பற்கள் முளைக்கத் தொடங்கும் குழந்தைகள்

முழங்கால்களை மடக்கி

உணவு மேசையின் கீழ் சுருண்டு கிடக்கிறார்கள்.

மனிதனாக இருப்பதன் அர்த்தங்கள் குறித்து குழந்தைகளுக்கு

இங்குதான் போதிக்கப்படுகின்றன.

நாம் ஆண்களையும்,

பெண்களையும்

இங்குதான் உருவாக்குகிறோம்.

இந்த மேஜையில்

நாம் கிசுகிசுக்களை பேசுகிறோம், 

எதிரிகளையும், காதலர்களின் ஆன்மாக்களையும் 

நினைவு கூறுகிறோம்.

************

ஜாய் ஹார்ஜோ கவிதையிலிருந்து - 1951

நம்பவும் முடியவில்லை.... நம்பாமலும் இருக்க முடியவில்லை. குழப்பங்கள்தான் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன.

 இப்பொழுதெல்லாம் அவனை என்னால் புரிந்து கொள்ள முடியாமல் போகிறது… அது ஏன்? அவன் இப்படி எதற்காக மாறி விட்டான்? மாற்றம் என்ற ஒன்றைத் தவிர எல்லாம் மாறும் என்பதை நிரூபிக்கிறானா?

 அவன் துரோகியாக மாறுவான் என்று கனவில் கூட நினைக்கவில்லை. அவன் இப்படி மாறி விட்டானா… என்ன?... புரியவில்லை. அவன் எவ்வாறு இப்படி மாறினான் என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அதிர்ச்சியைத் தருகிறது!!

 அவனுக்கும் எனக்குமான உறவு இப்படி முறிந்து போகும்… வேறு வகையில் சொன்னால் உலர்ந்து உதிர்ந்து போய் விடும் என்று யாரும் நினைத்துக் கூட பார்த்து இருக்க மாட்டார்கள். அரசு உலர்ந்து உதிர்ந்து போகும் என்ற கோட்பாட்டை பலமான சர்ச்சைக்கும், விவாதங்களுக்கும் இடையில் உண்மை என்று நிறுவியவர்கள் நாங்கள் இருவரும்! இப்பொழுது…..!!

 ஆனால் ஒன்றை ஒர் அடிப்படையான விசயத்தைக் கோட்பாட்டாக வாதிட்டு வாதிட்டு நம்ப வைப்பது, தக்க வைப்பது வேறு.. அதை நடைமுறையுடன் இணைந்து மக்கள் திரள் உடன் சேர்ந்து முரண்பாடுகளை களைந்து வாழ்வது, போராட்டங்களை நடத்துவது என்பது பிறிதொன்றாக இருக்கின்றன.

 அவனுக்கும் எனக்குமான உறவு இயல்பாக சாதாரணமாகவே தொடங்கியது. பின்பு ஆத்மார்த்தமான உறவாக.. நட்பாக மலர்ந்து மணம் கமழ்ந்தது.. இன்றோ முடை நாற்றம் எடுக்கும் அளவிற்கு கீழே சரிந்து அதல பாதாளத்தை நோக்கி பயணம் செய்து கொண்டிருக்கிறது.

 இது ஏதோ சமூகத்தின் பிரச்சினை என்று நீங்கள் தப்பாக புரிந்து கொள்ளக் கூடாது. எங்கள் கதையை கூறினால்தான் உங்களுக்கு அதைப் புரிந்து கொள்ள முடியும்.

 அது எங்களுக்குள் உழலும் சிக்கல் என்பதை விளங்கிக் கொள்ள இயலும். அப்பொழுது… ஒருவேளை.. சில சமயங்களில் இதற்கான பதிலை அல்லது தீர்வை நீங்கள் எங்களுக்குத் தர முடியும்.

உங்கள் புரிதலுக்கு எங்கள் நட்பை இரண்டு கால கட்டமாகப் பிரித்து விரித்து எழுதுகிறேன்.

1.தெய்வீக நட்பாக புனிதத்துவம் அடைந்த கால கட்டம்

  1. அந்த புனிதங்களை கட்டுடைத்து சமூக யதார்த்தங்கள் தீச்சுவாலைக்குள் இன்பம் துய்த்த கால கட்டம்.

அவனுக்கும் எனக்குமான உறவு என்பது இயற்கையான ஒன்றாகும். ஒரு சில ஆண்டுகள் வயது வேறுபாடு மட்டும் அவனுக்கும் எனக்கும் இருந்தது.

 எங்கள் தெருவின் எதிர்வாடையில் அவன் வீடும் குடும்பமும் இருந்தது. அதனால் நாங்கள் இருவரும் ஒன்று கலந்து பழகுதல் தவிர்க்கவியலாமல் போயிற்று. பார்க்காமல் வடக்கே இருந்து உயிர் துறக்கும் நட்பு இலக்கியத்திற்கும்.. பார்க்காமல் வரும் புனித காதல் சினிமாவிற்கு வேண்டுமானால் ஒத்து வரும். தூலமான வாழ்க்கை நடைமுறைக்கு அவை ஒருபோதும் ஒத்து வராது என்றுதான் நினைக்கிறேன்.

 என் நினைவுக்கு எட்டிய வரையில் எதிர் வீட்டு திண்ணையே கதியாக இருக்கும் சீயாத்தம்மா குட்டி பையனான எனக்குள் உறைந்து கிடந்த கதைசொல்லி உசுப்பி எழுப்பியதோடு அதற்குப் பார்ட்னராகவும் தொடர்ந்தார். மருமகளின் உதாசீனத்தால் ஆயா என்னை அடிக்கடி அழைத்து தெரு குழாயில் இருந்து தண்ணீர் பிடித்து தர சொல்வார்… பெரிய அந்த அலுமினியம் சொம்பில் வாய் கொப்பளித்து குடித்து விட்டு வாஞ்சையுடன் தலையை தடவி தனது அழகிய சுருக்கங்கள் அடர்ந்த அனுபவ கோடுகள் பதிந்த நெற்றியை எனது நெற்றியுடன் சேர்த்து

“டிய்..ட்டீய் டீய்..” 

“டிய்..ட்டீய் டீய்..” 

“டிய்..ட்டீய் டீய்..” 

மூன்று முறைகள் இடிப்பார். எனது பிஞ்சு நெற்றி வலித்தாலும் அவரின் ஆசி என்னை பரவசப்படுத்தும்… நான் அவரின் அணைப்பில் சிறிது வெட்கத்துடன் திரும்பும்பொழுது எனது நண்பனுக்கு அதே போல் அந்த திண்ணையில் இருக்கும் அய்க்கெண்ணி ஆயா..

 “டிய்..ட்டீய் டீய்..”

“டிய்..ட்டீய் டீய்..” 

“டிய்..ட்டீய் டீய்..”

கொடுப்பாள். அவன் அந்த பாட்டியின் அலுமினிய சொம்பில் நீர் நிரப்பித் தர தெருக்குழாயுக்கு ஓடுவான்.

அப்பொழுதுதான் எங்களுக்கு இடையில் உறவு பாலம் மின்னல் கம்பி போல் பரவி இருக்கும் என்று தோன்றுகிறது.

 பம்பரத்தின் கயிற்றை ஏறுவரிசையில் நான் சுற்றி சுற்றி ஓங்கி செல்வம் பையனின் பம்பரம் மீது குறிவைத்து ஓங்கி குத்த கயிற்றின் விசையை இழுப்பேன். அதற்குள் அவன் பம்பரத்தின் கூர் முனை செல்வத்தின் பம்பரத்தை இரண்டாக குத்தி பிளந்திருக்கும். ஆச்சரியத்துடன் பார்க்கும் நான் நோக்கும் பொழுது அவனும் நோக்கினான். அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினால் கதை போல் இல்லை அதனினும் ஆழமாக வேர்கள் கிளைத்து வளர்ந்தது இது..!! 

 இப்படியான சின்ன சின்ன கணங்கள் தான் அடுத்த கட்டத்திற்கு எங்கள் உறவை வளர்த்து கொண்டு சென்றது.

 அடர்ந்த வனமாக செம்பரம்பாக்கம் ஏரி கரை ஓரம் பகுதிகள் செழித்த காடாக இருந்த அந்த ஒரு காலம் அது. எந்நேரமும் பறவைகளின் இனிய கீதங்களும் அணில் பிள்ளைகளின் நுணுக்கமான கீச்சல்களும், சில்வண்டுகளின் ரீங்காரங்களும் ஒணான்கள் அதை தலையாட்டி இரசிப்பதுமாக ஏரி வனம் இசை காடாய் இருந்த காலம் அது.

 விரிந்த கிளைகளைப் பரப்பி வான் மூட்டக் வளர்ந்த காட்டுவா மரத்தின் பொந்துகளில் எட்டி எட்டி பார்த்த சிவப்பு கழுத்து வளைய பச்சைகிளிகளின் குஞ்சுகள் எனது கண்களை உறுத்தியது. எப்போதும் எனது பெயரை அந்த குஞ்சுகள் கிள்ளை மொழியில் பேச வைத்துவிட எனது மனம் அலைபாய்ந்தது.

 அந்த குஞ்சுகளை அதன் தாயிடம் இருந்து நான் கடத்தி வந்த போது அது கீக் ..கீகீ….கீ.ய் என்று வீட்டில் கூப்பாடு போட்டது. வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் முறைத்த பொழுது அவன் தான் ஆறுதல் தந்தான். உதவிகளும் செய்தான். ஆனால் இரண்டு நாட்கள்தான் எங்கள் மகிழ்ச்சி நீடித்தது. இரண்டு மூன்று சில கோவைப்பழங்களை அவை சாப்பிட்டு இருக்கும். அதற்குள் அடிக்கடி எங்கள் வீட்டுக்கு விருந்தாளியாக வரும் பூனையாருக்கு ஒருநாள் இரவு அந்த குட்டி கிளிகள் சத்தமில்லாமல் உணவாகி போனது விவரிக்கப்பட வேண்டிய வேறு ஒரு சிறிய கதை. 

 அடுத்த நாட்கள் எதையோ பறிகொடுத்தது போன்று நாங்கள் பெரும் சோகத்தில் திரிந்தோம். காலை சிற்றுண்டியும், மதியம் சாப்பாடு சாப்பிடாமல் உண்ணாவிரதம் இருந்து பூனைக்கு இரையான கிளிகளுக்கு அஞ்சலி செலுத்தினோம். இருப்பினும், இயற்கையின் சமன்பாட்டை புரிந்து கொள்ள அது உதவியது. தேடி பிடித்து படித்து விட்டோம். உயிர்களின் உணவு சங்கிலி தொடர்ச்சியை புரிந்து கொள்ள இது உதவியது இயற்கை மீதான எங்கள் காதலை இன்னும் அதிகப்படுத்தி இன்னும் எங்களை நெருக்கமாக்கிய நிகழ்வு அது.

நாளோரு மேனியும் பொழுது தோன்றுமாக.. ஒரே தட்டில் சாப்பிடுவது, பாயில் படுப்பது ஒன்றாய் திரிவது என்று எங்கள் நட்பு வளர்ந்தது.

 கல்லூரியில் சேர்ந்த பொழுது ஒரே பெண்ணை இருவரும் லுக் விடுவதில் ஆரம்பித்து… காதலிக்கும் வரை எங்கள் தெய்வீக நட்பு வளர்ந்து பூத்து குலுங்கி மணம் கமழ்ந்து எல்லாரையும் மகிழ்விக்க செய்தது உண்மையான செய்தி.!!.

 இந்த புனிதத்தில் மெல்ல விரிசல்கள் விட்டன. அந்த நாட்களில்தான்.. நான் இலக்கியத்தையும் இயற்கையின் அழகியலுக்குள் மூழ்கி திளைக்க தொடங்கினேன். அவன் சமூக முரண்களுடன், அரசியல் நிகழ்வுகளுடன் உரையாடலை தொடங்கி விட்டு இருந்தான்.

 இந்த அவனது அரசியல் உரையாடல்கள் எங்களுக்குள் உராய்வை விரிசலை ஏற்படுத்தின. சிறிது சிறிதாக அது கொதி நிலைக்கு உயர்ந்து கொண்டு சென்றது.

 வழக்கம் போல நானும் அவனும் ஒன்றாக சென்ற வழியில் ஒரு பிச்சைக்காரர் மறித்தார். ஒரு ரூபாய் நாணயத்தை நான் எடுத்து போட முயன்றேன். நானும் அவனும் கையில் காசு இருக்கையில் இப்படி போடுவது வாடிக்கையான ஒன்றுதான்! ஆனால் அவன் இன்று என்னை தடுத்தான். அத்துடன் இல்லாமல்..அதற்கு பெரிய ..பெரிய கோட்பாட்டு விளக்கங்கள், தத்துவ விசாரணைகள், தமிழ் இலக்கியம்-வரலாறு ஆதரங்களை அள்ளி வீசி பேசிக் கொண்டே இருந்தான். இந்த சின்ன சிறிய விசயத்திற்கு இவ்…வ்வளவு மொக்கை தேவையா என்று நான் நினைக்க ஆரம்பித்தேன். எரிச்சலாய் அவனை முறைத்தேன்.

 சங்க காலத்தில் போர்ச்சூழலில் அரசர்களுக்கிடையில் தூது சென்ற ஒளவை போரில் ஈடுபடாததால் புத்தம் புதிதாக காணப்படும் அரசனின் ஆயுதங்களையும் தொடர்ந்து சண்டைகளில் ஈடுபட்டதால் முனை உடைந்து அலங்கோலமாக துருப்பிடித்த அரசனின் ஆயுதங்களையும் ஒப்பிட்டு தர்க்கம் செய்து விளக்கி சமாதானம் செய்ய முனைந்ததை இதோடு ஒப்பிட்டு அவன் பேசிக்கொண்டு வந்தான். எனக்கு சிலது புரிந்தது மாதிரியும் இருந்தது… பலது புரியாததும் மாதிரி இருந்த பித்து நிலைக்குள் தள்ளப்பட்டேன்.

 வர்க்கம், போராட்டம், விடுதலை, சமத்துவம், பொருள் முதல் வாதம், முரணியல் ..என்று புதிது புதிதாக எதையாவது சொல்லிக் கொண்டிருந்தான். தர்க்கம் செய்து விளக்கி கொண்டிருந்தான். அல்லது ரம்பமாய் அறுத்துக் கொண்டு இருந்தான். சிலர் அவனை கண்டு ஓரங்கட்டுவது நிகழ்ந்தது. மிக சிலர் அவனை பார்த்தும் அந்த பக்கம் திரும்பி நடந்து மறைந்து போயினர்.

 கல்லூரி நண்பர்கள் குழாமுடன் ஒருநாள் இரவு சினிமாவுக்கு சென்று இரவின் மௌனத்தை கலைக்கும் சிரிப்புடன் நாங்கள் திரும்புகையில் ரோந்து போலீஸ் வேன் குறுக்கிட்டு குருட்டு விசாரணை செய்தது. நாங்கள் அந்த கல்லூரி விடுதியை சேர்ந்தவர்கள்… இரவு காட்சி சினிமா பார்த்துவிட்டு செல்கிறோம் என்று சினிமா டிக்கெட்டுகளை அவர்களுக்கு காண்பித்து கொண்டிருந்தோம்.

 ஜீப்பில் இருந்த போதை இன்ஸ்பெக்டர் ஒருமையில் “இங்கே வாடா” என்று எங்கள் நண்பன் ஒருவனை அழைத்தான்.

 “மரியாதையாக பேசுங்க சார்..” என்று அவன் சட்டென பதில் சொல்லி விட்டான்.

 “மரியாதையாக பேசுங்க” என்பது தமிழக காவல்துறை அகராதியில் மிகவும் மரியாதை குறைவான சொல் என்பது அப்போது தெரியவில்லை! அது ஒரு குற்றச்செயல் என்பது அன்று எங்களுக்கு போலிஸ்காரர்கள் விளக்கினர்.

 இரண்டு லட்டிக் கொம்புகளை தமிழக அரசின் சார்பில் மக்கள் வரிப்பணத்திலிருந்து போலிஸ்காரர்கள் அதற்கு செலவு செய்ய வேண்டி இருந்தது. தகராறு..போலீஸ் நிலையம். ..விடுதி காப்பாளர்.. மாணவர் தலைவர் என்ற முறையீடுகளுக்கு அமளிகளுக்கு பிறகும் பெட்டி கேஸ் போட்டு தான் வெளியில் விட்டனர்.

 “மரியாதையாக பேசுங்க” என்பதற்கான போலிஸ் நண்பர்கள் செய்த மரியாதை கதை இது!

 கல்வி முறையின் வன்முறைகள், சமூக சூழலில் அவமதிப்புகள், குடும்ப வறுமை ஆகியவைகளால் சிக்கி உழன்று எங்கள் நண்பன் ஒருவனை இந்த ‘போலிஸ் கவனிப்பை’ யதார்த்தமாக அணுக முடியவில்லை. பெரும் மன உளைச்சல், அவமதிப்புக்குள் உழன்ற அவன் கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்து கொண்டான். அவன் துர்மரணம் எனக்கும், அவனுக்குள்ளும் பெரும் புயலை கிளம்பி விட்டது.

 அதற்கு விடை தேடி அலைந்தோம்! படித்தோம்! விவாதித்தோம்! கல்லூரி கட்டண உயர்வு, பேருந்து கட்டண உயர்வு, குடும்பத்தின் வருமான வீழ்ச்சி, கட்சி அரசியல் பிரசங்கங்கள் இதோடு சேர்ந்து கொண்டது! ஒருங்கிணைந்த புரிதலை நோக்கி மெல்ல நாங்கள் நகர்ந்தோம்! சர்க்கார் எல்லோருக்கும் பொதுவானது என்று சிலர் மேடையில் முழங்கியது வார்த்தை ஜால சூழ்ச்சி என்பதை உணர தொடங்கினோம். மார்க்சியம் தான் மானுட விடுதலைக்கு, சுதந்திரத்திற்கு, மகிழ்ச்சிக்கு வழி என்று இருவரும் இணைந்து முடிவு செய்தோம்!

 இந்த பயணம் மகிழ்ச்சியை, வாழ்வின் நம்பிக்கையை, மனித குலத்தின் மீதான் பற்று உறுதியை, உயிர்ப்பின் புத்துயிர்ப்பை பெருமழையாக எங்கள் மீது பொழிந்து கொண்டிருக்க செய்தது!

 எங்கள் வாழ்வின் வசந்த காலமாய் அது விரிந்து சென்று என்றும் பூத்து குலுங்கி எங்களை வாழ்த்தி கொண்டிருக்கும்!

களங்கள் வேறானாலும், செயல்கள் ஒன்றாக பயணித்த ஆண்டுகள் அவை! சுற்றமும் நட்பும் சமூகமும் நாங்களும் அந்த ஆண்டுகளுக்குள் என்றும் ஊஞ்சல் கட்டி மனதில் மகிழ்ச்சி பாடல்களை இசைக்கும் காலமாக இருந்தன.

 இந்த ஒற்றுமையை விரும்பாத சுயநலக்காரர்கள் பூமியின் வாழத்தான் செய்கிறார்கள். அதிலும் அதிகாரம், ஆட்சி அவர்கள் கையில் இருந்தால் சும்மா இருப்பார்களா?. பேயாட்டம் ஆடி கொண்டிருந்தார்கள்!

 அந்த பேயாட்டத்தில் நாங்களும் சிக்கிக் கொண்டோம்!

 இந்த பேயாட்டத்தை எதிர்கொள்ள அமைப்பும், தலைமையும் மூல யுத்தியை, செயல் யுத்திகளை, நடைமுறை தந்திரங்களை சூழலுக்கு இணைந்தால் போன்ற முரண் இயங்கவியலாய் உயிர்ப்புடன், விழிப்புடன் செயல்பட வேண்டி இருந்தது!

 அதன் அரசியல் விளக்கங்கள், நீள-அகல புரிதல்கள் புரிதல் இன்மைகள், விவாத முறைகள், முட்டுகள், கீறல்கள், உடைசல்கள் அவனுக்கும் எனக்குமான முதல் விரிசலை துவங்கியது! இணை தண்டவாளமாக இருந்த நானும் அவனும் நகரத்தின் வட்டவடிவ சாலைக்குள் திசை மாற்றப்பட்டோம். தூக்கி வீசப்பட்டோம்!! இரு வேறு திசைகளில் மெல்ல மெல்ல ஊர்ந்து, பின் நகர்ந்து பயணங்களை தொடர்ந்தோம்!

இந்த பயணம் சுழல்கள் வட்ட பாதையா, இயல்பான வட்ட பாதையா என்பதை எங்களால் கணிக்க முடியாமல் உழன்று, கிருகிருத்து, பிரம்மை பிடித்தது போல் போய் கொண்டிருந்தேன்!

 -2-

அவனின் செல்போன், “உலகம் ஆயிரம் சொல்லட்டுமே.. உனக்கு நீ தான் நீதிபதி..” என்ற ரிங்டோன் மீண்டும் மீண்டும் இசைத்தது!

அவன் எடுத்தான்! நான் தான் பேசினேன்!!

“எப்படி இருக்கீங்க தோழர்… நல்லா இருங்கேன்… நீங்க”

“வீட்டில் அனைவரும் நலமா! … நலம் தோழர்… உங்க பசங்க..”

இப்படிதான் இயல்பாக எங்கள் உரையாடல் இயல்பாக சில பல ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் தொடங்கியது!

நலம் விசாரிப்புகள், செல்லங்களும் சிறிது நேரம்தான் நீடித்தது!

“நீ ஒரு கம்யூனிச துரோகி … நீ யெல்லாம் இப்படி துரோகியாக மாறுவீங்கன்னு எதிர் பார்க்கல.. தோழர்… “

நான் உணர்ச்சி வசப்பட்டு கத்தி வெளிப்படையாக அவனை குற்றம் சாட்டினேன்! அவன் அதிர்ச்சியில் உறைந்தான்!

“அதெப்படி துரோகி…. யென என்னை சொல்வீங்க..” திக்குத்திணறி அதிர்ச்சி மனநிலையிலும் அவன் பொறுமையாக கேட்டான்.

“நீங்கதான் எனக்கு அரசியலுக்கு வழி காட்டினீர்கள்… மார்க்சியம் கற்று தந்தது நீங்க தான்… இப்ப நீங்க அதற்கு மாறாக பதிவு செய்கீறிங்க.. பேசுரீங்க… இது சந்தர்ப்பவாதா கிடையாதா.. துரோகமில்லையா..”

“இம்ம்…”

“அடக்குமுறைக்கு பயந்து அரசியலை மாத்துரீங்க.. நீங்க துரோகி.. போலீஸ் கையாள்..”

“சந்தர்ப்பவாதமும், அடக்குமுறை மட்டும்தான் அரசியல் திசைகளை மாற்றுமா?” அவன் யோசித்து கொண்டு கேட்டான்

“ஆமாம்..”

“மாற்றம் ஒன்றை மாறாதது… ஆல் ஆர் செஞ்கிங் எக்செட் லா ஆம் செஞ்கிங்.. இதுதான் மார்க்சிய அடிப்படைக் என்று கூட நாம விவாதித்து இருக்கோமே..” என்று மெல்ல புன்னகையுடன் கேட்டான்.

செல்பேசி அந்த புன்னகை ஒலியை கூட கடத்தி விட்டது போல..

“அடிப்படை மாறுமா.. மார்க்சியம் மாறுமா?..” நான் சீறினேன்

“மார்க்சியம் கோட்பாடு மாறாது. ஆனால் அதன் நடைமுறைப் படுத்தும் சூழல், நிலம், மக்கள், அரசியல் வழி … யுத்திகள் 70 ஆண்டுகளாக, 100 ஆண்டுகளாக மாறாம இருக்குமா தோழா!”

“நீ துரோகி… சந்தர்ப்பவாதி … தேர்தல் மாயைக்குள் மக்களை சிக்க வைக்கும் பாராளுமன்ற பன்னி..” நான் கத்தினேன்.

அவன் செல்போன் நான் போட்ட சத்தத்தில் அதிர்ந்து கீழே விழுந்தது.

“வலது சந்தர்ப்பவாதியா.. இடது சந்தர்ப்பவாதியா… வாக்களித்து தேர்ந்தெடுக்கும் முறைகளே கூடாதா… எந்த அரங்கிலும் கூடாதா… சனநாயக முறைகள் எதுவும் மக்களுக்கு நமக்கும் கிடையாதா?”

“அடக்குமுறைக்கு பயந்து வலது சந்தர்ப்பவாதி ஆயிட்ட நீ”

“நம்முடைய பழைய தனிமனித அழித்தொழிப்பை கூட இடது தீவிரவாத போக்கு என்று நாம பேசி இருக்கோமே.”

“பாசிசத்தை எதிர்க்கும் பெயரால் பாசிச கட்சிக்கு எதிராக இன்னொரு ஆளும் கட்சிக்கு கூஜா தூக்கிரீங்க..”

“பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணி அனைத்தும் கூஜாவா போபால்..”

சினிமா ஜோக் பாணியில் அவன் கிண்டல் அடித்து என்னை இன்னும் உசுப்பி எரிச்சல் படச் செய்தது.

“பச்ச துரோகி, ஏகாதிபத்திய கைக்கூலி நீ..” நான் ஆத்திரத்தில் கத்தினேன்!

இந்த விவாதங்கள் முடிவில்லாமல் போய் கொண்டிருந்தன! நான் தொடர்ந்து உணர்ச்சி வசப்பட்டு வார்த்தைகளை அவன் மீது அள்ளி வீசி கொண்டிருந்தேன். ஒரு சந்தர்ப்பத்தில் நான் குடித்து விட்டு பேசிக் கொண்டிருக்கிறேன் என்பதை அவன் புரிந்து கொண்டான். ஆனால் அவன் நிதானமாக அரசியல் உரையாடி, என்னை இயல்பு நிலைக்கு கொண்டு வர முயன்று இருந்தான்!

“நூறாண்டுகளாகியும் நம்ம நாட்டில் புரட்சி நடத்த முடியல்ல… அதற்கான அறிகுறி கூட மின்னல் கீற்று கூட கண்ணுக்கு தெரியல..”

“வசந்ததின் இடிமுழக்கம் பொய்யா”

“அது பொய்யில்லை… அதை நாடு முழுக்க ஏன் விரிந்து பரந்து பரப்ப முடியவில்லை… இடி முழக்கத்தை தொடர்ந்து பெரு மழையை எங்கும் பொழிய வைக்க நமது இயக்கத்தால் ஏன் முடியாமல் போனது நண்பா”

“நீ நம்பிக்கையை சிதறடிப்பவன்… நம்பிக்கை துரோகி. தியாகங்களை மதிக்காதவன்.”

“தியாகங்களும் இரத்த களரிகள் மட்டுமே புரட்சியை கொண்டு வருமா என்ன? புரட்சிகர சமூகங்களாக மாறிய நாடுகள் அனைத்தும் முதலாளிய நாடுகளாக ஒரு நூற்றாண்டில் மாறி விட்டன அதற்கு அடக்குமுறைதான் காரணமா ராசா”

“ஏகாதிபத்திய சதிகள்… சந்தர்ப்பவாதி.. துரோகங்கள்..”

கோட்பாட்டு புரிதலின்மை.. நடைமுறை தவறுகள், கம்யூனிஸ்டுகள் என்றால் தலையில் ஒளிவட்டம் சுழலுவதான கற்பனை திமிர், அதிகார மமதை இதெல்லாம் கிடையாதா கடவுளே”

அவன் சிரித்தான்…. நான் கோபம் கொண்டு சத்தம் போட்டு கத்தினேன்!.

“நீ துரோகி..”

“நீ துரோகி..”

“நீ துரோகி..”

அவன் சட்டென்று தன்னிலைக்கு வந்து செல்பேசியை கவனிக்கிறான். செல்பேசி சார்ஜ் தீர்ந்து எப்பொழுதோ செயலற்று அணைந்து போயிருந்தது கண்டு மருண்டான்!!

இவ்வளவு நேரம் அவன் யாரிடம் பேசிக் கொண்டிருந்தான்? அதைப்பற்றி கவலை படும் நிலையில் அவன் நிலை இல்லை! குடிக்காமலே போதை ஏறிக் கிடந்தது அவனுக்கு..!

அவன் துரோகி.. சரி அப்படி என்றால் நான் யார்?

அவனும் நானும் ஒன்றா? வேறு வேறா? அவனுக்கும் குழப்பமாக இருந்தது! எனக்கும் குழப்பமாக இருந்தது

ஆனால் எனது கேள்விகளும் அவன் பதில்களும் எனது வசைகளும் அவன் எரிச்சல்களும் மட்டும் உண்மை! சத்தியம்!!

அகம், புறம், சமூகம் என்று பல நாட்களுக்கு இதற்கு பிறகு எங்களுக்குள் விசாரிப்புகள் தொடர்ந்து கொண்டிருந்தன

 -3-

சில நாட்கள் கழித்து அவன் பேசினான்! கேள்விகள் கேட்டான்! நான் பதில்களை, வசைகளை அவனுக்கு பரிசளித்தேன்!

சில காலங்களுக்கு பின் நானும் மீண்டும் அவனிடம் அதான் அந்த துரோகியிடம் பேசினேன்!!

நாங்கள் ஒருவரை ஒருவர் அவனும் நானும் மாறி மாறி ஒரு வட்டத்திற்குள் துரத்தி கொண்டிருந்தோம்!!

முடிவில்லாமல்…!!

- கி.நடராசன்

Pin It