நரை கூடி கண் மங்கி உடல் சோர்ந்து தோல் சுருங்கி நிலையில் புரட்சி இயந்திரம் படுத்துக் கிடந்தது. சிறிது கண் அயர்ந்திருப்பார்.....

“இரண்டு கைகளையும் திருப்பி மேசை மீது விரித்து அப்படி வைத்திருக்கனும்.. கைய எடுத்த..”

 பழைய காலத்து தேக்கு மேசை. அதன் உறுதியை அது நிற்கும் தோரணை, திடமே சொல்லியது! புரட்சி இயந்திரம் விரல்களை அதில் விரிக்கும் பொழுது இதை உணர்ந்தார். உளவுத்துறை போலீஸ் அதிகாரி மேசையில் கிடந்த கைகளின் மீது படார் படார் என்று கையிலிருந்த லத்தியால் அடித்துக் கொண்டிருந்தார். பத்து, இருபது அடிகள் மாட்டை அடிக்கும் வேகத்தில் அடித்தார். பு.இ மண்புழு போல நெளிந்தார். அவருக்கு கை வலித்திருக்கும் போல சட்டென்று நிறுத்தி விட்டார்.

 தன்னை ஆசுவாசப்படுத்தி கொண்டே, “கையை எடுக்காத அப்படியே வைத்திருக்கனும்.. நான் கேக்கிற கேள்விக்கு சரியா பதில் சொல்லனும்... டக் டக்குனு உண்மையை மட்டும்தான் சொல்லணும்.. யோசித்து உன் கம்யுனிஸ்ட் புத்தியைக் காட்டி... மாத்தி ஏதாச்சும் சொன்ன தொலைச்சி கட்டிப் விடுவேன், கையை எடுக்காதே” என்று பு.இ.யுடைய இரு கைகளையும் கண்களையும் மாறி மாறி பார்த்துக் கொண்டே இருந்தார். அவை நடுங்கிக் கொண்டிருந்தது!

 வழக்கம் போல விசாரணைதான் என்ற பெயரில் ஆரம்பித்து ஊரில் ஆரம்பித்து உறவில் தொடர்ந்து, தோழர்கள், தலைவர்கள் வரை நீடித்து நீடித்து தொடர்ந்து கேள்விகளை கேட்டுக் கொண்டிருந்தார்.

புரட்சி இயந்திரம் சற்று அமைதி காக்கும் பொழுதெல்லாம் லத்தி காட்டமாகப் பேசியது!

கடைசி கேள்வியாக, “நீ எப்படி கம்யுனிஸ்ட் தீவிரவாதக் கட்சியில் சேர்ந்த...” என்று கேட்டார்.

“நான் எங்கே சேர்ந்தேன். இந்த சமூகம் அமைப்பு முறை தான் காரணம்” என்று சொல்ல நினைத்தார் பு.இ! ஆனால் சொல்லவில்லை!

“ஏன். நீ இந்த தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்தாய்” என்று அதட்டிக் கொண்டே அந்த அதிகாரி மெல்ல பு.இ விரல்களை நோக்கி குண்டாந்தடியை உருட்டி நகர்த்தினார்.

 தனது விரல்கள் நசுங்கிப் போவது உறுதி என்று புரிந்த பு.இ, “இந்த சமூகம் என் அம்மாவைக் கொன்று விட்டது அதான்..” என்றார்.

 “இன்னா இன்னா சொன்ன.... நல்லா கத விடுவே போல இருக்கே” என்று அதட்டினார் அந்த அதிகாரி.

“இந்த சமூகம் அம்மாவை சரியா மருத்துவம் பார்க்காம கொன்னுடுச்சி. அதனால தான் நா மாறினன்..” என்றார் பு.இ.

“என்னடா. கதைவுட்டு திரியுற..” என்று அந்த அதிகாரி பு.இ யை அதட்டினார்.

“இந்தக் கதை எல்லாம் வேற யாரிடமாவது சொல்லு என்னிடம் சொன்ன கையில் விரல்கள் ஒட்டி இருக்காது.. அழுகிப் போக வைச்சிடுவேன்” என்று நம்பாமல் வேறு கதைகளுக்குத் தாவினார்.

அவையெல்லாம் இந்தக் கதைக்கு சம்பந்தம் இல்லாத விசயங்கள். அதோடு விசாரணை முடிந்தது. பின்பு நடந்த கூடுதல் ‘தர்ம விசாரணை’யில் பத்து அல்லது பன்னிரண்டு கூடுதல் தர்ம அடிகளும் கூடுதலாகக் கிடைத்தன!

தோழர்கள் சிலர் அடைக்கப்பட்டு இருந்த லாக்கப் அறைக்குள் பு.இ யும் கொண்டு செல்லப்பட்டார். பு.இ ஒரு புரட்சித் தோழர் என்பது இந்நேரம் உங்களுக்குப் புரிந்து இருக்கும். கார்த்திகேயன் என்பது அவர் பெயர். அவரின் சில இளம் நண்பர்கள் தோழர்களாக உருமாறும் பொழுது வரும் இளம் பருவக் கோளாறுகளால் அவரை இப்படி தவறாக அழைக்கக் காரணமாக இருந்தது. கதையின் வேகம் குறையும் என்பதால் அதைப் பிறகு விவரிப்போம்!

 சுவரைப் பார்த்தவாறு தனித்தனியாக அவர்கள் உட்கார வைக்கப்பட்டு இருந்தனர். சிறிது நேரத்தில் கார்த்திகேயன் கைகள், விரல்கள் புசுபுசுவென்று பெரிதாக வீங்கி விட்டது. அடித்த அடியில் கைகளில் சிராய்ப்புகளில் இரத்தம் கசிய ஆரம்பித்தது. அந்த ரத்ததோடு கூடிய உடம்பின் அசதியும் சேர தூங்கி விட்டார். சுண்டி இழுக்கும் வலியும், கெட்ட இரத்தத்தின் - நிணநீரின் வாசனையும் பு.இ யை தொந்தரவு செய்தது. தூங்கத்திலிருந்து சட்டென்று விழித்து எழுந்து பார்த்தார்.

 அந்த வாசனை அம்மாவின் வாசனை. மாதவிடாய் காலங்களில் வரண்டாவில் இரவில் வலியில் படுத்திருக்கும் போது அம்மாவிடம் இருந்து வரும் வாசனையை ஒத்ததாக பரவிக் கிடந்தது. மின்னல் வெட்டு போன்று நாளங்களுக்கு ஏற்ப அம்மாவின் உடல் நடுங்குவது போல் கார்த்திகேயன் கைகளும் நடுங்கின.

சிதைக்கப்பட்ட இரத்தக் குளமான கைகளில் இருந்த வலி அம்மாவின் வலியை திரும்ப திரும்ப நினைவுபடுத்திக் கொண்டே இருந்தது. வலி சுள்ளென்று உடல் முழுவதும் பரவி உடலை ஓர் உலுக்கு உலுக்கியது. கடந்த கால நினைவு வலிகள் மேலெழுந்து அவரை மெல்ல விழுங்கியது. நிகழ்கால வலிகளை கார்த்திகேயன் எச்சிலுடன் சேர்த்து விழுங்கி விட்டார். மனதின் ஆழத்தில் எங்கோ சென்று வலி விண் விண் என்று வலித்துக் கொண்டே இருக்கிறது. அந்த வலி அப்படியே இருக்க வேண்டும் என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டார்.

வலிகள் அவரிடம் இருந்து அந்நியப்பட்டு இருப்பதான உணர்வு அவரை செரித்துக் கொண்டிருந்தது.

அதற்குப் பிறகும் சில காவல்துறை அதிகாரிகள் இந்த வகை மாதிரி விசாரணைகளைத் தொடர்ந்தார்கள். கார்த்திகேயனிடம் இருந்து ஒரு வார்த்தை கூட அதற்குப் பிறகு வாங்க முடியவில்லை. அம்மாவின் மாதவிடாய் வலி, கருப்பை நோய், மாட்டுக் கொட்டகை தூமைகந்தைகள், அம்மாவின் கடைசி உரையாடல் மட்டுமே புரட்சி இயந்திரத்திற்குள் முழுமையாக இருந்தது. இதிலிருந்து இழுத்து வெளியே போட காவல்துறையால் முடியவில்லை. அது முடியாது!

கடந்த கால நினைவுகளின் சொத சொதப்புகளில் தேங்கி தெறிந்து கொண்டிருந்தது இக் கதையின் நாயகனுக்கு..

2

இந்தக் கதையின் நாயகன் புரட்சி இயந்திரம் என்று அழைக்கப்பட்ட கார்த்திகேயன் என்பதும் அவர் ஒரு தோழர் என்பதும் புரிந்திருக்கும்!

அவருடைய நெருக்கமான சில தோழர்கள் அவரை கிண்டலாக, கேலியாக வைத்து தங்களுக்குள் கலாய்க்க அழைத்த பெயர். ஆரம்பத்தில் தோழர் கூட பு.இ. என்று அழைக்கும் போது புரட்சி இளைஞர் கழகத்தில் இருந்து தான் வந்ததால் பு.இ. என்று அழைக்கிறார்கள் என்று பு.இ. க்கு சிறு மகிழ்ச்சியும் கூட உதட்டோரம் ஆரம்பத்தில் அரும்பி இருந்தது. ஆனால் பின்னர் தான் தெரிந்தது, பு.இ. என்பது புரட்சி இளைஞர் கழகம் கிடையாது, புரட்சி இயந்திரம் என்ற கிண்டல் பெயரின் சுருக்கம் என்று.

புரட்சி அமைப்பு ஓன்றில் அவரும், அவருடைய நண்பர்களும் இணைந்து செயல்பட்டாலும் கூட புரட்சிப் பணிகளை ஒவ்வொருவரும் செய்யும் போது அவரவர் சூழ்நிலைகளிலிருந்து அவரவர் விரும்பங்களில் இருந்து அவர்களது செயல்களை அமைத்துக் கொண்டார்கள்.

 இளமைக் காலத்திற்கு உரிய கிண்டல் கேலி செயல்களினால், வீரியத்துடன் செய்வதை அலட்சியப்படுத்தி அமைதியாக இருப்பது, கண்டும் காணாமல் செய்வது, குடும்பத்துடன் அனுசரித்தும், இயல்பான வாழ்க்கைகையை இழக்காமல் பார்த்துக் கொண்டு, புரட்சிகர செயல்களின் விளைவுகளை புரிந்து கொண்டு அதற்கு தகுந்தார்போல் தங்களின் அமைப்புப் பணிகளாக சுருக்கிக் கொள்வது என்பதாக பு.இ. சகதோழர்களின் செயல்பாடுகள் அமைந்து இருந்தன. ஆனால் பு.இ க்கு மட்டும் இவற்றில் மாற்றுக் கருத்தும் செயல்பாடும் இருந்தது.

 தலைமைத் தோழர்களுடன் சேர்ந்து பு.இ இவர்களை குட்டி பூர்ஷ்வாக்கள் என்று கமிட்டிகளில் விமர்சனங்கள் செய்யப் போக அவர்களின் ஈகோ இன்னும் வீரியம் அதிமாகி இப்படியாக உருமாற்றம் அடைந்தது!

 “நாளைக்கே புரட்சி வரும்! வர வேண்டும்!!”

 அதனால் இன்றே அதற்கான திட்டமிடலின் செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டும் என்பதை கார்த்திகேயன் திட்டமிடுவார். அதற்குத் தகுந்தாற்போல்தான் அவருடைய செயல்பாடுகளில் வேகம், சுறுசுறுப்பு, அர்ப்பணிப்பு இருக்கும். அந்த திசைவேக முடுக்கத்தில் தான் அவர் செயல்பாடுகளைக் கொண்டிருப்பார். இந்த திசை வேகத்திற்கு தகுந்தாற்போல் தான் தன்னுடைய சக தோழர்களையும் செயல்பாடுகளையும் வழி நடத்திச் செல்ல கடும்முயற்சி செய்வார். சிறிதும் பின் வாங்குதலோ மாற்றிக் கொள்வதோ இல்லாமல் தன்முனைப்புடன் முழுவீச்சுடன் எடுத்த குறிக்கோளை நிறைவேற்றும் ஆளுமையுடன் கூடிய செயல்பாடு, எந்த இடர்பாடு இருந்தாலும் துச்சமாக தூக்கி எறிந்து விட்டு, தாங்கி கொண்டு முன்னுக்கு செல்வதாக அவர் இருந்தார். ஆனால் மற்றவர்களுக்கு அப்படியில்லை அப்படியே இருக்க இயலாது என்பது அவருக்கு ஆரம்பத்தில் புரியவில்லை. இதில் அவர்களுக்கு குறிப்பாக சிலருக்கு ஒவ்வாமை இருந்தது. இப்படி கல்லூரிக் காலங்களிலும், அதைத் தொடர்ந்த காலங்களில் கார்த்திகேயன் செயல்பாடுகள் சக தோழர்கள் சிலராலும் அவரை ஓட்டியுள்ள நெருங்கிய நண்பர்கள் பலராலும் இப்படி பேசப்பட்டு பின்னால் அதுவே அவருடைய பெயராகிவிட்டது.

 பு.இ யின் சகிப்புத்தன்மை ஆனது அவரை இப்படி வெளிப்படையாக அழைக்கும் அளவிற்கு கொண்டு சென்று விட்டு விட்டது சரியா தவறா என்று பேராயம் கூட்டி தான் விவாதித்து முடிவெடுக்கும் விசயமா என்ன?

 அதனால் கார்த்திகேயன் அதை அப்படியே நட்புக்காக, தோழமைக்காக பெருந்தன்மையுடன் பழக்கப்பட்டு போய்விட்டார்!

நாமும் அவரை பு.இ. அல்லது புரட்சி இயந்திரம் என்று அழைப்போம்!. வேண்டாமா?

இதெல்லாம் ஓட்டுக்கு விடும் விசயமா என்று முணுமுணுப்பது தெரிகிறது.

கார்த்திகேயன் அல்லது பு.இ. க்கு 70 வயதுக்கு மேல் கடந்து விட்டது. இந்த 50 ஆண்டுகளில் அவருடைய செயல்பாடுகள் எழுத்துக்கள் படைப்புகள் என்று வானத்திற்கு கீழ் உள்ள எல்லாவற்றைப் பற்றியதாக இருந்ததாக அவரின் நண்பர்கள் அவரிடம் கூறினார். அவர் எல்லாவற்றைப் பற்றியும் அநேகமாக பேசவும் வாதிக்கவும் எழுதவும் செய்வார். ஹகல், பயர்பாக்ஸ் மார்க்ஸ், எங்கல்ஸ், பிளக்னோவ், லெனின், ஸ்டாலின், கிராம்சி, குரூப்ஸ்கயா, ரோசாலக்சம்பர்க், மாவோ, சூஎன்லாய், சேகுவாரா, லின்பியோ, காங் சிங், இன்னும் தலைவர்கள், தத்துவவாதிகள் பற்றியும், மார்க்ஸியத்தின் அனைத்து பரிணாமங்களையும் தத்துவம், நடைமுறை, மூலயுத்திகள், செயல் உத்திகள், புரட்சி அலையேற்றம், பின்னடைவுகளையும், வலது சந்தர்ப்பவாதம், இடது சகாசவாதம் என்பனவைகளையும் கார்த்திகேயன் விவாதிப்பார். சோசலிச நாடுகளின் பின்னடைவுகள், சமூக வளர்ச்சியின் அசைவுகள், வரலாறுகள், பல்வேறு இயக்கங்கள் கொள்கைகள், பிளவுகள், சாதி, மதம், தேசிய இனம், பெண் அடிமைத்தனம், பருவநிலை மாற்றம், சூழலியல், இயற்கை அழிவுகள் என்று அனைத்தும் கார்த்திகேயனின் நீண்ட மேசை நாற்காலிகளில் விரித்து வைக்கப்பட்டு இருக்கும்! அவரவருக்கு விருப்பமானதை அவரவர் தேர்ந்தெடுத்து அந்த மேசையின் மேல் வைத்து விவாதிக்கலாம்!

விவாதங்கள் சில நேரங்களில் சிறு சச்சரவுகளில் முடிந்துள்ளது. ஆனால் அதை எப்படி சமாளிப்பது என்பது அவருக்குத் தெரிந்து இருந்ததால் பல்வேறு கட்சிகள், குழுக்கள், தனிநபர்களுக்கு அந்த மேசையில் இடம் இருந்தன. நட்புகள், தோழமைகள் புடைசூழ எப்பொழுதும் கலகலப்புடன் இருப்பார். அப்பொழுதும், இப்பொழுதும், எப்பொழுதும் கார்த்திகேயன் இப்படிதான் இருக்கிறார்.

கார்த்திகேயனுக்கு வயதாகி விட்டது. அவருடைய நினைவுகளும் செயல்ஆற்றல்களும் வயதாக ஏறும் பொழுது மங்கிக் கொண்டு வருவது இயல்பான ஒன்றுதான்! அவர் எழுதாத, பேசாத, மேசையின் மீது வைக்காத ஓரே ஒரு பிரச்சனை உண்டு. அது அவரைப் பொறுத்த வரைக்கும் அவரை உறுத்திக் கொண்டிருக்கும், துரத்திக் கொண்டிருக்கும் பெரும் வலி! ஒவ்வொரு முறை எழுத நினைத்து அது இடையில் நிறுத்தப்பட்டது. அது ஏன் என்று கார்த்திகேயனுக்குப் புரியவில்லை.

 அந்த எழுதாத பிரச்சனை என்னவென்றால் அம்மாவின் பிறப்புறுப்பு, கருப்பை நோய்களின் வலி!

 தலையில், தோளில், இடுப்பில், காலில் இருந்து மனிதர்கள் பிறக்கிறார்கள் என்று மனிதர்கள் கற்றுக் கொடுக்கும் பாரம்பரிய பெருமை கொண்ட மரபு பெண்களின் யோனியில் இருந்து தான் குழந்தைகள் பிறக்கும் என்பதை சொல்லி புரிய வைப்பது கிடையாது. தாயின், பெண்ணின் யோனியை பாவத்தின் பிறப்பிடமாக தூய்மையற்றதாக கார்த்திகேயனின் அம்மாவுக்கு கற்பித்து உள்ளது. ஒட்டைகளும், அழுக்குகளும், பூரான்களும், பல்லிகளும், கொசுக்களும், தேள்களும் பதுக்கும் யரவாணங்களும், பொந்துகளும், இத்துப் போன பழைய கூரைகளும், இருண்ட மாட்டுத் தொழுவங்களும் மனிதர்கள் மறு உற்பத்திக்கான யோனிகள் தூய்மைக்கான துணிகள் வைக்கும் இடமாக பார்ப்பனீய பாரதப் பண்பாடு கற்பித்து உள்ளது. அத்தகைய தூமை கந்தைக்குப் பலியான பலருள் கார்த்தியின் அம்மாவும் ஒருவர்!

அவரின் புரியாத வயதில் அம்மாவின் கருப்பை நோய் வலிகளை அம்மா தன் குழந்தைகளிடம் சொல்லத் துணிவில்லாத காலத்தின் வலிகளை அம்மா அருகில் இருந்து கேட்டான். உதாரி அப்பாவையும் உழைக்கும் அம்மாவையும் பார்க்கும் பாக்கியம் அவனுக்கு இருந்தது.

 நோயுடன் மல்லு கட்டிய அம்மாவை அவன் பள்ளிப் பருவ இறுதி ஆண்டில் அரசு மருத்துவமனை வா வா என்று இழுத்துச் சென்றது. அம்மா திரும்பி வரவேயில்லை. கடைசியாக குட்டி கார்த்திகேயன் அம்மாவைப் பார்க்க ஆபரேஷன் நடப்பதற்கு சில நாட்கள் முன்பு சென்றிருந்தான். அவள் சிரித்துக் கொண்டே அவனுக்கு அன்று விடை கொடுத்தாள். வெளிறிய முழு நிலவு கீழ்வானில் மறையும் பிரகாசத்தை அவன் பார்த்தான். சுண்டி இழுக்கும் அந்த வலியுடன் இணைந்த சிரிப்புதான் இன்றுவரை அம்மாவின் நினைவாக கார்த்திகேயனுக்குள் புதைந்து கிடக்கிறது.

மருத்துவமனையில் இருந்து வீட்டிற்குக் கொண்டு செல்ல சிறிய மூட்டைத் துணியை பையில் சுருட்டி அவனிடம் கொடுத்தார். அவருக்குத் தனியாக ஒரு ஒத்த ரூபாய் நோட்டையும் கொடுத்தார். கார்த்திகேயன் தன் உறவினர்களுடன் சேர்ந்து வீட்டுக்குத் திரும்பினான்.

மிகச் சாதாரணமாக அந்த கருப்பை நோய்க்கான அறுவை சிகிச்சையின் போது, ஜன்னி கண்டு இறந்துவிட்டதாக சொல்லப்பட்டது. அம்மாவின் வெற்று உடல் தான் வீடு வந்து சேர்ந்தது. ஒப்பாரி வைத்து அழுத கூட்டத்திற்கு மத்தியில் வலியில் துடிக்காத கொள்ளைப் பேரழகுடன் அம்மா சிரித்தவாறு படுத்திருந்தாள்.

 சாவுக் களை அம்மாவின் முகத்தில் ஏன் ஜொலித்தது என்று கார்த்திகேயனுக்கு அன்று புரியவில்லை. காலமும் கல்வியும் தோழமையும் அதை அவனுக்குப் புரிய வைத்தது!

அம்மாவின் வலிகளுக்கான, பிரச்சனைகளுக்கான சமூக சூழலை கார்த்திகேயன் புரிந்து கொள்ள அம்மாதான் காரணமாக இருந்தார். கார்த்திகேயன் வாழ்வதற்கான அர்த்தம் என்பது அம்மாவின் இறப்பு ஏன் இந்த இளம் வயதில் நிகழ்ந்தது, சாவில் எப்படி பேரழகியாக அம்மா ஒளிந்தார் என்பதைத் தேடுவதில் இருந்துதான் தொடங்கியது.

அதன் பிறகு தான் அனைத்துப் பிரச்சனைகளையும் புரிந்து கொள்ள ஆரம்பித்தார். மனித உயிரி தழைத்தோங்வதற்காக உருவாக்கப்பட்ட பெண்ணின் மாதவிடாய் பிரச்சனையைத் தான் இந்த சமூகம் எப்படி மிகக் கேவலமாக இழிவாக சித்தரித்துக் கொண்டிருக்கிறது.

பாரம்பரியம், பழக்கவழக்கம் எனும் பெயரில் இந்த சமூகத்தின் தத்துவங்கள் பெண்ணை அடிமையாக, பிள்ளை பெறும் இயந்திரமாக மாற்றியதுடன், மனிதர்களின் பிறப்பு இறப்பு பற்றி தவறான தகவல்களை அறிவியலுக்குப் புறம்பான செய்திகளை மனித மனங்களில் ஆழமாகப் புதைத்து இருக்கின்றதை உணர முடிந்தது. தூமை கந்தையைவிட நாற்றமடிக்கும் இந்த தத்துவங்களுக்கு பலியானவர்களில் ஒருவர் தான் கார்த்திகேயனின் அம்மா! இந்தத் தத்துவங்களை புனித தரவுகளாக மெருகேற்றி பாரதப் பண்பாடு என்று போலி பெருமை தேச வெறியைப் பரப்பி, அதைப் போற்றிப் பாதுகாக்க சுயநலக் கும்பல்கள் இன்றும் இருக்கத்தானே செய்கிறது.

தன்னுடைய அம்மாவைப் போல் பல பேர் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்ற வைராக்கியம் தான் கார்த்திகேயனை கம்யூனிசக் கோட்பாட்டிற்குள் கொண்டு சென்று விட்டது. தன் அம்மாவுக்கு ஏற்பட்ட இந்த கதி யாருக்கும் எந்த பெண்ணுக்கும் ஏற்பட கூடாது என்று அவர் நினைத்தது சரிதானே?

இடது சாரி இயக்கத்தில் ஈர்க்கப்பட்ட கார்த்திகேயன் புரட்சி இயந்திரமாக உருமாற்றம் அடைந்த பின்னணிக் கதை இதுதான்!

அம்மாவின் வலியானது மின்சாரம் போல் நரம்புகளை சேர்த்து இழுக்கும் வலி. வலி மட்டுமே கார்த்திகேயனை சமூக இயக்கத்தில் மீண்டும் மீண்டும் முடுக்கி விட்டு இயக்கியது. இயந்திரத்தை இயக்கும் முடுக்கு விசையாக அம்மாவின் கருப்பை நோயின் வலி இருந்தது என்பது உண்மை. மக்கள் போராட்டத்தில் கார்த்திகேயனை கரைத்துக் கொள்ள அது தூண்டியது.

போராட்டத்தின் ஏற்ற இறக்கங்கள் புரட்சி இயக்கத்தை மட்டுமல்ல கார்த்திகேயனையையும் பாதித்தது. தொய்வுகள் தொடர்கதைகளாக இருந்தது. ஆனாலும் கார்த்திகேயன் அப்படியெல்லாம் முழு தொய்வு அடையவிடாமல் தடுத்து ஆட்கொண்டிருந்தார் அம்மா!.

3

சட்டென்று மாதவிடாயில் சுருண்டு இருந்த அம்மாவின் வலி 70 வயதான கார்த்திகேயனுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி எழச் செய்தது!

 அம்மாவின் நினைவுகள் 70 வயதிலும் தொந்தரவு செய்தன. வயது முதிர்ச்சியால் தள்ளாட்டத்துடன் எழுந்தார். மெதுவாக நடந்து சென்று அம்மா படுத்துக் கிடந்த வராண்டாவை கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தார். ஐந்து வயதில் அண்ணன் தம்பிகள் பதினைந்து வயதில் பங்காளிகள் என்ற வாழ்க்கை யதார்த்தத்திற்கு இவர் குடும்பமும் தப்பவில்லை. உலக நடப்பு போல் சொத்து பாகப் பிரிவினையின் பொழுது அவர் அம்மா வாழ்ந்த பழைய வீட்டை சில இழப்புகள், விட்டுக் கொடுத்தலின் பின் அவரது பாகமாக எடுத்துக் கொண்டார். அதைப் பராமரித்தும் வந்தார். எத்தனை வயதானாலும் அம்மாவுக்கு கார்த்திகேயன் குழந்தைதானே! நினைவுகள் அலைக்கழிக்க திரும்பினார்.

அம்மாவின் புடவைகள் பாதுகாப்பாய் இருக்கும் பழைய டிரங்க் பெட்டியை பழைய கட்டிலின் அடியில் இருந்து இழுத்தார்.

ஒவ்வொரு ஆண்டும் அம்மா நினைவு நாளில் அதிலிருந்து புடவைகள் ஒன்றை எடுத்து வழிபடுவது அவர் குடும்ப வழக்கமாக இந்த 55 ஆண்டுகளில் இருந்தது. தம்பி, தங்கை குடும்பங்கள், நெருங்கிய நண்பர்கள் சிலரின் குடும்பங்கள் தவறாமல் கூடுவார்கள்.

பெட்டியைத் திறந்து அம்மாவின் புடவையைத் தொடும் போது அம்மாவின் வாசனை இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னும் இன்னும் அதிலிருந்து வருவதை அவரால் உணர முடிந்தது.

வலி நிறைந்த மாதவிடாய் இரத்தக் கவுச்சியுடன் கூடிய அம்மாவின் வாசனை அது! குழந்தையின் ஆழ்மன வலியும் அதில் புதைந்து இருந்தது.

பரபரப்புடன் அம்மாவின் ஒரு ரூபாய் தாளை அதில் தேடினார். மூன்று நான்கு புடவைகளை எடுத்துப் பார்த்தார். உணர்ச்சிப் பிழம்பாய் பரபரப்புடன் பிரித்து உதறிவிட்டார்.

பழைய ஒரு ரூபாய் தாள் பறந்து கீழே விழுந்தது. கண்ணாடியை சரி செய்து அதைக் குனிந்து கார்த்திகேயன் எடுத்தார் அத்துடன் ஏதோ ஒரு புடவையில் எங்கோ ஒரு மடிப்பில் தனக்கு அவசரத்திற்கு வேண்டும் என்ற முன் எச்சரிக்கையில் அம்மா பத்திரப்படுத்தி வைத்திருந்த பழைய தூமை துணியும் விழுந்திருந்தது.

சருகாகிப் போன அந்த பழைய தூமை கந்தையில் இன்னும் காய்ந்த ரத்தக்கறை திட்டுகள் பளிச்சென்று தெரிந்தன. பாரத தேசத்தின் வரைபடமாக அந்தக் கறை படிந்து இருந்தது.

இரத்தக் கறை..

எத்தனை விதமான இரத்தக் கறைகள்.. தங்கை, மனைவி, மகள்கள், மருமகள், பேத்திகள், ஏன் பாரத தேவி, அகண்ட பாரத மாதா கூட இதில் தப்பிக்க முடியாது!

இதோடு தொடர்புடைய வேறு சம்பவம் நினைவுகளில் தனியாக துருத்திக் கொண்டு அவரை இழுத்துச் சென்றது!

20 ஆண்டுகளுக்கு முன் அரசு மருத்துவமனை கம்பவுண்டர் பணியின் போது நடந்த சம்பவம்!

“பளார்”

கன்னத்தில் அறைந்த சத்தம் பலருக்கு கேட்டு இருக்கும். அந்த நீண்ட மருத்துவமனை வார்டு முழுவதையும் ஒரு கணம் நிறுத்தி திரும்பிப் பார்க்க வைத்தது. அறை வாங்கிய நண்பன் அதிர்ச்சியில் உறைந்து கல்லாகிப் போனான். கார்த்திகேயன் மனம் அதை விட கல்லாகி, இறுகி, பாறையாய் கனமாகிக் கொண்டிருந்தது.

அனைவரும் மவுனமாக இருந்தனர். யார் என்ன செய்ய முடியும்? யாருக்கு என்ன நடந்தது என்று தெரியாது, “பளார்.. பளார்” என்ற சத்தத்தைத் தவிர…

உறைந்த நண்பன் உடைந்து போவதைத் தவிர வேறு கதி கிடையாது

கார்த்திகேயன் அதற்கு மேல் அங்கிருந்தால் இன்னும் அவரால் தன்னை கட்டுப்படுத்த இயலாது என்பதால் நழுவி கழிவறைக்குச் சென்று விட்டார். ஆற்றாமையும், கண்ணீரும் வெடித்து அவர் கன்னத்தில் வழிந்து ஓடியது.

இன்னும் அவனை நாலு இறுக்கு வைக்க வேண்டும் என்று கைகள் பரபரத்தது. உடம்பு பதறியது. இரும்பாக இறுகித் துடித்தது. நடுத்தர வர்க்க கேடு கெட்ட புத்தி, கோபத்தைக் கைவிட கார்த்திகேயன் அறிவுடன் மன்றாடியது. பிளவுண்ட மனம் இரண்டாய் விரிந்து சண்டையிட்டது. அடக்கப்பட்ட கோபம் எரிச்சல் உடல் முழுவதும் தீயாய்ப் பற்றி எரிந்தது. வலி நடுக்கமாக பரவி உடல் பதறி வியர்த்துக் கொட்டியது.

படார் படார் என்று குளிர்ந்த நீரை முகத்தில் வாரி வாரி இறைத்தார்.. இல்லை. இல்லை தன்னைத் தானே அறைந்து கொண்டு இருந்தார். கண்கள் வலிக்கும் அளிக்கும் அளவுக்கு அப்படி செய்தார். கார்த்திகேயன் கண்கள் இரத்தச் சிவப்பாகி கோபத்தில் கொப்பளித்துக் கிடந்தது.

மீண்டும் அமர்ந்து பணிகளில் மூழ்கின்ற மாதிரி நடித்தார். அவர் நண்பனால் நடிக்க முடியவில்லை. விதிர்த்துப் போய் அங்கிருந்து ஓடியே போய் விட்டான். ஒன்று மட்டும் அவருக்குப் புரிந்தது. நட்பின் சுதந்திரம் எல்லை மீறி விட்டது. அவனிடம் உறவு பாராட்டிய கார்த்திகேயன் இல்லை இது!

பட்டுக்கோட்டை பாடல்களை மெல்லிய குரலில் கார்த்திகேயனுக்கு மட்டும் கேட்கும் குரலில் பாடும் அந்த நண்பனிடம் இயல்பாக மலர்ந்த நட்பு அது.

புரட்சி கொந்தளிப்பு பாதையில் இருந்து சிறிது மட்டும் தள்ளி இருந்ததால், காதல் பாடல்களின் கவனிப்பும், ஈர்ப்பும் நண்பனின் நட்பைத் தொடர வைத்தது. பட்டுக்கோட்டை, கண்ணதாசன், வாலி, எம்.எஸ்.வி., இளையராஜா அவர்களின் மெல்லிய இசை யாருக்குதான் பிடிக்காது.

ஓய்வு நேரத்தில், தேநீர் அருந்தும் பொழுது, நண்பர்கள் பார்ட்டிகளின் பொழுது நண்பன் பெரும்பாலும் பாடும் காதல் பாடல்கள், ஊறுகாய் போல் பாடும் சில பொதுவுடமைப் பாடல்கள் நண்பனிடம் ஈர்த்து பசையாக அவனிடம் ஒட்டச் செய்து விட்டது.

ஆனால் நண்பனுடனான உரையாடல்கள் வேறு ரகத்தைச் சேர்ந்தது. உரையாடல்கள் இப்படி அப்படி தொடங்கினாலும், கடைசியில் ஆண்களின் காமவெறிப் பேச்சுகள், ஆணாதிக்க புறச்சொல்லல்கள் நண்பனிடம் அடிக்கடி வெளிப்படும்.

 ஆரம்பத்தில் ஈர்த்தாலும் அதற்கான எல்லைகளை அது மீறும் பொழுது கார்த்திகேயன் மவுனமாகி இறுகிப் போய் விடுவார். இனிய குரலும், நட்பும் விரிசல் விழும் என்று அவர் நினைத்தார். இந்த மவுனத்தை சம்மதம் என்று தவறுதலாக எடுத்துக் கொண்டு நண்பன் அடிக்கடி வரம்புகளை மீறுவான்.

வெள்ளை ஆடை தேவதைகளான நடுத்தர வயதைக் கடந்த செவிலியர் ஒருவரின் யார் கண்ணுக்கும் தெரியாத சிறிய இரத்தக் கறை நண்பன் கண்ணுக்கு மட்டும் எப்படி தெரிந்தது என்று தெரியவில்லை.

ஆணாதிக்க வக்கிரத்தின் உச்சத்திற்கு சர்வ சாதாரணமாக நண்பன் சென்றான். பெண்கள் மாதவிடாய் நிற்கும் காலத்தினைப் பற்றிய வக்கிரத்தின் வெளிப்பாடாய் கருப்பை வெளியே தள்ளுவது, கருப்பை வாய் புற்றுநோயை வர்ணிக்கும் இழிசொல்.

அதற்கு எதிர்வினை தான்

பளார்…

பளார்…

பளார்…

வயதான காலத்தில் இந்த நினைவுகளின் சோர்வு மேலிட படுக்கையில் அமர்ந்த கார்த்திகேயனை லேப்டாப் வா வா என்று அழைத்தது. திறந்த பொழுது இணைய தளங்களில் புனிதம், புண்ணாக்கு, பாரத தாய், நாப்கின் ஜிஎஸ்டி வரி விவாதங்கள் தொடர்ந்து கொண்டிருந்தன.

கார்த்திகேயன் இணையத்தில் சில வரிகள் தட்டச்சு செய்ய முயன்றார். கைகள் நடுங்கின. அம்மாவின் மாதவிடாய், தூமை கந்தை, கருப்பை வாய் புற்றுவலி, வேதனை, சுண்டி ஜிவ்வென உடல் நரம்புகள் முழுவதும் பரவும் மின்சாரம் அனைத்தும் கார்த்திகேயனில் உறைந்து கிடந்த புரட்சி இயந்திரம் உயிர்த்தெழுந்தது.

பு.இ தட்டச்சு செய்தார்…

“வாய்ப்பு இருந்தால் அந்த நண்பனை.. அவனில் கரைந்து கொண்டிருக்கும் புரட்சி இயந்திரத்தை…

பளார்…

பளார்…

பளார்…

பளார்…

நாலு இறுக்கு இறுங்களேன்!!”

உடனே பதிலாக..

“புரட்சி இயந்திரமா அது என்ன தோழர் இப்படில்லாம் எழுதுகிறீர்கள்” என்று சிலர் பதிவுகள் போட..

வேறுவழியின்றி இக்கதை சுருக்கத்தை கார்த்திகேயன் எழுதினார்.

- கி.நடராசன்

Pin It