போன முறை கலகலப்பாகச் சென்ற இடத்துக்குத் தான் இந்த முறை தனியாக மறைந்து மறைந்து செல்கிறான் ரிதன்.

அவன் செல்வது யாருக்கும் தெரியக் கூடாது. முக்கியமாக வாசனுக்கு தெரிந்து விடவே கூடாது.

வாசன் தோட்டத்துக்குத் தான் செல்கிறான். அவனுக்கு தெரியாமல் எப்படி. ஆனால் தெரியக் கூடாது. வாசன் பெங்களூரில் இருக்கிறான். உறுதிப்படுத்திக் கொண்டு தான் சத்தியமங்கலம் பேருந்து ஏறினான்.

சத்தியமங்கலத்துக்கு 12 கிலோ மீட்டர்க்கு முன்பே இருக்கும் சிற்றூரில் இறங்கி அங்கிருந்து கிழக்காக 2 கிலோ மீட்டர் நடந்தால்… வாசனின் தோட்டம்... தோட்டத்தோடு தோட்டமாக பச்சையம் பூசி பள பளவென தன்னை நாலா புறமும் காட்டி ஜொலித்துக் கொண்டிருக்கும். 

நிஜத்தின் பக்கம் நிற்பதை போலவே நிழலின் பக்கமும் சுலபமாக நின்று விடலாம். ஆனால் இரண்டுக்கும் இடையே நிற்பது பறந்துக் கொண்டிருப்பது போல. அதுவும் பூமியில் பறப்பது கொடுமை. அது வானத்தில் நடப்பது போல. பேருந்தில் ஜன்னல் சூரியனை காற்றாக்கி ரிதனின் முகத்தில் பூசிக் கொண்டிருந்தது.

எதுவோ துரத்திக் கொண்டே இருப்பது போன்று அடிக்கடி திரும்பி பார்க்கிறான். பின்னாலும் அவனே அமர்ந்திருக்கிறான் போன்ற ஆறுதல்.

இந்த இரண்டு நாட்களாகத்தான் பெரிய பெரிய அசைவுகள் மனதுக்குள். இரண்டு நாட்களுக்கு முன் சமீபத்தில் கிடைத்த நண்பன் வாசனின் இதே தோட்டத்துக்கு புது வருஷம் கொண்டாட ரிதனும் கண்ணனும் வந்திருந்தார்கள். ரிதன்… கண்ணன்... வாசன் மூவரும் தோட்டத்தில் மரங்களோடும்... வாழைகளோடும்.. வரப்போடும்... கரும்புகளோடும்... கத்திரிகாய்களோடும்... கோழிகளோடும்... சிறு சிறு குஞ்சுகளோடும்... பறவை பட்சிகளோடும்... டிசம்பர் குளிரோடும்... மெய்ம் மறக்க மெஸ்மரிசம் பூமியில் ஒரு வட்ட வடிவ வேகப்பந்தை சுழற்றுவதாக... மல்லாக்கப் படுத்து கயிற்றுக் கட்டிலில் கண்ட நினைவுகள் அற்புதம்.

நியூ இயர் கொண்டாட்டத்துக்கு வந்து விட்டு கோப்பை நிரம்பாமல் எங்கனம் இருக்க. 

வாசன் பெங்களூரு உசத்தி சரக்கு கொண்டு வந்திருந்தான். வழக்கம் போல முதல் வட்டத்துக்கு தான் ரிதனிடம் முகம் இருந்தது. அடுத்தடுத்து பேச்சு சுவாரஷ்யத்தில் உடல் இருக்குமா என்றே தெரியாது. இரண்டு கிலோ மீட்டர் காரில் பறந்துச் சென்று வாங்கி வந்த பரோட்டாவும் குருமாவும்.. செம காம்பினேஷன். நின்று விளையாடும் நிலவும் கூட... சற்று தள்ளாடி தள்ளாடி தான் தோட்டம் அலைந்தது. 

காருக்குள் அமர்ந்து... தோட்ட வரப்பில் அமர்ந்து... நிலவொளிக்கும் நிழல் ஒழிக்கும் முற்றத்து வேப்ப மரத்தடியே ஒரு பழுப்பு பல்பு மாட்டி... திகட்ட திகட்ட பேசி... வருடத்தின் கடைசி நாளை வகை வகையாய் வாட்டி எடுத்தார்கள். வானம் நடுவே வானத்திலிருந்து பொத்துக் கொண்டு பூத்தது போல... பச்சைய வட்டம் பொதுவாக அவர்களை சுற்றி மேலெழுந்து கொண்டே இருந்தது.

பரோட்டாவும்.. ஆம்லெட்டும்... மிக்சரும்... சிப்ஸ்ம் போத்தலை முடித்திருந்தது. இரவும் நிலவும்.. இசையும் ராஜாவுமென அவர்களின் இரவு... யானையாய் தோட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்தது. 

தோட்டத்தை ஒற்றை ஆளாக கவனித்துக் கொள்ளும் நேசன் தாத்தா... நீண்டு வளர்த்த வெள்ளை தாடியில்... வெண்மையும் தன்மையும் படர்ந்து இருக்க... பேச ஒரு நிமிடம் யோசிப்பார். பேசி விட்டு இன்னொரு நிமிடமும் யோசிப்பார். அத்தனை தனிமை விரும்பி. பேச விரும்பாத பெரிய நெற்றிக்காரர். 

கடலை உரித்துக் கொடுத்தார். ஒரு பெக் ஊற்றிக் கொடுத்ததற்கு மூவரையும் கூர்ந்துப் பார்த்து விட்டு திரும்பிக் கொண்டார். கண்ணன் எடுத்து மடக்கி விட்டான். டிசம்பர் இரவு மனதுக்கு குதூகலமானது. அதுவும் உள்ளே உசத்தி சரக்கு போயிருக்கும் நல்லதொரு வேளையில் திரும்பும் பக்கமெல்லாம் நம்பிக்கை தான்.

ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம். குடித்துக் கொண்டாடுவது ஒன்றும் நாம் கண்டு பிடிக்கவில்லையே. அது தொன்று தொட்டு வரும் பழக்கம் தானேடா நண்பா என்ற போது போத்தலைப் போட்டு தாண்டி சத்தியம் செய்தார்கள்... மற்ற இருவரும். 

விசுக்கென ஐந்தடி மரத்தில் கிளைக்குள்ளிருந்து தலையை மட்டும் ரெண்டு இஞ்ச் வெளியே நீட்டி எட்டிப் பார்த்த சேவல்... "போங்கடா பொச கெட்ட பசங்களா...!" என்பது போல விருட்டென்று மீண்டும் தலையை உள்ளிழுத்துக் கொண்டது.

இரவு 12 ஐ மூன்றாக பிரித்து மேய்ந்தார்கள். 

கொண்டாட்ட குலவைகள் வானத்தில்... தூரத்தில்... பட்டாசுகளாக சிதறின. குளுமையின் நடுக்கமும்... சொல்லொணா இன்பத்தின் பெருக்கமும் அப்பாடா என்றிருந்தது. ஆளுக்கொரு கயிற்றுக் கட்டிலில் படுத்தார்கள். முதலில் தாத்தா பிறகு வாசன் பிறகு கண்ணன். கடைசியாக ரிதன். ரிதனைத் தாண்டிய இருட்டில் வாழை மரங்கள் இருளை தின்று கொண்டிருந்தன. 

கணத்தில் தோன்றியது. வாழை மரங்களா கரும்பச்சை யானை மரங்களா. 

குடித்த இரவில் தூக்கத்துக்கும் போதைக்குமான இடையில் நினைப்பு கற்பனையாக அல்லது கனவாக கூட மாறி விடும். வடிவமற்ற காட்சிக்குள் நிறம் பூத்துக் கொண்டு நில்லாமல் ஓடும் காக்கையின் அலகு திரும்பலில் கண்டதாக நினைவு.

பட படவென விழித்துக் கொண்டே... பாதி மலை ஏறிக் கொண்டிருந்தான் 

கண்ணன். வாசனுக்கு முதலில் குறட்டை தான் வந்தது. பிறகு தான் தூக்கம். பசித்த மானுடத்தின் வழியே தூக்கத்தை உடல் தளர படுத்தபடியே கிடைத்த வெளிச்சத்தில் வயிறை பெரும்பாறைகளில் ஏற்றி இறக்கிக் கொண்டிருந்தார்கள் அவர்கள். 

கண் நிறைந்து எழுந்தமர்த்து நீர் குடித்தான் ரிதன். குளிரிலும் தாகம். தண்ணீர் போத்தலுக்குள் இருந்து தொண்டை நிறையும் சப்தம்... குபுக் குபுக் என.

"ஏன்... தூக்கம் வரலயா...?"

கேட்டது கண்ணனா... அல்லது கண்ணன் குரலில் அந்த தாத்தாவா. 

தோட்டத்துள் சுழன்றடித்த காற்று ஒரு கணம் காலை தொட்டு கட்டிலுக்கடியே புகுந்து அனத்தியது போலிருந்தது. ரிதன் காற்றை கட்டிப் பிடித்தவன் போல கட்டிலில் சரிந்தான். காற்றின் ஒலி... தாத்தாவின் பேச்சு... இருளின் துளி... எல்லாம் கேட்டாலும் கண்கள் திறக்க முடியாத இறுக்கம்.. சரக்கின் வழியே ரிதனுள் நிறைந்திருந்தது.

இமை அழுந்த நெற்றியின் கீழ் பகுதியில் போதையின் இறுக்கம். இந்தா இப்போ அந்த வளைவில் தூக்கத்தை பிடித்து விடலாம்... என ஆழமாய் நினைவூட்டும் போதே... வளைவு தொடர்ந்து வளைந்துக் கொண்டே இருக்க ரிதன் தேடும் நேர்கோடு கிடைக்க மாட்டேன் என்றது. ஓர் அனல் சட்டென்று ரிதனின் அருகே சூழ உணர்ந்தான்.

அவன் தொடையோடு ஒட்டியது போல யாரோ அமர்ந்திருந்த சூடு அந்த இரவு குளிருக்கு நன்றாக இருந்தது போல. நன்றாக கால்களை குறுக்கி அந்த முதுகொட்டி சரிந்துக் கொண்டான். இன்னும் சொல்ல போனால் இடது காலை மடக்கி முதுகில் சற்று சாய்த்துக் கொண்டான் என்றே சொல்லலாம். தூக்கத்தை… இழுத்து... விடும் மூச்சில் அசையாமல் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு தூங்குபவனுக்கு உண்டு.

இன்னுமே நெருங்கினான். அனிச்சையா.... குளிருக்கு சுருண்டு கொள்ளும் இச்சையா... காலொட்டி படுத்தது. வளைவுகளில் மூச்சு திணறி விழித்துக் கொள்வதைப் போல..... ஓர் அடுத்த லேயர் விழிப்பு நிலை. 

"என்னாச்சாம்... கண்ணனுக்கு..? இப்படி உக்காந்து இருட்டை வேடிக்கை பார்த்துட்டு இருக்கான். ஒண்ணுக்கு எந்திரிச்சிருப்பான். அப்டியே தூக்கம் வராம காத்து வாங்கிட்டு முன்னாலருக்கற கட்டில்லயே உக்காந்துட்டான் போல. இன்னும் நன்றாக குத்துக்காலிட்டு சரிந்தக் கால்களை முதுகில் சரித்துக் கொண்டான் ரிதன்.

சற்று நேரமா... வெற்று நேரமா தூக்கத்தில் கடப்பது. 

குளிருக்கு திரும்பாமல் இருந்தாலும்... ஒரு பழக்கத்துக்கு திரும்புவது தூக்கத்தில் நடக்கும் தானே. ரிதான் மெல்ல திரும்பி கண்ணன் கட்டிலைப் பார்த்து படுத்தான். கண்ணன் கட்டிலில் இருந்து சற்று முன்பு போலவே குறட்டை சத்தம்... ஹாரன் அடித்தது. படக்கென்று நெற்றியைப் பிளந்தது போல...தூக்கம் விட்டகல... கண்கள் தானாக திறந்து கொண்டன. விழித்த கண்களில் பழுத்த மலை போல சரிந்திருந்த கண்ணன் குறட்டையில் தன்னை தானே தாலாட்டிக் கொண்டிருந்தான். 

"ஐயோ... அப்போ இங்க உக்காந்திருக்கறது..?!!!!" - வேகமாய் திரும்பினான் ரிதன். 

அங்கே யாரும் இல்லை. சூடு குறைந்து குளிர் நிரம்பிய நொடியில். முதுகில் எதுவோ நடுக்கம். சிமிட்டாத முகத்தோடு மெல்ல எழுந்து… எழுந்தவாக்கிலேயே அமர்ந்தான். கட்டிலுக்கு கீழே பக்கவாட்டில் துழாவி நீர் போத்தலை எடுத்து திறந்து மடமடவென குடித்தான். தாகம் தீரவில்லை. கானல் தீர்ந்தது போத்தலுக்குள்.

இடது பக்கம் குகை போலப் சாய்ந்து நீண்டிருந்த இருட்டில் இப்போது வாழை மரங்கள் பச்சையும் கருப்பும் பூத்து நிலவொளியை வாங்கிப் பூசிக் கொண்டிருந்தன. அவசியமாக அலைபேசியை எடுத்து மணியைப் பார்த்தான். மணி நடு இரவு 3. 

இன்னும் தான் தூங்கவே இல்லை போல நினைத்தவனுக்கு மணி மூன்றானது தூக்கத்தைக் கடந்த... காலத்தை கண் முன் காட்டியது. 

எழுந்து நின்றான். வாழை மரம் வா என்றது போல இருந்தது. இருட்டில் எல்லாமே போல தான் போல. அருகே சென்று பார்த்தான். பார்ப்பதற்கும் பார்த்தற்கும் இடையே பார்த்த மறதி. குடித்த விதி.

மெல்ல நகர்ந்து சேவல் மரத்தடியே நின்றான். குளிர் தரை இறங்கிக் கொண்டிருந்தது. மேலே சரேலென சரிந்து அகலமாய் விரியும்.. தென்னை மரம். அதையொட்டி இனிக்க காத்துக் கிடக்கும் கரும்புக்காடு. இந்தப் பக்கம் வட்ட யானையாக வெள்ளை பூசிய வயிறு தள்ளிய வட்ட கிணறு. 

முற்றம் ஒட்டி சுற்றி சுற்றி.. அந்த காட்டைச் சுற்றியதாக கண்களை சுழற்றி வானம் பார்த்தான். பட்டென்று எதுவோ எதிலிருந்தோ தோன்றி மறைந்தது போல பளிச்சிட்டது... நிலவொளியில் வானவில் கோடிழுத்தது. நிலவை கண்கள் கூச பார்த்தான். நிலவும் கண்கள் கூச பார்த்து விட்டு... படக்கென்று உள்ளே சென்று கதவடைத்தது போன்ற பிரமை.

அடைத்த கதவுக்குள் மறைந்துக் கொண்டு யாரோ தன்னை கவனிப்பதாக ஒரு அவதானிப்பு. நிலவில் இருந்து கார்ட்டூன் குதிப்புகள் நிகழ்வதாக குழம்பிய பின் மண்டையில் சுமை ஏறிக் கொண்டேயிருந்தது. அப்படியே யாரோ அவனை கைத்தாங்கலாக கூட்டி வந்து கட்டிலில் போட்டது போல் நம்பினான். குடித்த இரவில் தூக்கத்தில் விழும் முன் வரும் நம்பிக்கை அது.

"ரிதன்... எந்திரிடா..." குப்பறவும் இல்லாமல் மல்லாக்காவும் இல்லாமல் குறுக்காக படுத்திருந்தவன் தோள் பட்டையைத் தட்டி தட்டி எழுப்பினான் கண்ணன்.

எந்த நொடி முழிப்பு வந்தது என்று தெரியவில்லை. ஆனால் அந்த நொடி விழித்திருந்தான். எழுந்தமர்ந்து சூனியத்தை வெறித்தவன்… அமைதியாக இருந்தான்.

"வாசா... இங்க என்னமோ சரி இல்லடா" என்றான். அவன் குரலே வேறொரு குரல் போல கேட்டது.

உசத்தி சரக்கின் மிச்சம் புது வருடத்திலும் இட்லிக்கு இணைந்திருந்தது. தாத்தா இட்லி எடுத்தெடுத்து ஒவ்வொரு தட்டிலும் பார்த்து பார்த்து வைத்துக் கொண்டிருந்தார். கண்ணன் வழக்கம் போல இன்னொரு இட்லி என்றான். என்னமோ சரி இல்லையை யாரும் கண்டுக் கொண்டதாக தெரியவில்லை. வழக்கம் போல கதை விடுகிறான் என்பது அவர்களின் இட்லிக்கு சுவை கூட்டியது.

இரவில் பார்த்த இடங்கள் பகலில் வேறு ஆடை அணிந்து கொண்டு வேற்றுலகை கொண்டு வந்து வேடிக்கை காட்டுவதை ஆழ்மனம் நம்பினாலும்... அப்படியென்றால் யார் முதுகில் என் கால் சாய்ந்திருந்தது. அந்த சூடு இன்னமும் உணர முடிகிறதே.

நான்காவதாக ஒரு மூச்சு சப்தம்....நான்காவதாக ஒரு இருத்தல்... நான்காவதாக ஒரு அசைவு. இரவின் விஸ்தீரத்தில்... இன்னொரு ஜோடி கால்களை நான் உணர்ந்தது கற்பனையா. செங்கழுத்தை கிளை நடுவே வெளியே நீட்டி பார்த்து விட்டு உள்ளிழுத்துக் கொண்ட சேவல் முகம் சட்டென வந்து போனது. எழுந்து சேவல் இருக்கும் இடத்தை நோட்டமிட்டான்.

அவனை ஒரு முறை திரும்பி பார்த்து விட்டு... ரகசியங்கள் காக்கப்பட வேண்டும் என்று ஜாடையில் சொல்வது போல... கொக்கு நடையில் வாசலில் கோலம் போட்டபடியே சோளம் மேய்ந்துக் கொண்டிருந்தது.

"இல்ல வாசா.. கண்டிப்பா... இங்க வேற யாரோ இருந்தாங்க... எனக்கு பீல் ஆச்சு..." நெற்றி நீவிக் கொண்டே சொன்னான் ரிதன். 

"என்ன தாத்தா… நான் இல்லாதப்போ யாரையாவது கூட்டிட்டு வந்து வெச்சிருக்கியா..." முதல் தோசையை முடித்த வாசன் வாய் வம்பிழுத்தது.

இப்போது தோசை சுட்டுக் கொண்டிருந்த தாத்தா ஒருமுறை முகத்தை தூக்கி வாசனைப் பார்த்து விட்டு மீண்டும் குனிந்து வேலையைத் தொடர்ந்தார். தோசையில் எழும் ஓட்டைகள் எதையோ பொத்துக் கொண்டு சொல்வது போல இருந்தது.

தாத்தாவை நக்கல் அடித்துக் கொண்டே ரிதனைப் பார்த்த வாசன்..." இல்லடா ரிதன்... எனக்கு தெரியாம இங்க யார் இருப்பா சொல்லு... சுத்தியும் பென்சிங் போட்ருக்கு. யாரும் வர முடியாதுடா. இது தோட்டம். இங்க நேசன் தாத்தாவை தவிர வேற யாருமே இல்லடா. பெங்களூரு உசத்தி சரக்கு உன்ன உசுப்பேத்தி இருக்கு... சரி கிளம்போவோமா" என்றான். 

"ஆமாமா" என்ற கண்ணன் கடைசி தோசையை முடித்துக் கொண்டிருந்தான்.

எதையோ விட்டு விட்டு கிளம்புவது போல இருந்தது.

வீடு வந்த பிறகும் தோட்டத்தின் சுவடுகள் ரிதனை பின் தொடர்வதை அவனால் உணர முடிந்தது. 

அவன் திரும்ப வந்து விட்டான். 

இம்முறை கண்ணனும் இல்லை. தோட்டத்துக்கு சொந்தக்காரன் வாசனும் இல்லை. அந்த கிழவனுக்கும் தெரியாமல் தோட்டம் நுழைகையில்.. பூமி விட்டு வெளியேறியது போன்ற உணர்வு. அதே நிலவு. ஆனால் வேற இரவு. அவன் சருகுகள் மேல் கால் படாமல் பூமிக்கு மேல் நடப்பது போல ஒரு காட்டு பூனையாய் நடந்தான். பாதங்களுக்கு கீழே பூமி நழுவுவது போலிருந்தது.

ஜனவரி குளிர் உடல் துளைத்துக் கொண்டிருந்தது. பனி விழுந்த தோட்டத்தில்.. பச்சை இலைகளின் முதுகில் இரவுத் துளிகளின் தஞ்சம். நுரையீரல் நிறைக்கும் குளிர்ந்த காற்றில் ஊசி குத்தும் நெருப்பு. அடிக்கடி வந்த பெருமூச்சை ஆழ்ந்து அளந்து நிறுத்தி நிதானமாக குறு மூச்சாக்கி விட்டான்.

நேரம் காலம் பார்க்காத இரவு அந்த தோட்டத்தை சுற்றிலும் தன் மாய கைகளை பரப்பி மூடி இருந்தது. வாசலில் கயிற்று கட்டிலில் ஒரு பிணம் போல கிடந்தான் கிழவன். முகப்பு லைட் மட்டும் முணுக் முணுக் என மூச்சு வீட்டுக் கொண்டிருந்தது. 

"லைட்டை கண்டு பிடிச்சு இருட்டை கொளுத்திட்டானுங்க... பைத்தியக்கார பயலுக" என்று போன முறை வந்த போது கிழவன் முனங்கியது நினைவுக்கு வந்தது. அவன் ஒரு இருட்டு விரும்பி என்று வாசன் கூட சொல்லி இருக்கிறான்.

ரிதன் பக்கவாட்டில் நுழைந்து பதுங்கி பதுங்கி வாழைத் தோப்புக்குள் சென்று விட்டான். வரைந்து வரைந்துச் சென்ற வாழைத் தோப்புக்குள் நிலவொளி நில்லாமல் உதிர்ந்துக் கொண்டிருந்தது. வானம் வீசி எறிந்த வெளிச்ச துகள்களில் குளிர் சேர்ந்த இரவுக்கு நாணமும் சேர்ந்திருந்தது. 

வரப்பு தாண்டி… நெடு நெடுவென வளர்ந்து வந்த வேகத்தில் தலை விரித்து இலை பரப்பி நின்ற வேப்ப மரத்தடியே பளபளவென எதுவோ அசைவதைக் கண்டான். உள்ளே சுளீர் என்று எதுவோ வலித்தது. இதய துடிப்பு வேகமெடுக்க... சட்டென்று கிணற்று சுவர் மறைவில் பதுங்கினான். சமயோசிதம் சாமத்தில் தத்ரூபமாக வேலை செய்யும். 

எங்கிருந்தோ சுழன்றடிக்கும் காற்று விசு விசுவென ஸ்ஸ்ஸ்ஸ் என்று அடித் தொண்டையிலிருந்து சப்தமிட்டபடியே அந்த வேப்ப மரத்தை சுழல... கீழே அமர்ந்திருந்த அந்த உருவத்தின் கூந்தல் காற்றில் ஜிவ்வென்று அசைந்தாடியது. நிலவுள்ள இரவில் கூந்தலின் நிறம் பொன்னிறம். அவன் கூர்ந்து கவனித்தான். நடுக்காட்டில் யாரோ ஓவியம் வரைந்து வைத்து விட்டு போனது போன்ற கலை மனம் நொடியில் வந்து கலைந்தது.

எதற்கோ திரும்பியது உருவம். அவனுக்கு திரும்பியது போல அசைந்துதிர்ந்தான். கண்களில் பிரபஞ்ச வெளிச்சம். பேரழகில் வடிவம். முகத்தில் கண்ட கனிவு. கனவுக்குள் இருந்து எட்டி பார்த்த ஜன்னலில் தெரியும் முகம் போல அத்தனை பளிச்,. மழைக்குள் நெளியும் மாய பிம்பம் அதில். 

அவன் எப்போது நகர்ந்து முன்னேறினான் என்று தெரியவில்லை. எல்லாமே அனிச்சையாய் நடந்து கொண்டிருந்தது. அவள் அவனை ஆழமாய் பார்த்தாள். பார்த்துக் கொண்டே இருந்தாள். அவள் கண்களில் சுடர். அவள் கன்னத்தில் மினுமினுப்பு. காதுகளில் பரிபூரணம். நாசியில் நளினம். கொண்ட வெம்மை... கழுத்தொட்டி தொங்கும் இரட்டை கிளவி. 

அவன் நொடியில் மண்டியிட்டு அமர்ந்தான். பூமி சுழல்வதை நிறுத்திய நொடியெலாம் இப்படித்தான் இருக்கும். கொடியில் பூத்த மனம் பயம் அற்றது. தான் அற்றது. ஒருவேளை வானத்தில் இருந்து இறங்கி வந்த தேவதையோ.

அவனை மார்போடு அணைத்துக் கொண்ட அவளிடமிருந்து செந்தூர பூக்களின் வாசம். அந்த இடமே ஒரு மாயத்தில் நிகழ்ந்து கொண்டிருப்பதாக பட்டது. இருவரும் அணைந்திருந்தார்கள். இருளுள் இசைபட எரிந்து கொண்டிருந்தது நிலா. 

எங்கோ விட்டது இங்கே தொடர்வது போல இருந்தது. கிணற்று மேட்டில் அமர்ந்திருந்தார்கள். அவள் மொழியற்ற முன்பிறவி போல இருந்தாள். தங்கத்தில் செய்த உடலைப் போல.. மென் சதையில் வன தோல்கள். ஒவ்வொரு அசைவுக்கும்... இன்பத்தின் பரவசம் கூடிக் கொண்டே போனது. 

வரப்பினோரம் மடி மீது படுத்துக் கொண்ட போது... மாடி வீட்டில் தான் நிலவிருக்கிறது போல. அதுவும் இரட்டை நிலவு. கன்னம் கிள்ளி வாய்க்குள் போட்டாள். முகத்தை முகத்தால் வருடினாள். யுகத்தை கடந்து வந்திருக்க வேண்டும் அவள் மூச்சு. அனல் பரப்பும் ஆதி வயிற்றில் காதல் நிரம்பியது.

கிழவன் கத்தியை கெட்டியாக பிடித்தபடி வெறி பிடித்த அரக்கனாக... தாடி நடுங்க தோப்புக்குள் அங்கும் இங்கும் அலைந்தான். அவனோடு இரு நாய்களும் பற்களை திறந்து கொண்டு பாவ் பாவ் என கத்தியபடி பேய்களை போல அலைந்தன. அவன் அவளின் கையை இறுக பற்றியபடி தோட்ட முகப்பிலிருக்கும் சிறு கடவுள் சிலையின் பின்னால் குனிந்து மறைந்திருந்தான். 

"யார் நீ... இங்க எப்டி வந்து மாட்டின..." காதோரம் கிசுகிசுத்தான்.

அவளுக்கு பேச குரல் எழும்பவில்லை. ஜாடை காட்டவும் உடல் விளம்பவில்லை. நடுங்கிய உடல்... அவன் கையை இன்னும் இறுகப் பற்றிக் கொண்டு பார்த்தது. 

அந்த தோப்பே ஒரு மர்ம விலாசம் போல ஒளி வாங்கி கிடந்தது. அடிக்கும் காற்றும்... குளிரின் போக்கும் எது நிஜம்.. எது நிழல் என்று மறக்கடித்துக் கொண்டிருந்தது.

முகப்பில் கேட்டை எட்டிப் பார்த்துக் கொண்டே கிழவன் கரகரத்த குரலில் பேசியது நன்றாக கேட்டது.

" வாசா.. உன் பிரெண்ட்க்கு எல்லாமே தெரிஞ்சிடுச்சு. அட அவன்தாண்டா... அந்த தொப்பிக்காரன். உன் தங்கச்சிய கூட்டிட்டு தப்பிக்க பாக்கறான். விஷயம் வெளிய போச்சுன்னா... நீ நான் இந்த தோட்டம்... எல்லாம் காலி. தோட்டத்தை தோண்டுனா... அவ காதலனை கொன்னு புதைச்சது வெளிய வந்துரும். குடிச்சிட்டு கூத்தடிக்காதன்னு சொன்னா கேக்கறியா வாசா... மோசம் போய்ட்டா நாண்டுக்கிட்டு தான் சாகனும். கவ்ரவ கொலையெல்லாம் கத்தி மேல நடக்கற மாதிரிடா... இப்டி விவரம் கெட்டு மாட்டிக்க கூடாது... கிளம்பி வா. பதறாம வா. எப்படியும் மாட்டிக்குவாங்க..." கிழவனின் பேச்சும் உடல்மொழியும்... ஒரு சாத்தானைப் போல இருந்தது. 

ரிதனுக்கு கால்களில் பயம் ஊர்ந்தது. 

'வாசா... இது உன் தங்கச்சியா....!' - சட்டென்று திரும்பி அவளைப் பார்த்து கண்கள் விரிந்தான். 

அவள் ஆமாம் என்பதை போல தலை ஆட்டினாள். அவள் கண்களில் கணத்தில் கண்ணீர். எத்தன நாளா இங்க அடைச்சு வெச்சிருக்கான்... உன் லவ்வரா கொன்னுட்டாங்களா..?" - கிசுகிசுத்தான். மூச்சு வாங்கியது ரகசிய பேச்சுக்கு. ரிதனுக்கு இதய துடிப்பு அதிகமானது.

"வெண்மை நிறத்தில் ஒரு தேவதையைப் போல அவள் கிடைத்தது நினைவு வந்தது. பிறகு எப்படி இவள் கையைப் பிடித்துக் கொண்டு இந்த தோப்புக்குள் ஓடி கொண்டிருக்கிறோம்" யோசிக்க யோசிக்க ரிதனுக்கு ஒன்றும் புரியவில்லை.

இந்த தோட்டத்தில் என்ன நடக்கிறது. தங்கச்சியையே இப்டி அடைச்சு வைப்பானுங்களா... என்ன சாதி கருமம் இது..." ஒன்றும் விளங்காத போதும் அவள் கையை மட்டும் விடவே இல்லை. 

முருங்கை மரத்தடியே நின்று பற்களை கடித்தபடி அங்கும் இங்கும் ஓடி ஓடி அலைந்து தேடி கொண்டிருந்த கிழவனும் நாய்களும் பேய்களை போல தெரிந்தார்கள். இருளும் நிலவொளியும் தோட்டத்தில் வன்மத்தை கூட்டி காட்டியது. வந்து வந்து சரிந்து உள் நுழையும் காற்றுக்கு இருள் துழாவ ஆயிரம் கைகள். இன்னும் பத்தடி ஓடி விட்டால் கேட்டை தொட்டு விடலாம்.

ஆனால் அத்தனை உயர கேட்டை தாண்டி குதிக்க முடியாது... என்ன செய்வது. குத்த வைத்து அமர்ந்தபடியே அங்கும் இங்கும் அலை பாய்ந்த கண்களில் செய்வதறியாமல் தடுமாறும் கால்களின் சிமிட்டல். கிழவனை அடித்து சாய்த்து விட முடியுமா என்று கூட ஒரு கணம் யோசித்தான். நாய்களின் உயரம் அந்த எண்ணத்தை சாய்த்தது. கையை கெட்டியாக பிடித்து நடுங்கி கொண்டே உடன் ஒட்டி உட்கார்ந்திருந்தவளின் மூச்சில் அனல் தெறித்தது. 

அங்கே சுழலும் பெரும் பயத்தை தாண்டியும்... அவனுள் சில முன் பின் நினைவுகள் அலைபாய்ந்தன. 

தோப்புக்குள் ஒரு தேவதையைப் போல பார்த்தது இவளையா. அருகில் குத்த வைத்து அவன் கையை கெட்டியாக பிடித்தபடி அமர்ந்திருந்த அவளை ஒரு கணம் திரும்பி பார்த்தான். இருளடைந்த முகம். வியர்வை பூத்து உப்புதிரும் முகம். குளிக்காத உடல். அழுக்கேறிய ஆடை. உடல். அவள் நறுமணத்தால் பூத்தது போல இருந்தாளே. அப்ப அது கனவா.....இல்ல கற்பனையா... இல்ல என்ன மாதிரி மாயம் இது. 

எப்போ இவ கையை பிடிச்சான். எப்போ ஓட ஆரம்பிச்சான்... நினைவுக்கு வர மாட்டேன் என்கிறது ரிதனுக்கு. இரவு நேர இலை மறைகளை நினைக்க நினைக்க எது நிஜம் எது கற்பனை என்று தெரியவில்லை. முன்னுமற்ற பின்னுமற்ற நடுவில் பீறிட்டு எழும் துக்கத்தின் வேகத்தில் நீரோடை தேடியது உஷ்ணம். ரிதனுக்கு தலையை சுற்றிக் கொண்டு வந்தது. 

கிழவன் கேட் அருகே ஒரு கிறுக்கனை போல கையில் நீண்ட வாலை பிடித்துக் கொண்டு நின்றான். சிக்கினால் நாய்களுக்கு துண்டாக்கி விடுவான். ஒரு கவ்ரவ கொலைகாரனுக்கான எல்லா தகுதியும் அந்த முகத்தில் இப்போது நன்றாக தெரிந்தது.

பட்டென்று அவளை இழுத்துக் கொண்டு தோப்புக்குள் ஓட ஆரம்பித்தான் ரிதன். 

ஹா ஹா ஹாஹ் என்று தொண்டைக்குள் கொலை வெறி ஏற விரட்டிக் கொண்டு ஓடிய கிழவனை கிழவன் என்றே சொல்ல முடியாது. திடமான கால்களில் திமிரான சாதிப்பற்று. 

அவள் கையை விடாமல் பற்றிக் கொண்டே தோட்டத்தின் வரப்பில் ஓடி கரும்புக்காட்டுக்குள் நுழைந்து.... போன முறை வந்தபோது இந்த வழியே வெளியே செல்ல ஒரு சின்ன வழி இருப்பதை வாசன் சொல்லி இருந்தான். நினைவுக்கு வந்த நிமிடத்துக்கு நன்றி சொல்லி அவ்வழியே நுழைய......சில கணங்களில் அவளோடு வெளியேறினான் ரிதன். 

கேட்டில் ஏதோ சத்தம் கேட்டது போல் இருக்க.... தோப்புக்குள் நாயோடு நாயாக விரட்டி சென்ற கிழவன் மூச்சிரைக்க நின்று .... மீண்டும் கேட்டுக்கு ஓடி வந்தான். கேட்ட அருகே வந்த கிழவன்.... மிஸ்கின் பட மொட்டையனை போல அங்கும் இங்கும் ஓடி பார்த்து... எதுவோ சரி இல்லை என்பதாக இன்னும் இன்னும் கூர்ந்து கவனிக்க... அனிச்சையாக அவன் கண்ணில் சிறு தெய்வங்கள் சிலை இருக்கும் இடம் பளீரென பட்டது. நிலவொளியில் சிவப்பு கலந்தது போல... இருளின் குரல் உடைந்திருக்கலாம்.

துணை தெய்வங்கள் சிறு சிறு சிலைகளில் இருக்க நடுவே அமர்ந்திருந்த சிறு தெய்வ சிலையை மட்டும் காணவில்லை. திக்கென்று கண்கள் விரிய நெஞ்சைப் பிடித்துக் கொண்டு சரிந்தான் கிழவன். நாய்கள் இரண்டும் ரத்தம் கக்கி சரிந்தன. அந்த தோட்டம் நொடியில் பற்றிக் கொண்டு எரிய ஆரம்பித்தது.

அதிகாலை பேருந்தில்... ஆங்காங்கே சிலர் அமர்ந்திருக்க... ரிதனின் வலது பக்க தோளில் சரிந்து கண் மூடி இருந்தாள் காப்பாற்றப்பட்ட வாசனின் தங்கை. நிம்மதி அவள் விடும் மூச்சில் ஏறி இறங்கியது. ஒரு வார போராட்டம் அவளை அயற்சியாக்கியிருந்தது.

தோளில் சரிந்திருந்தவளை உற்று பார்த்து விட்டு... மெல்ல புன்னகைத்தபடி "இவளை தான் அப்படி பார்த்ததா நினைச்சுக்கிட்டேனா... இல்ல அவ வேற யாரோவா... ஊருக்கு போனதும் முதல் வேலையா போலீசுக்கு போகணும்..." மனதுக்குள் என்னென்னவோ ஓட... அவனும் கண்கள் மூடினான். உடல் நடுக்கம் கொஞ்சம் ஓய்ந்திருந்தது.

மூன்று பேர் அமரும் அந்த இருக்கையில் ரிதனின் இடது பக்கம் அமர்ந்திருந்த... யார் கண்ணுக்கும் தெரியாத அந்த சிறு தெய்வ சிலை மெல்ல அந்த வெண்ணிற தேவதையாய் மாறிக் கொண்டிருந்தது. 

முன்னொரு காலத்தில் காதலுக்கு பலியான ஒரு ஜோடிகள் அந்த தோட்டத்தில் புதைக்கப்படும் காட்சி... கண் மூடி சரிந்திருந்த ரிதனின் நினைவில் ஒரு கனவைப் போல தெரிந்து கொண்டிருந்தது. புதைக்கப்படும் ஆணின் வலது கட்டை விரலில் ரிதனுக்கு இருப்பது போன்றே வட்ட மச்சம்.

ரிதனின் இடது தோளில் வெண்ணிற தேவதை சாய்ந்துக் கொண்டது கூட கனவின் தொடர்ச்சியைப் போலத்தான் இருந்திருக்கும். 

- கவிஜி

Pin It