“குப்பை பொறுக்கும் சிறுவனுக்கு யார்டா ராஜாவென்று பெயர் வைத்தது!?” என்று அவன் ஒத்த வயது சிறுவர்கள் அவனைக் கேலி செய்தார்கள், அவர்களிடம் “என் பாட்டி தாண்டா!” என்று பெருமையுடன் கத்த வேண்டும் போல் ராஜாவுக்குத் தோன்றியது, எங்கே அப்படிச் சொன்னால் அவன் பாட்டியையும் பரிகசிப்பார்களே என்று அஞ்சி மௌனமாகக் குப்பை மேட்டிலிருக்கும் காகிதங்களை மட்டும் பொறுக்கி அவன் கொண்டு வந்திருந்த கோணிப்பையில் போட்டுக் கொண்டு அவ்விடத்திலிருந்து நகர்ந்தான்.

குப்பை மேட்டிலிருந்து பொறுக்கிய காகிதங்களை அவன் குடியிருக்கும் குடிசையில் கோபுரமாகக் கொட்டினான். அதிலிருந்து ஒவ்வொரு காகிதமாக எடுத்து உற்றும், தடவியும் பார்த்து அதே கோணிப் பைக்குள் வீசி எறிந்தான். இறுதியாக அதிலிருந்து இரண்டு காகிதங்களை மட்டும் தேர்வு செய்து, அவன் அணிந்திருந்த செந்நிற சட்டைப்பையில் வைத்துக் கொண்டான்.

ஒரு மெழுகுவர்த்தி, ஒரே ஒரு தீக்குச்சியிருக்கும் வத்திப் பெட்டியை எடுத்து கையில் வைத்துக் கொண்டு குடிசையிலிருந்து வெளியேறினான். வீதி விளக்கில்லாத அந்த சாலையில் பௌர்ணமி நிலவு ராஜாவுக்குத் துணையாகவும் அவன் கண்களுக்கு வழியாகவும் பின் தொடர்ந்து வந்தது.

மெழுகுவர்த்தியைக் குடிசைக்கு சற்று தொலைவில் அமைந்திருந்த அரசு இடுகாட்டிலிருக்கும் உலகநாயகியின் சமாதியின் மேல் வைத்துப் பற்ற வைத்துவிட்டு சமாதிக்கு இடதுபுறம் சம்மணங்கால் போட்டு அமர்ந்தான்.

அவன் மூச்சை இழுத்து விட்டும், தொண்டையை லேசாகக் கனைத்துக் கொண்டும், சட்டைப் பையில் மடித்து வைத்திருந்த காகிதத்தில் ஒன்றை எடுத்து “பாட்டி, படிக்கிறேன்“ என்று சத்தமாகப் படிக்க ஆரம்பித்தான்.

அந்த காகிதம் அவனைச் சுற்றி உள்ளவர்களால் பித்தன் என்று பரிகசிக்கப்பட்டு, தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்ட பெயர் தெரியாத ஒரு எழுத்தாளன் எழுதிய முடிவு பெறாத கதையின் ஒரு பகுதி.

முடிவு பெறா கதை

ஓர் அடர்ந்த காட்டில் வாழ்கின்ற மிருகங்களுக்கு ஒரு நாள் பேசும் ஆற்றல் கிடைத்தது.

ஆரம்பத்தில் அவர்களுக்குப் புதிதாகக் கிடைத்த சக்தியை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று புரியாமல் குழப்பி, காரணமின்றி அவர்களுக்குள் சண்டை போட்டுக் கொண்டனர்.

ஒரு நாள் புதிதாக முளைத்த பிரச்சனைக்குத் தீர்வு காண, காட்டில் வாழும் மாமிசப் பட்சிகள் மட்டும் சிங்கத்தின் தலைமையில் ஒன்றாகக் கூடின.

முதலில் புலி பேசியது “மாமிசப் பட்சிகள் ஆகிய நாம் நமக்குள் சண்டையிட்டுக் கொள்வதை முதலில் நிறுத்த வேண்டும்.”

சிறுத்தை “ஆம், மாமிசப் பட்சிகள் ஆகிய நமக்கு ஒரு சிறு விரல் ஒடிந்தால் கூட, பல நாள் பட்டினி கிடந்து சாக நேரிடுகிறது. அது மட்டுமா, அதுவரையிலும் நம்மைக் கண்டாலே ஓடி ஒளியும் அந்த தாவரப் பட்சிகள், நம்மை இளக்காரமாகப் பார்ப்பது மட்டுமல்லாமல், நம் முன்னே அனாவசியமாக நெஞ்சை நிமிர்ந்து நடக்கிறார்கள்” என்று அதன் முகத்தைச் சுளித்துக் கொண்டே சொன்னது.

இதற்கு ஒரு தீர்வை உடனே கண்டுபிடித்து ஆக வேண்டும் என்று கூடியிருந்த அனைவரும் கோஷமிட்டார்கள்.

“சரி, ஒரு நல்ல யோசனையை நீங்களே சொல்லுங்கள்“ என்று சிங்கம் கூடியிருந்தவர்களிடம் சொன்னது.

அனைவரும் ஆலோசனையில் ஈடுபட்டார்கள் சிலர் ஆலோசிப்பது போல் அவர்களுக்குள் அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்கள்.

நேரம் பாய்ந்தது. கூடியிருந்தவர்கள் சலிப்புற்றார்கள். சிங்கம் கூட்டத்தைக் கலைக்கலாம் என்று சொல்லப் போகையில் அதுவரையில் அமைதியாகக் காத்திருந்த நரி கூட்டத்துக்குப் பின்புறமாக சுற்றி சிங்கத்தின் காது அருகில் சென்று “சிங்க ராஜா! எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது, சொல்லவா?“

 “எதுவாக இருந்தாலும், அனைவர் முன்னிலையில் சொல்” என்று சிங்கம் கம்பீரமாகப் பதில் அளித்தது

 “நானோ சிறிய நரி. நான் யோசனை சொன்னால் யார் கேட்பார்கள்!?, நீங்களோ மிகப் பெரிய ராஜா. நீங்கள் சொன்னால் அது கட்டளை, அனைவரும் கட்டுப்படுவார்கள்“ என்று நரி நெளிந்து கொண்டே சொன்னது.

சிங்கம் லேசான புன்னகையுடன் “சரி சொல் உன் யோசனை கேட்போம்“

“தாவரப் பட்சிகள் நம்மைக் கண்டு பயந்து, நிம்மதி இழந்து நொடிக்கு நொடி ஒடி ஒளிந்து வாழ்கிறார்கள். நாமோ அவர்களுக்காக நமக்குள் சண்டையிட்டுக் கொண்டு நம்மை நாமே அழித்துக் கொண்டிருக்கிறோம். எல்லாவற்றுக்கும் தீர்வாக, நாம் அவர்களுடன் ஒரு ஒப்பந்தம் போட்டுக் கொண்டால் என்ன!?“

தாவரப் பட்சிகளுடனான ஒப்பந்தம்

மாமிசப் பட்சிகள் தாவரப் பட்சிகளை இனி வேட்டை ஆடுவதில்லை. பிரதிபலனாக தாவரப் பட்சிகள் ஒவ்வொருவரும் அவர்களின் குடுப்பத்திலிருக்கும் ஒருவரை மாமிசப் பட்சிகளுக்கு பலி கொடுத்துவிட வேண்டும். அது மட்டுமல்லாமல் ஒவ்வொரு தாவரப் பட்சியும் அவர்களுடைய ரத்தத்தில் மூன்றில் ஒரு பகுதியை மாதம் தவறாமல் மாமிசப் பட்சிகளுக்கு அவர்களுடைய வாழ்நாள் முழுவதும் கொடுக்க வேண்டும் என்று சிங்கம் கூட்டத்தினரிடம் கூறிக் கொண்டிருக்கையில்,

“அவர்கள் இனத்தை, குடும்பத்தை, அவர்களாகவே முன்வந்து ஜென்மப் பகைவர்கள் ஆகிய நமக்குப் பலி கொடுப்பார்களா!?“ என்று கழுதைப் புலி ஏளனமாக வினவியது.

“தாவர இனத்திலிருந்து ஒரு தலைவனைத் தேர்ந்து எடுத்து, அந்தத் தலைவனுக்கும், அவன் குடும்பத்துக்கும் மட்டும் ஒப்பந்தத்திலிருந்து விதிவிலக்கு அளித்து அந்தத் தலைவனுக்கு அவன் இனத்திலிருக்கும் எந்தப் பெண்களுடன் எப்போது வேண்டுமானாலும் கூடும் உரிமை உண்டு என்று சொன்னோமானால், அவர்களுக்குள் தலைவர் பதவிக்கு அடித்துக் கொண்டு, நம் பங்கைக் கேட்டதற்கு இரட்டிப்பாக அவர்களுக்காகவே நம் காலடியில் வைத்துவிட்டுப் போவார்கள்” என்று நரி குனிந்திருந்த முதுகை நிமிர்த்திச் சொன்னது.

இதைக் கேட்ட மாமிசப் பட்சிகள் சோர்வு களைந்து, சிங்கத்தை அவர்கள் தோள் மீது தூக்கி வைத்துக் கொண்டாடினார்கள். நரி வருகின்ற பங்கில் அதற்கு பத்து சதவீதம் கொடுக்கும் படி கேட்ட போது நரியை முறைத்துப் பார்த்த சிங்கம் தற்போது அந்த கோரிக்கையில் நியாயம் இருப்பதாக எண்ணத் தொடங்கியது.

கதையை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருக்கும் உலகநாயகி பாட்டி நாற்பது வருடங்களுக்கு முன்பு வடக்கிலிருந்து அவளுடைய கணவர் துளசிநாதனுடன் சென்னையிலிருக்கும் காசிமேட்டில் குடிபுகுந்தாள்.

சில வருடங்களுக்குப் பிறகு தம்பதியர்களுக்கு இடது கன்னத்தில் மாங்காய் மச்சத்துடன் ராஜா பிறந்தான். உலகநாயகியின் வயிற்றில் ராஜா வளர்ந்து கொண்டிருக்கும் போது மகனின் எதிர்காலத்துக்கான கனவு இருவரின் மனதிலும் மலரத் தொடங்கியது. அதுவரையில் பழகியிருந்த விளிம்பு நிலை வாழ்க்கை புதைகுழியாக உருமாறி அவர்களை ஆழ்ந்த வேதனையில் ஆழ்த்தியது. நீண்ட சிந்தனைக்குப்பிறகு ராஜாவின் எதிர்காலம் என்ற யாகத்துக்காக இருவரின் சுக துக்கங்களைப் பலி கொடுப்பது என்று முடிவெடுத்தார்கள்.

துளசிநாதன் இரவு பகல் பாராமல் பல நாட்கள் வீட்டிற்கே வராமல் லாரி ஒட்டினார். உலகநாயகி கணவரின் வருமானத்தை சேமித்து வைத்து, அவள் மீனவர் குடியிருப்பில் நடத்தி வரும் இட்லிக் கடைக்கு வருகின்ற தினசரி வாடிக்கையாளர்களுக்குள் தேவைப்படுபவர்களுக்குச் சிறு சிறு தொகையாகக் குறைந்த வட்டிக்குக் கடன் கொடுத்து வந்தாள். சிறுதொகை என்பதாலும், குறைந்த வட்டி என்பதாலும், பெரும்பாலான நேரங்களில் அசலும், வட்டியும் சரியாக வந்து சேர்ந்தது. நாள் அடைவில் வாடிக்கையாளர்களும் பெருகினார்கள்.

சில வருடங்கள் காலச் சக்கரத்துடன் அவர்கள் வாழ்வும் தங்கு தடையின்றி உருண்டு ஓடியது.

அன்று பன்னிரண்டாம் வகுப்பு இறுதித் தேர்வு மதிப்பெண் வரும் நாள். துளசிநாதன் இரண்டு நாள் கண் உறங்காமல் வாகனத்தைச் செலுத்தினால்தான் சரக்கு உரிய நேரத்தில் கப்பலில் ஏற்ற முடியும் என்ற, இரு ஒட்டுநர்களுக்கே சவாலான வேலையை இரண்டு ஒட்டுநகளுக்குக் கொடுக்கும் பணத்தில் பாதியை அவருக்குக் கொடுத்தால் போதும் என்று சரக்கு உரிமையாளரைச் சம்மதிக்க வைத்து லாரியை சரக்குடன் ஒட்டிச் சொன்றியிருந்தார்.

உலகநாயகி ராஜா மருத்துவ படிப்பதற்குத் தேவையான மதிப்பெண்ணைப் பெற வேண்டும் என்று சென்னையிலிருக்கும் காளிகாம்பாள் கோவிலில் கையில் தீச் சட்டியுடன் சுற்றி வந்தாள்.

 அன்று மாலை மகனின் தேர்வு முடிவும், கணவர் ஓட்டிச் சென்ற வாகனம் விபத்துக்குள்ளான செய்தியும் ஒருசேர உலகநாயகியின் செவிக்கு வந்து சேர்ந்தது.

கணவனை இழந்து கலங்கிக் கொண்டிருந்த உலகநாயகிக்கு, விதிமுறைகளை மீறி வாகனத்தை ஒட்டிச் சென்றதால் காப்பீடு பணம் கிடைக்காதது மட்டுமல்லாமல், சரக்குகளுக்கான நஷ்டத்துக்கு அவள் பொறுப்பு ஏற்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் சரக்கு உரிமையாளர் வழக்கு தொடர்ந்தார்.

அந்த நேரத்தில் வாகன ஒட்டிகள் சங்கத்திலிருக்கும் தோழர்கள் சிலர் அவளுக்கு உதவினார்கள். பல மாதங்கள் நடந்த நீதி விசாரணையில் நஷ்டஈடு தர வேண்டியதில்லை, அதே சமயம் காப்பீடு பணமும் பெற முடியாது என்று தீர்ப்பு ஆயிற்று.

ராஜா தேர்வில் மருத்துவப் படிப்பதற்குத் தேவையான மதிப்பெண் பெற்றிருந்தாலும், பல மாதம் நீடித்த வழக்கு விசாரணை உலகநாயகியை உடல் அளவிலும் மன அளவிலும் நலிவுறச் செய்திருந்தது. குடும்ப நிலை, தோழர்கள் மேல் ஏற்பட்ட ஈர்ப்பு, இதெல்லாம் ராஜாவை அரசியல் மற்றும் சமூகவியல் பட்ட படிப்பைத் தேர்ந்தெடுக்க வைத்தது.

சென்னையில் ராஜா பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருந்த அதே நேரத்தில் ஈழத்தில் குண்டுகள் பறந்தன.

உலக பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்கு வித்திட்ட பொதுவுடைமை சித்தாந்தம் ஏனோ தமிழ் இன விடுதலைக்கான போராட்டத்தில் அதன் முகத்தைத் திருப்பிக் கொண்டது.

பணத்துக்கு அடிபணியாத பொதுவுடைமைத் தோழர்கள், பதவி மோகத்துக்கு அடிமையாகி விட்டார்கள் என்று குற்றம் சாட்டி அதுவரையில் பட்டப்படிப்பைப் பகுதி நேரமாகவும், பொதுவுடைமை சித்தாந்தம் பரப்புவதை முழுநேர பணியாகவும் செய்து வந்த ராஜா இயக்கத்தின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து அவனை விடுவித்துக் கொண்டான்.

அவன் விடுதலை அடைந்தது போல் ஈழமும் விடுதலை அடைய வேண்டும் என்று ஒத்த கருத்துடைய தோழர்களை ஒன்றிணைத்து ஈழத்துக்குப் போவது என்று முடிவெடுத்தான்.

உலகநாயகி வாழ்வதற்கான ஒரே காரணமான மகனை அவளுடன் தக்க வைத்துக் கொள்ள அவளால் ஆன அனைத்து முயற்சிகளையும் செய்தாள்.

வயது முறுக்கு ஏறியிருந்த ராஜாவுக்கு வயது முதிர்ந்த தாயின் வேதனை விளங்கவில்லை. குடிசையின் மூலையில் அமர்ந்து அழுது கொண்டிருந்த உலகநாயகியைச் சமாதானப்படுத்த ராஜா நூறு குச்சிகள் அடங்கிய வத்திப் பெட்டியை அவளிடம் தந்து அன்றிலிருந்து ஒரு குச்சியை எடுத்து ஒவ்வொரு பௌர்ணமிக்கும் விளக்கு ஏற்றச் சொன்னான். குச்சிகள் தீருவதற்குள் அவனோ, இல்லை அவன் இருப்பிடத்தைக் குறிப்பிட்ட கடிதம் வரும் என்ற உறுதியை அளித்த பின்னரே அவள் சற்று சாந்தியடைந்து மீனவ நண்பனின் படகில் ஈழத்திற்குத் தோழர்களுடன் பயணமான ராஜாவுக்கு அரை மனதுடன் விடையளித்தாள்.

வழியில் இலங்கை ராணுவத்தால் படகு கடலில் மூழ்கடிக்கப்பட்டது, படகில் போனவர்கள் யாரும் உயிர் பிழைக்கவில்லை என்ற செய்தி மட்டும் கரைக்கு வந்து சேர்ந்தது. அவளின் ஒரே மகன் இறந்த செய்தியை எப்படி அவளிடம் சொல்வது என்று தயங்கிய இயக்கத் தோழர்கள் விஷயத்தை மேலோட்டமாக உலகநாயகியிடம் தெரிவித்தார்கள். செலவுக்கு என்று ராஜா கொடுக்கச் சொன்னதாகக் கூறி சிறிய தொகையை அவளிடம் தந்துவிட்டு குடிசையிலிருந்து தலைகுனிந்தபடி வெளியேறினார்கள்.

உலகநாயகி குடியிருக்கும் குடிசைக்குக் கடித முகவரி இல்லாததால், குடிசைக்குச் சற்று தொலைவிலிருக்கும் ராஜா படித்த பள்ளியின் முகவரிக்கு அவர்களுடைய கடிதங்கள் வருவது வழக்கம்.

 உலகநாயகி பௌர்ணமி தோறும் காலையிலிருந்து மாலை வரை பள்ளி வளாகத்தில் கடிதத்துக்காகக் காத்திருந்துவிட்டு, சோகத்துடன் வீடு திரும்பும் காட்சியைப் பள்ளியிலிருந்து அவர்களுடைய பிள்ளைகளை அழைத்துப் போக வரும் பெற்றோர்கள் தொலைக்காட்சித் தொடர் பார்ப்பது போல் பார்த்தார்கள்.

மாதங்கள் தேய்ந்தது. உலகநாயகியின் உடலும் உள்ளமும் மேலும் தொய்வுற்றது. ஆரம்பத்தில் பெற்றோர்களுக்குச் சோக கதாபாத்திரமாகத் தெரிந்த உலகநாயகியின் உருவம், நாள்பட நாள்பட அவர்கள் பிள்ளைகளைப் பிடித்துப் போக வந்த சூனியக்காரியின் தோற்றமாகக் காட்சியளித்தது.

 பள்ளி நிர்வாகத்திற்குப் புகார் போனது. நிர்வாகம் காவலாளி மேல் புலியாகப் பாய்ந்தது. காவலாளி உலகநாயகியை நாயைத் துரத்துவது போல் துரத்தினான்.

உலகநாயகி பல நாட்கள் அவமானத்தில் குடிசையில் முடங்கி இருந்தாள். நாளடைவில் பிள்ளைப் பாசம் அவள் உள்ளத்தில் ஊறியிருந்த கசப்பைக் கரைத்தது. மனதைக் கல்லாக்கிக் கொண்டு ஒவ்வொரு பௌர்ணமிக்கும் பள்ளிக்கு எதிரில் இருக்கும் ஆலமரத்திற்குப் பின்புறம் மறைந்தவாறு நின்றுகொண்டு தபால்காரனுக்காகக் காத்திருந்தாள்.

தபால்காரன் உலகநாயகியின் கண்ணில் பட்டுவிட்டால் ராஜா எழுதிய கடிதத்தைக் கேட்டு அவனிடம் சண்டை பிடிப்பாள். அவள் மேல் உள்ள ஆத்திரத்தில் தபால்காரன் ராஜா எழுதிய கடிதத்தை குப்பையில் எரிந்திருப்பான் என்ற அய்யத்தில், பள்ளிக்கும் அருகிலிருக்கும் குப்பைமேட்டில் ராஜாவின் கடிதத்தைத் தேடினாள். அப்படி ஒரு நாள் அவன் மகன் எழுதிய கடிதத்தைத் தேடும் போது, கடிதம் படிக்கும் கோலிக் கண்கள் ராஜாவைத் தத்தெடுத்தாள்.

ஒரு வருடம் கழித்துக் கோலிக் கண்கள் ராஜாவை அதே பள்ளியில் சேர்த்தாள். அவளை அழைத்து வருகின்ற, போகின்றபோது குப்பை மேட்டிலிருக்கும் காகிதங்களைப் பொறுக்கிக் கொண்டுவந்து வீதியில் போகிறவர்களிடம் பொறுக்கிய காகிதங்களில் சில காகிதங்களைக் கொடுத்து, படித்துக் காட்டும்படி சொல்லுவாள்.

மரண தேவதை உலகநாயகியை அரவணைக்க அவள் அருகில் அமர்ந்திருப்பதை உணர்ந்தவள் போல் ஒரு நாள் ராஜாவை அருகில் அழைத்து “ஒருவேளை நான் செத்துப் போயிட்டா என் சமாதியிலே வந்து கடிதங்களைப் படித்துக் காட்டிறியா” என்று மெலிந்த அவள் கைகள் நடுங்கியபடி ராஜாவிடம் வத்திப் பெட்டியைக் கொடுத்தாள்.

“எல்லாத்தையும் படிக்க முடியாது. பாட்டி எனக்கு நிறைய வேலையிருக்கும்” என்று எங்கோ பறக்கும் பட்டாம்பூச்சியை ரசித்தவாறு சொன்னான்.

“எல்லாவற்றையும் படிக்க வேண்டாம் ராஜா. குப்பையிலே இருக்கிறதெல்லாம் குப்பையில்லை. சிலவற்றுக்கு உயிரிருக்கு. நாம் நம்பிக்கையோடு அதை அணுகினோம்னா அதனுடைய மனசை நமக்குக் காட்டும்” என்று அவள் மூச்சை இழுத்துக் கொண்டு சொன்னாள்.

அப்படி கவிஞன் எழுதிய உயிருள்ள இரண்டாவது காகிதத் துண்டை எடுத்து ராஜா படிக்க ஆரம்பித்தான்.

கூட்டத்தால் தூக்கப் படுபவர் ஒருவர்
அதே கூட்டத்தில் மிதிபட்டவர்கள் சிலர்,
ஏன் சிலரைத் தூக்கிறோம் என்பதோ,
எதற்காகப் பலரை மிதிக்கிறோம் என்பதோ,
கூட்டத்துக்கு ஒருபோதும் தெரியப் போவதில்லை.

- இரா.நரேந்திரன்

Pin It