" சார்... நில்லுங்க.. நில்லுங்க... அங்கிட்டு போகாதீங்க.. சிறுத்தை இப்பதான் அந்த பக்கம் போயிருக்கு... " என்று பதறிப் போய் சார்லசையும் மாறனையும் அழைத்தார் அந்த ரேஞ்சர்.

"சார்.. சும்மா காமெடி பண்ணாதீங்க சார்.. நாங்க எத்தனை ட்ரெக்கிங் போயிருக்கோம்.. ஒரு காட்டுல கூட சிறுத்தை.. புலி.. பாத்ததில்லை சார்.. வெறும் போர்டு மட்டும்தான் வெச்சிருக்கீங்க " என்று நிதானமாக பதில் சொன்னான் சார்லஸ். " சார்.. சொன்னா கேளுங்க.. இங்க பாருங்க. சிறுத்தை போன பாதை தெரியுது. இங்கிட்டு வாங்க.. நீங்களே பாருங்க.. " என்று ரேஞ்சர் அழைத்த உடன் அருகே இருந்த நவீனும் ஆர்வமாக அந்த பாதையை கவனிக்க ஆரம்பித்தான். சார்லசும் மாறனும் சேர்ந்து கொண்டனர். 

" ஆமாம் சார்.. ஏதோ கால் மாதிரிதான் தெரியுது.."..........

"மாதிரி எல்லாம் இல்ல சார்.. சிறுத்தை கால்தான்"...............

"எப்படி சார் இது சிறுத்தை கால்னு சொல்றீங்க?"

"சார் 6 வருஷமா காட்டுக்குள்ள சுத்திகிட்டு திர்றேன்.. பாத்தாலே சொல்லிருவோம்ல.. நேத்து அந்த மேட்டுல ஊர்க் காரணுவளும் சிறுத்த பாத்திருக்காய்ங்க.. "

" சார்.. சூப்பர் சார் நீங்க.. இந்த வேலைக்கு பயங்கர அப்சர்வேஷன் வேணும் இல்ல..?? செம சார் " 

பெருமிதத்தோடு ஒரு புன்னகை புரிந்து விட்டு "சரி சார்.. சீக்கிரம் வண்டில ஏறுங்க.. இங்கிட்ருந்து முதல்ல கெளம்புவோம்".. என்று கூறி விட்டு அங்கிருந்து ஜீப்பில் ஏறி ஜங்கிள் சஃபாரியை மறுபடியும் தொடங்கினர். 

" சார்...அங்கிட்டு பாருங்க "

"இந்த கோழிய நாங்க பாத்ததில்லையா சார்..! " 

" இது காட்டு சேவல். நல்லா பாருங்க அந்த சேவல் இரக்கையில ஒம்பது கலர் இருக்கும்..ஒரே ஒரு சிறகு மார்க்கெட்ல எவ்ளோ வெல தெரியுமா?? ஒம்போதாயிரம் ரூவா"

" ஓ.. அப்படியா சார்.. என்ன சார் செய்வாங்க அத வெச்சு?".................................

"அழகுப் பொருள்தான் சார்.. சைனால இது அவ்ளோ மதிப்பு சார்.. "...............

" ஓ.." 

"அங்க பாருங்க.. தேக்கு மரம். ஒரு மரம் 3 லட்சம். நாலு லட்சம் போகும் "...................

"ஓ.. அவ்ளோ காஸ்ட்லியா சார் அது! " 

" நீங்க வேற இதெல்லாம் கம்மி.. நல்ல ரோஸ் வுட் மரம் 2 கோடிக்கு போகும் " 

"அடேய்.. என்னடா ஷோ ரூம்ல இருக்க சேல்ஸ்மேன் மாதிரி காட்டுல இருக்கற பறவை மரத்துக்கெல்லாம் ஒரு MRP சொல்லிட்ருக்காரு இவரு? " என்று சார்லஸிடம் முணுமுணுத்து மாறனும் சார்லசும் சத்தம் வராமல் சிரித்துக் கொண்டனர்.

"அய்யோ... ஒரு மரம் கிடைச்சா நாங்க லைஃப்ல செட்டில் ஆயிடுவோம் சார்.." என்றான் நவீன் ரேஞ்சரிடம். சிறிய புன்னகையுடன் ரேஞ்சர் அமைதியானார். சஃபாரி தொடர்ந்தது. 

பிரம்மாண்ட மரங்கள், குறுக்கும் நெடுக்கும் ஓடும் அணில்கள், தூரத்தில் இருக்கும் மான்கள், அதோ.. நீண்ட தோகையுடன் அங்கு தெரியும் மயில், நகரத்தில் பார்க்காத வண்ண வண்ண நிறங்களில் அழகிய தோற்றம் கொண்ட பறவைகள், அவை தொடர்ந்து எழுப்பும் சமிக்ஞைகள், மரங்களின் ஊடே சல்லடை போல ஆங்காங்கே தெரியும் சூரிய ஒளி, ஜீப்பின் சப்தம் கேட்டு ஓடி ஒளியும் பட்டாம்பூச்சிகள், அவ்வப் போது உயர்ந்த மரங்களில் இருந்து தங்கள் மேல் உதிர்ந்து விழும் இலைகள் தரும் மெல்லிய உணர்வு, அந்த குளத்துக் கரை முழுதும் தண்ணீர் குடிக்க வந்த யானைகள் போட்ட விட்டம், அதில் சின்னதாய் முளைத்த காளான், ஜன்னல் வழியாக ஜீப்பின் உள்ளே அதிகாரத்தோடு நுழைந்து போகும் மரக் கிளைகள்.. என தங்களையே மறந்து தங்கள் மொபைல் போனில் புகைப்படம் எடுக்கவும் மறந்து செல்பி எடுக்கவும் மறந்து, சதங்கைமங்களம் காட்டில், அந்த புலிகள் சரணாலயத்தில், மூவரும் ஜங்கிள் சஃபாரியை ரசித்துக் கொண்டு போனார்கள்.

நீண்ட அமைதிக்குப் பிறகு " சார் இந்த காட்டுல நிஜமாவே புலி இருக்குமா சார்? நீங்க எத்தனை முறை பாத்திருக்கீங்க? " என்று மாறன் ரேஞ்சரை கேட்டுக் கொண்டுருக்கும் போதே சில எருமைகள் எதிரே வந்து கொண்டிருந்தன. "மச்சான்... புலி பாக்கலாம்னு கூட்டிட்டு வந்துட்டு.. எருமை மாட்ட காட்றியேடா??!! நியாயமாடா இது " என்று நவீன் மாறனை கேட்க, அனைவரும் சிரித்தனர். ரேஞ்சரும். 

" எல்லாம் அந்த காட்டுப் பயலுவது தான் சார். கொலைகாரப் பயலுக.. இப்படி மாட்ட மேச்சலுக்கு விட வேண்டியது.. பெறவு.. போன பத்து மாட்டுல ஒரு மாட்ட காணம்னு திரும்பி வர வேண்டியது.. அத புலி அடிச்சு போட்ருக்கும்."................................

"அய்யய்யோ.."

" இவிங்க என்ன செய்வானுக தெரியுமா சார்?? அந்த புலி அடிச்ச மாட்டு மேல பூச்சி மருந்தை தடவிடுவானுவ சார். ".................................

"அய்யய்யோ... அப்புறம் " 

" அப்புறம் என்ன? ரெண்டு நாள் கழிச்சு அந்த மாட்ட சாப்புட்ற புலி செத்து போயிடும். இப்படியேதான் சார் புலி செத்துப் போவுது இந்த காட்டுல " 

" அய்யய்யோ... இது தப்பில்லையா சார்.. அவங்க மேல action எடுக்க முடியாதா சார்?? " பதறிப் போய் கேட்டான் மாறன்..........................................

"அவனுகள ஒன்னும் செய்ய முடியாது சார்.. ஏதாவது செஞ்சா உடனே வாழ்வுரிமை மனித உரிமைன்னு கம்பு சுத்த ஆரம்பிச்சிடுவானுக" 

" சார்.. இப்படியே போனா டைகர் பாபுலேஷன் கம்ப்ளீட்டா குறைஞ்சி போயிடும்ல சார்?? அப்புறம் இந்த காட்டுல டோட்டல் ecosystem கெட்டுப் போயிடுமே சார் " 

" கண்டிப்பா சார்.. மான் கூட்டம் பெருக ஆரம்பிச்சிடும். நிறைய இலை தழைகளை சாப்பிடும். காட்டுல இருக்க உணவு பத்தாம ஊருக்குள்ள வரும். அத தேடி சிறுத்தை, நரி எல்லாம் ஊருக்குள்ள வரும். அத ஊரக் காரங்க அடிச்சு கொண்ருவாய்ங்க.. அப்புறம் அப்படியே காடே அழிஞ்சிடும் சார். ".............................................

"ஓ.. ஆமாம்ல.."..........

" கணக்கு படி ஒரு புலிக்கு அரசாங்கம் ஒவ்வொரு வருஷமும் 26 லட்சம் ரூவா செலவு செய்து. புலிய காப்பாத்த.. அஞ்சு வருஷம் முன்ன 30 புலி இருந்துச்சு இந்த வருஷம் 55 புலி இருக்கு இந்த காட்டுல.. ".........................................................

"அத எப்படி சார் எண்ணுவீங்க? " 

" நமக்கு எப்படி கைரேகை இருக்கோ, அதே மாதிரிதான் புலிக்கு அதோட கோடுங்க. நாங்க வெச்ச கேமெராவுல அதெல்லாம் பதிவாகியிருக்கும். அப்படிதான் கணக்கெடுப்போம். எல்லாம் எதுக்கு.. புலிய காப்பாத்த.. இந்த காட்ட காப்பாத்த " 

" ஓ.... அப்புறம் ஏன் சார் இப்படி பன்றாங்க??"....................................................................

"இதெல்லாம் இந்த காட்டுப் பயலுவகளுக்கு என்ன தெரியும் சார்?? "

மறுபடியும் அமைதி. நீண்ட அமைதிக்குப் பிறகு, " அடேய்.. பொத்தா.. என்ன.. தேன் எடுத்துட்டியா? " என தூரமாய் இருந்தவனை மிரட்டினார் ரேஞ்சர். 

" யாரு சார்? "..........................................." இவன் ஒரு காட்டுப் பய.. பேரு பொத்தன்." 

" அய்யா.. இப்பதான் யா நூல் விட்ருக்கேன்.. நாளைக்கு வந்து பாக்கோணும்" என்று கூறிக்கொண்டே அருகில் வந்தான் பொத்தன். 

ஆறடி உயரத்தில் பரட்டைத் தலையுடன் நீல நிற லுங்கி, ஒரு பழுப்பு நிற முண்டா பனியன், கருப்பு படிந்த அவன் பற்கள் கையிலும் கழுத்திலும் சில சிவப்பு கயிறுகள். கையில் ஒரு மூங்கில் கம்பு, அதோடு சேர்த்து இருக கட்டியிருந்த ஒரு வளைவான கத்தி, இடுப்பில் சொருகிய ஒரு சிறிய கத்தி என அவன் தோற்றம் இந்த காட்டில் வாழும் அனைத்து விலங்குகளையும் கொள்பவனைப் போல் இருந்தது சார்லசுக்கு. 

அண்ணா.. மலைத் தேன் எடுப்பீங்களா இங்க?" நவீன் கேட்டான் ஆர்வமாக.

 "இவன் எல்லாம் செய்வான். மாடு மேய்ப்பான். தேன் எடுப்பான். இந்த காட்டுல இருக்க செடி கொடியிலிருந்து மருந்து எடுப்பான். எல்லாம் செய்வான். புலிக்கு விஷமும் வெப்பான்". ஒரு நமட்டு சிரிப்புடன் " அய்யா.. அதெல்லாம்..." என்று அவன் பதில் சொல்வதற்குள் "டேய்.. எல்லாம் தெரியும்டா எனக்கு. வண்டில ஏறு " என்கிறார் ரேஞ்சர். ரேஞ்சர் பக்கத்தில் ஓட்டுநர் இருக்கையில் இருந்த இருளாண்டியை அமைதியாக பார்த்துவிட்டு பொத்தன் வண்டியில் ஏறினான். இருளாண்டி, மௌனமே தனது மொழியாக, எச்சில் விழுங்கி விட்டு தன வேலையை தொடர்ந்தான்.

"டேய்.. சிறுத்தை பாத்தியாடா அங்கிட்டு.. இப்பதான் அங்க தாரை பாத்துட்டு வர்றோம் "......................

"என்ன... தாரை பாத்தீங்ளா...எங்க.. அந்த பொன்னங்கொட்டை மரத்து பக்கமா?? " என்றான் ரேஞ்சரிடம். 

"அது பொன்னங்கொட்டை மரமா நொண்ணங்கொட்டை மரமா ன்னுல்லாம் தெரியாது. அந்த மேட்டு பக்கத்துல தான் பாத்தோம்" என்றார் ரேஞ்சர் எரிச்சலுடனும் அதிகாரத் தொனியிலும்.

"அய்யா.. அது பொன்னங்கொட்டை மரம்தான். அது சிறுத்தை தாரை இல்லைங்கய்யா. அது புலித் தாரை. ஆண் புலித் தாரை " என்று மெதுவாக விளக்கினான் பொத்தன்.

" அப்படியா?"

"ஆமாங்கய்யா.. நானும் பாத்தேன். தாரை அவ்ளோ பெருசுனு நெனைச்சு சிறுத்தைனு நினைச்சிருப்பீங்க. தாரைல கொஞ்சம் கூட நகம் தெரியல பாத்தீங்களா? அப்புறம் விரலுக்கும் காலுக்கும் நல்ல எடவெளி இருந்துச்சுங்கய்யா. அதான் சொல்றேன் அது புலித் தாரைதான்." 

" ஓ.. இதெல்லாம் வேற இருக்கா ? கால் அச்சு பாத்து ஆண் புலியா பெண் புலியான்னு கூட கடு புடிச்சிடுவீங்களா? "

"ஆமாஞ்சாமி... ஆண் புலிக்கு மாரு நல்லா அகலமா இருக்கும். பெண் புலிக்கு அகலம் கொஞ்சம் கம்மியா இருக்கும்." 

" ஓ.." என்று மூவரும் வாயைப் பிளந்தார்கள்.....................................

"ஆண் புலி குட்டிக்கும் மார் அகலம் சின்னதாதான் இருக்கும். அத பாத்து பெண் புலின்னு ஏமாந்துட கூடாது. விரலுக்கும் காலுக்கும் இருக்க எடவெளியும் பாக்கோணும்" 

" ஓ.. இதெல்லாம் எப்படிண்ணா உங்களுக்கு தெரியும்?"..............................................

"எங்க தாத்தாவோட தாத்தா காலத்துல இருந்து இங்கதான் இருக்கோம். நீங்களும் இங்கயே இருந்தா உங்களுக்கும் தெரியும் சாமி" 

கொஞ்ச நேரத்தில் ஜங்கிள் சஃபாரி முடிந்தது. ஜீப் வன அலுவலகத்தை அடைந்ததும் அனைவரும் இறங்கினர்.

"டேய்.. பொத்தா.. நாளைக்கு கொஞ்சம் தேன் கொடுத்து வுடு ஆபீசுக்கு" 

"சரிங்கய்யா " 

" சார். இந்த ரெஜிஸ்டர்ல கொஞ்சம் கையெழுத்து போட்ருங்க சார் " 

"ஓகே சார். ரொம்ப தேங்க்ஸ்.. நல்லா என்ஜாய் பண்ணோம் சஃபாரிய" 

நவீனும் மாறனும் சார்லசும் வேறு ஒரு உலகத்தில் இருந்து மீண்டு இயல்பு நிலைக்கு திரும்பி இருக்கின்றனர். காலை ஏழு மணிக்கு ஆரம்பித்த சஃபாரி பத்து மணி வரை தொடர்ந்தது. நடுவில் தண்ணீர் கூட குடிக்கவில்லை. நல்ல பசி. உடனே தாங்கள் தங்கியிருந்த விடுதிக்கு விரைந்தனர். 

உணவு பரிமாறிக் கொண்டே அந்த பணியாளர் சஃபாரி எப்படி இருந்தது என்று விசாரித்தார். ' சூப்பர் ணா.. செமயா இருந்துச்சு' என்று ஆர்வமுடன் பதில் சொன்னான் சார்லஸ். 

"ஏண்ணா.. அங்க இருக்க கிராம மக்களே மாட்டுக்கு விஷம் வெச்சி புலிய கொன்னுடறாங்களாமே ண்ணா.. கொடுமை" என்றான் மாறன்.

"யாரு? அந்த ரேஞ்சர் சொன்னாராக்கும். சார். அவனே ஒரு திருட்டுப் பய சார். எங்க கிட்டேயே மான் கறி வேணுமான்னு கேட்டு விப்பான். " என்றார் அந்த பணியாளர். மூவரும் அதிர்ச்சி அடைந்தனர்

"அடப் பாவி.. நம்ம கிட்ட நடிச்சிருக்காண்டா அவன் " என்றான் நவீன். " சார்.. அவன் பண்ற அட்டூழியம் கொஞ்சம் நஞ்சமில்லை.... சாம்பார் வேணுமா சார் உங்களுக்கு? " என்று சாம்பார் காலியான சார்லஸின் தட்டைப் பார்த்து கேட்டு விட்டு சாம்பார் கொண்டுவர உள்ளே சென்றான்.

உணவு முடித்து விட்டு சிறிது நேரம் கழித்து காரில் வேறு ஒரு பாதையில் சுற்றிப் பார்க்க சென்றனர். யாரும் இல்லாத அந்த குறுகிய பாதையில் இவர்களே கார் ஓட்டி செல்வதும் அவர்களுக்கு பிடித்திருந்தது. அதுவும் சஃபாரி போலவே இருந்தது. கூட்டம் கூட்டமாய் செம்மறி ஆடுகள் போய்க் கொண்டிருந்தன. கொஞ்ச தூரத்தில் பொத்தனை பார்த்தனர். காரை நிறுத்தி விட்டு செம்மறி ஆட்டுக் கூட்டத்தை புகைப் படம் எடுக்க இறங்கினர். 

"என்னன்னா... இதெல்லாம் உங்க ஆடா?"

"இல்ல சாமி...அது இந்த ஊரு ஆடுக. எங்க ஊரு இன்னும் உள்ள போகோணும்"... 

" அண்ணா.. அந்த மலை தேன் எங்களுக்கு கிடைக்குமா ண்ணா?" என்று நவீன் கேட்க, "இல்லண்ணா அதெல்லாம் வேணாம். 'டேய் சும்மா இருடா.." இரு நவீனை அடக்கினான் மாறன். 

"ஏண்ணா.... இங்க இருக்க புலிக்கு எல்லாம் நீங்களே விஷம் வெப்பீங்கன்னு அவரு சொன்னாரே. நிஜமாவாண்ணா? " என்று மெல்லிய குரலில் கேட்டான் சார்லஸ்.

" ஆபீசர் அப்படி சொன்னா நாங்க என்னங் சாமி பண்றது? அவரு கிட்ட பகைச்சுக்க முடியுமா ?? பகைச்சிகிட்டு எங்களால வாழ முடியுமா?." "ஹ்ம்ம்...."... ஏளனமாக ஒரு சிரிப்பு சிரித்து விட்டு " அவுக வெக்காத விஷமா நாங்க வெச்சுட்டோம்??" 

"ஓ... அவுங்க விஷம் வெச்சுட்டு உங்க மேல பழி போட்ருவாங்களா?? " 

" சாமி.. அதெல்லாம் நாஞ்சொல்ல முடியாது சாமி.. ஆனா மாட்டு மேல இருந்த விஷமெல்லாம் பூச்சிகொல்லி மருந்து சாமி. அதெல்லாம் எங்கட்ட ஏது சாமி?. எங்கூர்ல அதிக சனம் இல்ல. ஒரு 60 குடும்பம் இருக்கும். அதுல முப்பது குடும்பம் ஆடு மாடு வெச்சிருக்கோம். கொஞ்ச சனம் தேன் எடுக்கும். மீதி பயிர் போட்டு விவசாயம் பண்ணி பொழைக்குறோம். அவுக வெச்சிருக்க எந்த பூச்சி மருந்தும் எங்க கிட்ட இல்ல. எங்களுக்குத் தேவையும் இல்ல. " 

" அப்ப. நீங்க விஷம் வெக்கறதில்லையா இல்லையா புலி அடிச்ச மாட்டுக்கு " 

" சாமி... கொஞ்ச வருஷம் முன்னாடி ஒரு தப்பு நடந்ததுங் சாமி... எங்கூரு ஆளுக குடுமியும் அவன் மகன் பத்ரசாமியும் மேய்ச்சலுக்கு மாட்ட காட்டுல விட்ருந்தாங்க. ஒரே மாசத்துல அவுக வெச்சிருந்த பத்து மாட்டுல மூணு மாட்ட புலி அடிச்சிருச்சி. பாரஸ்ட் ஆபீஸ்ல.. சட்டப் படி புலி அடிச்ச மாடுகளுக்கு எங்களுக்கு நஷ்ட ஈடு ஒரு மாட்டுக்கு அஞ்சாயிரம் தரணும். அப்ப இருக்க ஆபீசர்ட்ட பத்ரசாமியும் குடுமியும் நஷ்ட ஈடு கேட்டாங்க. ஆஃபீசர்ங்க வந்து மாட்ட பாத்துட்டு இது புலி அடிக்கல. சிறுத்தை தான் அடிச்சிருக்கு. சிறுத்தை அடிச்சா அரசாங்கம் நஷ்ட ஈடு குடுக்க சொல்லலனு சொல்லிட்டாங்க சாமி... குடுமியும் பத்ரசாமியும் எவ்ளவோ கெஞ்சுனாங்க.. நஷ்ட ஈடு கிடைக்கவே இல்ல. குடுமி பொண்ணுக்கு வேற அடுத்த மாசம் கண்ணாணம் நிச்சயம் பண்ணியிருந்துச்சு...... கண்ணாணம்னா மாட்ட வித்துதான் விருந்து வெப்போம்.. அந்த மாடும் இப்ப இல்ல " 

" அய்யய்யோ.."

" அடுத்த வாரமே குடுமியோட இன்னொரு மாடையும் புலி அடிச்சிருச்சு... " 

" மறுபடியும் ஏன் காட்டுக்குள்ள விட்டாங்க மாட்ட?" 

" மேய்ச்சலுக்கு நாங்க எங்க சாமி போவோம்? நாங்க தீவனம்லாம் மாட்டுக்கு வெக்க மாட்டோம். தீவனம் வாங்க எங்களுக்கு வசதியும் இல்ல. வெறும் மேய்ச்சல்தான்" 

"ம்ம்... " 

" அந்த ஆபீசர் மேல இருந்த கோவம். நாலு மாடு நஷ்டமானது ன்னு... அவன் என்ன நினைச்சானோ தெரியல சாமி. நாலாவதா புலி அடிச்ச மாட்டுல ஊமத்தங்காய அரைச்சி மாட்டுக் குடல்ல வெச்சிட்டான். அதுலதான் ஒரு புலி செத்து போச்சு." 

அது வரை சுவாரஸ்யமாக கேட்ட மூவரும் பதிலேதும் பேசாமல் அமைதியாக இருந்தனர். 

" ஜீப்புல போனீங்க இல்ல சாமி. அங்க ஒரு கோயில் பாத்தீங்கள்ள.. அது நாங்க கும்புட்ற சிவன் கோயில். வருஷா வருஷம் அந்த கோயில்ல திருவிழா எடுத்து.. எங்க இனத்துலயே வயசுல பெரியவங்களுக்கு சேவல் இறக்கைல கிரீடம் வெச்சு மரியாதை செய்வோம்.. அந்த கோயில் செவுத்துல புலி படம் பாத்தீங்களா?? அதுவும் எங்க சாமிதான். அது நாங்க கும்புடுற சாமி! அந்த சாமி மேல சாத்தியமா சொல்றேன் அதுக்கப்புறம் நாங்க எந்த புலிக்கும் துரோகம் பண்ணல." 

சின்னதாக மேலும் கீழும் தங்கள் தலையை ஆட்டிய படி பொத்தனை ஆமோதிப்பது போல மூவரும் பொத்தனை பார்த்தனர். இவர்கள் பேச வார்த்தைகளற்று தவித்த அந்த மௌன நிமிடங்களில் பொத்தனுக்கு குடுமி தன்னிடம் கதறி அழுத காட்சி கண்களில் வந்து போனது. புலி இறந்ததை அறிந்து குடுமியே தன் நெருங்கிய நண்பணான பொத்தனிடம் வந்து குற்றவுணர்ச்சியில் தான் செய்ததை சொல்லி கதறி அழுதிருக்கிறான். பாரஸ்ட் ஆபீஸ் அதிகாரிகள் இறந்து போன புலியை தங்கள் அதி நவீன அறிவியல் சோதனைக்கூடத்தில் கொண்டு போய் ஆராய்ச்சி செய்து பார்த்தும் எந்த வகையான விஷம் உட்கொண்டு புலி இறந்தது என்பதை அதிகாரிகளால் கண்டு பிடிக்கவே முடியவில்லை. ஊமத்தங்காய் விஷம் அப்படி விசேஷ தன்மை கொண்டது. குடுமியின் மாடு இறந்ததை வைத்து குடுமிதான் விஷம் வைத்திருக்க வேண்டும் என்று வனத்துறை அதிகாரிகள் ஊகித்தார்களே தவிற, புலி விஷம் உட்கொண்டுதான் இறந்தது என்றோ அல்லது குடுமிதான் விஷம் வைத்தான் என்று சொல்வதற்கு அவர்களிடம் எந்த ஆதாரமும் இல்லை. குடுமி செய்தது ஊர் மக்களுக்கு மட்டும்தான் தெரியும். அதனால் குடுமியிடம் இது நாள் வரை அந்த ஊர் மக்கள் சரிவர பேசுவதில்லை புழங்குவதில்லை.

" சாமி.. அவன் ஊமத்தைங்காயை அரைச்சு மாட்டு குடல்ல வெச்சான். அத சாப்ட்ட புலி மட்டும்தான் செத்து போச்சு. ஆனா.. அவுக பூச்சி மருந்த மாடு மேல எல்லாம் தெளிச்சு வெச்சு, அத சாப்புட்ற செந்நாய், கழுதைப் புலி, பருந்து,புலிக்குட்டி ல்லாம் நிறைய செத்துப் போச்சு சாமி....."

மாறனும் நவீனும் சார்லசும் புருவத்தை உயர்த்தி ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்...... சில நிமிடங்கள் உறைந்து நின்றனர். 

 "அவுங்கன்னா.. அந்த ரேஞ்சரா ண்ணா? " மாறன் கேட்டான். 

" இல்ல சாமி... ரேஞ்சர் மட்டும் இல்ல. ரெண்டு மூணு ப்ரோக்கர்.. பெறவு கார்ல ஒரு ஆள் வருவாரு.. பெறவு ஒரு சைனா காரன்.

அந்த சைனாக்காரன பாரஸ்ட் ஆபீஸ்ல இருக்க பெரிய ஆபீசரும் பாப்பாங்க... அந்த சைனா காரன் வரும்போது எங்க கிட்டயே 5000 ரூபாய் குடுத்து ஒரு மாட வாங்கி அவங்களே புலி நடமாடற இடத்துல கட்டி விட்டுட்டு.. புலி அடிச்ச பெறவு மாட்டு மேல பூச்சி மருந்த தடவி விட்ருவாங்க... அந்த சைனாக்காரன் வரும்போதெல்லாம் அவனும் அந்த பணக்கார ஆளும் டெண்ட்டு கொட்டா போட்டு நைட்டெல்லாம் காட்டுலயே தங்குவாங்க.... 

 அந்த ரேஞ்சரும் காவலுக்கு துப்பாக்கியோடு அவங்க கூட இருப்பாரு... எங்கள மான் அடிச்சுட்டு வர சொல்வாங்க... " 

அதிர்ச்சியில் வாயைப் பிளந்து கையை வாய் மேல் வைத்து... "அடப் பாவிகளா... எதுக்குண்ணா இப்படி பன்றாங்க.... " 

"பணம் சாமி...எல்லாம் பணம்... புலித் தோல் இருபத்தி அஞ்சு லட்சமாம்.. புலிப் பல்லு ஒன்னு பத்தாயிரமாம்... புலி எலும்ப அரைச்சு பொடியாக்கி அது ஆண்மைக்கு மருந்தாம்... " 

"இதெல்லாம் உங்களுக்கு எப்படி ண்ணா தெரியும்? " 

" டேய்.. பொத்தா.. இந்த காட்டோட மதிப்பு தெரியுமாடா உங்களுக்கெல்லாம் னு கேட்டுட்டு.... எல்லாம் அந்த ரேஞ்சர் தான் சொல்லியிருக்காரு... " 

" ஏண்ணா.. மொதல்ல முப்பது புலி இருந்துச்சு. இவங்க புலி சரணாலயம் அமைச்சு இப்ப அம்பத்தி அஞ்சு புலி இருக்காமே ண்ணா...." சார்லஸ் பொத்தன் சொல்வதை நம்பமுடியாமல் கேட்டான். 

" சாமி.. புலிய எண்ணி அரசாங்கத்துக்கு சொல்றதே அவுகதான். நீங்களும் நானுமா எண்ண முடியும்? எனக்கு தெரியும் சாமி.. இப்ப இந்த காட்டுல இருபத்தஞ்சு புலிதான் இருக்கும்."

மூவரும் அதிர்ச்சியின் உச்சத்தில் இருந்தனர். பொத்தன் சொன்னதை ஜீரணிக்கவே முடியவில்லை இவர்களால். நீண்ட நேரம் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு.. செய்வதறியாது துடிதுடித்து நின்றனர். அங்கிருக்கும் மரங்களை பொத்தனை வெறித்து வெறித்து பார்த்தனர்.  

அந்த ரேஞ்சரைப் பற்றி 'இயற்கை காவலன், காடுகளை புரிந்து கொண்ட அதிகாரி.. மிகுந்த அக்கறையுடன் புலிகளையும் மற்ற விலங்குகளையும் நேசிப்பவர். ரேஞ்சர் காடுகளை பற்றிய அரிய தகவல்களைக் கொடுத்தார். நன்றி' என்று அந்த பதிவேட்டில் தான் எழுதியதை நினைத்து தன்னைத்தானே நொந்து கொண்டான் மாறன். இந்த காடு மட்டும்தான் இப்படியா அல்லது தான் இதற்கு முன்பு ட்ரெக்கிங் சென்ற காடுகளும் இப்படித்தானா... அல்லது உலகின் எல்லா காடுகளும் இப்படித்தானா என்று சார்லஸ் எண்ணத் தொடங்கினான்.

என்ன செய்வதென்றே தெரியாமல் நவீன் தன் கையில் இருந்த ஐம்பது ரூபாயை எடுத்து " அண்ணா.. டீ சாப்புடுங்க ண்ணா " பொத்தனிடம் கொடுக்கப் போனான். 

" அய்யோ.. அதெல்லாம் வேணாஞ் சாமி. நான் வரேன். பாத்து பத்திரமா போங்க" என்று சொல்லி விட்டு தன் நடையைத் தொடர்ந்தான் பொத்தன்!

(நன்றி: பூவுலகு)

- ஞானபாரதி

Pin It