்தியது.

எல்லாரும் என்னை விட்டு அவரை நோக்கி ஓடி என்னாச்சு என்னாச்சு என்று தட்டி எழுப்பி அமர வைத்து நெஞ்சை தடவி விட்டு... இருமல் மருந்தை மூடியில் ஊற்றி... வாயில் ஊற்றி... ஆனாலும் அந்த இருமல் விட்டபாடில்லை. சின்னத்தாய் பாட்டி தலையில் கை வைத்து இன்னொரு தூணில் முதுகொட்டி சரிந்து விட்டது. கண்களில் காலம் வடிய... நெற்றியில் கலக்கம் கோடு இழுத்தது.

ரவியண்ணனும் ஜீவராஜனும் கீழே வண்டி கொண்டு வர ஓடினார்கள். சித்ராக்கா வாய் விட்டே அழுதது. பாப்புக்கா ஒரு பாதத்தை இன்னொரு கால் மீது தேய்த்து தனக்கு தானாக அச்சம் விலக்கிக் கொண்டிருந்தது.

என் பாட்டியிடம் "ரத்தனா.... இன்னையோட என் புருஷன் வாழ்நாள் தீர்ந்துச்சுனு தான் நினைக்கறேன்...." என்று புடவையை வாயில் கவ்விக் கொண்டு பினாத்தியது சின்னத்தாய் பாட்டி.

பாட்டி... அய்யனார் இருக்கும் திசையை நோக்கி இருந்தவாக்கிலேயே கை எடுத்துக் கும்பிட்டது. எரியும் சிம்னி விளக்கில் அந்த அறை திகு திகுவென பிரகாசமானது. நான் எப்படி நின்றேனோ அப்படியே நின்றிருந்தேன். ஏன் என்று தெரியவில்லை. அசைய தோன்றவில்லை. அசைந்தாலும் அசைந்த மாதிரி தெரியவில்லை. எல்லாரும் ஒரு கணம் நினைவு வந்ததை போல என்னையே கூர்ந்து பார்க்க... என் பார்வை மட்டும் அந்த வீட்டு மூலையில் மாட்டி இருந்த தூசு படிந்து துவண்டிருந்த ஓவியத்தில்....படிந்திருந்தது.

 

*

பாட்டி சொன்னது போல பேயா.. பிசாசா.. பில்லி சூனியமா... குட்டிச்சாத்தானா.... உயிரோட இருக்கும் போதே ஆன்மா வெளிய வந்து சுத்தியிருக்குமா.... ஒன்றும் புரிபடவில்லை. ஒருவேளை வீட்டுக்குள் நான் பார்த்தது என் கற்பனையா கனவா... என்றும் கூட ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. அது உன் கற்பனை என்று மற்றவர் சுலபமாக சொல்லலாம். ஆனால் அது தன் கற்பனை என்று அதைக் கண்டவன் எப்படி சொல்ல முடியும். நிஜத்துக்கும் நிழலுக்கும் இடையே நின்றவர்கள் மறந்து போனார்கள். நிஜமாகவே நிழலுக்குள் நின்ற என்னால் அந்த நிகழ்வுகளை மறக்க முடியவில்லை. அது தான்.... இத்தனை வருடங்களுக்குப் பிறகும் இந்த வீட்டுக்குள் நின்று கொண்டிருக்கிறேன். ஊரே மாறி விட்டது. 20 வருடங்களுக்கு முந்தைய ஊரை இந்த ஒரு வீடு மட்டும் இன்னும் சுமந்து கொண்டிருப்பது தண்டனையா தவமா என்று தெரியவில்லை.

ரவியண்ணன் சரக்கடித்து வெளியே அமர்ந்திருக்கிறது.

இது வீடே இல்ல வெற்றி. வருஷத்துக்கொரு முறை வெள்ளை அடிச்சு புது வீடாக்கி விட்டுட்டு போவாரு வீட்டோனர் டேவிட். ஒன்னும் நடக்காது. மறுபடியும் இருட்டு பூசிக்கும். நிழல் அப்பிக்கும். எவனும் வாங்க மாட்டேன்னு சொல்லிட்டான். ஊருக்குள்ள யாரும் இந்த வீட்டுக்குள்ள போறதில்ல. இந்த வாசல்ல வழியா கூட நெருங்கி யாரும் போறது இல்ல. நடு ஊருக்குள்ள இப்டி ஒரு வீடு... பாடா படுத்துது. ஊரே தூங்கும் போதும் இந்த வீடு மூச்சு விட்டுட்டு இருக்கிறது உத்து கேக்கறவங்களுக்கு கேக்கும். உன் ஆராய்ச்சியெல்லாம் நீயே வெச்சுக்கோ. நான் வரல. அந்த இருமல் பார்ட்டி விக்டர் செத்து... சின்னத்தாயி செத்து... ஜீவராஜன் செத்து... உங்க பாட்டி செத்து... பாப்பு செத்து..... சித்ரா செத்து... இப்ப உயிரோட இருக்கறது நாம மட்டும் தான். இதுல என்ன ஆராய்ச்சி வேண்டி கிடக்கு.. இன்னும் அஞ்சு பத்து வருசத்துல நாமளும் சாவதான் போறோம். சாவு வரும் போகும் வெற்றி. இந்த உலகமே இருட்டு வரைஞ்சு வெச்சிருக்கற ஓவியம். அதுக்கு சாவு தான் தீனி. இப்ப கூட நாம் எவனோ வரைஞ்ச ஓவியத்துல இருக்கற பாத்திரங்களோன்னு தோணுது...."

தொடர்பற்று ஆனால் தொடர்பாக பேசுவதில் என்னவோ ஞானம். என்னவோ கோணம்... ரவியண்ணனுக்கு.

மனிதர்கள் சாகலாம். மர்மங்கள் சாவதில்லை. மானுட பெயர்ப்புகளில்... மந்திரங்கள் தான் மூச்சொலி. நான் நடந்தேன். மிதந்தேனா... தெரியவில்லை. உள்ளே நடுக்கம் இருந்தாலும்.... இல்லாத சிம்னி விளக்கு எரிவது போல தோன்றியது. ஜன்னலை திறந்து விட்டேன். ஜன்னல் தான் என்னைத் திறந்து உள்ளே விட்டது போல உள்வாங்கி பார்த்தது. ஆயுள் மறந்த வெளிச்சம் ஆவென துள்ளிக் கொண்டே தரை தொட்டு நீண்டது. விழுந்து வணங்கியதோ... வீழ்ந்து விரவியதோ.... காதடைக்கும் மௌனம் என்னை சுற்றும் முற்றும் பார்க்க வைத்தது. மெல்ல நடந்தேன். எனை மென்று கொண்டே நடந்தேன். அந்த தூண் என்னை வா வா என்றழைத்ததோ. வீணை சப்தம் எனக்கு மட்டுமா. மீட்டுவது காலமா. நான் தூணில் மெல்ல சாய்ந்து நின்றேன். தாங்கிக் கொண்டது போல இருந்தது தூண். ஒரு கணம் ஹிப்பிக்காரியாய் உணர்ந்தேன். உடல் சிலிர்க்க... உள்ளத்தில் குபுக்கென்று அவளின் குடல் தொங்கும் காட்சி மினுமினுத்தது. குருதி தோய்ந்த அந்த மரண இரவு மண்டைக்குள் இதோ கொப்பளிக்கிறது.

எல்லாமே கண்களில் வந்து வந்து போய்க்கொண்டிருந்தது. அப்போ அது எப்படி தான் நடந்துச்சு. அந்த அறையில் மூலையில்... அன்று இருந்த அந்த தூசு படிந்த நிழல் கவ்விய ஓவியம் இன்று இல்லாத போதும் கண்களில் ஒரு கணம் தெரிந்து மறைந்தது. கண்களைத் தேய்த்த போது மனதுக்குள் ஏதோ தெளிவு. சட்டென ஒரு எண்ணம். இப்படித்தான் இது நடந்திருக்க வேண்டும்.

"அந்தாளு வரைஞ்சு வரைஞ்சே வீணா போனாரு... ஓவியம் வரைய ஆரம்பிச்சிட்டார்னா பொண்டாட்டி புள்ள... வீடு வாசல்.. ஏன் அவரையே மறந்துடுவாரு. ஆனா வரைஞ்ச பின்னால... எது நிசம் எது படமுன்னே தெரியாது..."

சின்னத்தாய் பாட்டி ஒரு முறை கடலைக்காய் பறித்துக் கொண்டே பேசியது நினைவில் உதிர்ந்தது. நிழலுக்கும் நிஜத்துக்கும் இடையே தான் விக்டர் எனும் ஓவியர் வாழ்ந்திருக்கிறார். இரு வேறு உலகங்களின் இணைப்பில் அவரின் ஓவியங்கள் இருந்திருக்கின்றன.

"இந்த விக்டர் தாத்தாகிட்ட படம் வரைய கத்துக்கோ வெற்றி" என்று பாட்டி அடிக்கடி சொல்லும். அவர் வரைவதை நான் பின்னால் முட்டியில் கைகள் ஊன்றி நின்று அவர் முன்பே வரைந்து விட்ட ஓவியமாய் பார்த்திருக்கிறேன்.

உன் கண்கள் ஓவியத்துக்கு பொருத்தமான கண்கள்டா வெற்றி பயலே... என் பல ஹீரோக்களுக்கு உன் கண்களைத்தான் பொருத்தியிருக்கேன்னு அடிக்கடி சொல்வார். ஒரு பிக்காஸோ.... ஒரு சல்வடார் டாலி....ஒரு வான்காவாக வந்திருக்க வேண்டியவர். இந்த குக்கிராமத்தில் பிறந்ததால் படம் வரையற லூசாகி இருந்தார். இருமல் அதிகமாகி வரைய முடியாமல் படுத்த படுக்கையாக கிடந்த சமயத்தில்.... அவரின் மனம் வரைந்த ஓவியம் தான் ஹிப்பிக்காரி. போர்வைக்குள் கண்களை சுழற்றி சுழற்றி நாவை அசைத்து அசைத்து... முகத்தில் படும் வியர்வைத் துளிகளைக் கொண்டு... நெற்றியில் நிம்மதி படற... மூளைக்குள் வரையப்பட்ட ஓவியம் தான் ஹிப்பிக்காரி. உயிர் சக்தி முழுக்க திரளும் போது தான் படைப்புகள் நிகழ்கின்றன. நிகழ்த்துபவன் தீர்க்கதரிசியாக இருக்கையில்... மௌன மொழியிலும் வடிவங்கள் வெளியேறும். அப்படி உள்ளிருந்த ஆதங்கம்... உயிர்ப்பு... வேகம்... வித்தை... ஆசை அவரைத் தாண்டி வெளியேறி இருக்கிறது. படைப்பின் தகிப்பு வெளியேற வழியின்றி திக்கி திணறி இருமலின் வழியாக அந்த அறையில் அலை மோதி இருக்கிறது. அதற்கான உருவத்தை ஹிப்பிக்காரியின் வழியே நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. அது வீட்டுக்குள் ஆங்காங்கே நின்றும் நடந்தும் பார்த்தும் வாழ்ந்திருக்கிறது. ஓவியனின் இயலாத இறுக்கத்தின் நுண்ணிய இசையை... நுண்ணோவிய கலையின் உச்சத்தை... பிரபஞ்சத்தை நுகரும் நுட்பத்தைக் கண்டடைந்த ஓவிய நிலையின் துளியை...ஹிப்பிக்காரியின் உருவமாய் ஓர் உன்னத ஓவியனின் அந்திம காலம் பயிற்சி செய்து பார்த்திருக்கிறது. விக்டர் வரைந்ததெல்லாம் கடவுளாக தென் பட ஆரம்பித்திருக்க வேண்டும். பிரபஞ்சத்துக்கும் விக்டருக்கும் இடையே அவரின் ஓவியங்கள் பாலமாகி இருந்திருக்கிறது. அவைகள் ஒவ்வொரு முறையும் வேறு வேறு இயல்புகளில்...உலகின் ரகசியங்களை வெளிப்படுத்தி இருக்கின்றன. இணைப்பின் தீரா யுக்தி அவரின் ஓவியங்களின் வழியே நிகழ்ந்து கொண்டே இருந்திருக்கிறது. கண்களில் பதியும் காட்சியை நகல் கூட எடுக்க முடியும் என்பதன் அடுத்த நகர்வென கொள்ளலாம் தான். பெருவெடிப்பின் சிதறிய துண்டு பூமியைப் போல விக்டர் எனும் ஓவியனின் விந்தைகளில் வெடித்து சிதறி வெளியேறிய உருவம் ஹிப்பிக்காரியாக இருக்கலாம். விக்டரின் எண்ண அலைகளின் வீரியம் சிந்தனைக்கு வடிவம் தராத சூழலிலும் அதுவே தன்னை வடிவாக்கிக் கொண்டு வெளியேற செய்திருக்கிறது.

என் கண்கள் விக்டரின் ஓவிய கண்கள். அது அந்த நுண்ணோவியத்தை படம் பிடித்திருக்கிறது. விக்டரின் எண்ண அலைகளோடு என் கண்கள் இணைய... ஏதோ ஒரு வகையில்... ஹிப்பிக்காரியோடு நாங்கள் இருவருமே இணைந்திருக்கிறோம். எங்கள் மூவருக்குள்ளும் ஒரு முக்கோணம் காந்த சக்தியாக... ஓவியம் எனும் சூத்திரத்தின் வழியே சுழன்று கொண்டே இருந்திருக்கிறது. ஒரு வகை இணைப்பில் நாங்கள் மூவரும் ஒருவரையொருவர் கவனித்துக் கொண்டே இருந்திருக்கிறோம்.

எனக்கே தலையை சுற்றியது. எந்தளவு சாத்தியம் இது.

ஒரு நாள்... வாக்கிங் முடித்து திரும்புகையில்... சாலையில் இருந்த குழிக்குள் தெரியாமல் கால் மடங்கி விழுந்து நெஞ்சில் அடிபட்டு மாரடைப்பு வந்து கிடந்த விக்டரை... முதலில் தூக்கி வாயோடு வாய் வைத்து காற்று கொடுத்து முதலுதவி செய்து பிழைக்க செய்தவள் ஹிப்பிக்காரி. ஒவ்வொரு ஓவியமும் அது என்னவாக இருந்தாலும் அதில் கடவுளை உணர செய்யும் உன்னதம் தான் அவரின் படைப்பு. ஆக, அவர் கடைசியாக கண்ட கடவுள் அவள். அதன் பிறகு படுத்த படுக்கையாகி.. உடல் நிலை மோசமாக... இதுவரை புகைத்தவையெல்லாம் இருமலாய் கூடி... எல்லாம் மறந்து.... இறுதியாக கண்ட ஹிப்பிக்காரியை மட்டுமே அவரின் ஓவிய மனம் கெட்டியாக பிடித்துக் கொண்டு சுமந்திருக்கிறது. அவளின் சுவாசத்தையே தனது சுவாசமாக்கிக் கொண்டிருக்கிறார். அதன் நீட்சி அவளை வரையாமலே மனதால் வரைந்து உலவ விட்டிருக்கிறது. விக்டர் தன் கடவுளை தொடர்ந்து படைத்துக் கொண்டே இருந்திருக்கிறார். உலகுக்கும் அவருக்குமான இடைவெளி அதிகமான போது உள்ளுக்குள் முளைத்த பிரபஞ்சத்தில் அவர் தன் கடவுளை நிகழ்த்திக் கொண்டே இருந்திருக்கிறார். உயிர் ஊசலாடும் உடலில்... உயிர் தீயை அணையாமல் வைத்திருந்தது ஹிப்பிக்காரியின் தோற்றம் மட்டும் தான். அவள் மரிக்க அடுத்து சில நாட்களிலேயே அவரும் மரித்தது தொடர்பின் அறுந்து விழாத சிந்தனை. தனது உச்ச படைப்பில் படைப்பாளி காணாமல் போய் விடுகிறான்.

நான் எழுதும் ஒரு கதையைப் போல விளங்கி கொண்டாலும்... ரவி அண்ணனிடம் சொல்லி இன்னும் விளக்க வேண்டும் போல இருந்தது.

வீட்டை விட்டு வெளியேறியதும்...படபடக்கும் உள்ளுணர்வோடு "ரவியண்ணா ஒன்னு சொல்லவா...!" என்றேன்.

பதிலற்று குனிந்திருந்த ரவியண்ணன் விரலாலே ஏதோ கிறுக்கிக் கொண்டிருக்க... நெற்றி சுருங்க எட்டிப் பார்த்தேன். மண்ணில் பாதி வரையப்பட்ட நிலையில் ஹிப்பிக்காரியின் தலை இருக்க.... மெல்ல என்னை நிமிர்ந்து பார்த்து மெலிதாய் புன்னகைத்து "சொல்லாதே" என்றது.

ஒரு கணம் ஒரே கணம்... குழி விழுந்த தாடிக்குள் இருந்து முளைக்கும் விக்டரின் புன்னகையை ரவி அண்ணன் முகத்தில் கண்டேன். 

- கவிஜி

Pin It