நண்பர்களே வணக்கம்!!!

நீங்கள் கதை பல படிப்பீர் என்று அறிய நேர்ந்தது. அக்கணம் முதல் உங்களை சந்தித்து என்னுடைய கதையினைக் கூற வேண்டும் என்ற ஆவல் என்னுள் மிகுந்து இருந்தாலும் நேரம் கிட்டவில்லை. எனவே உரியத் தருணத்திற்காக காத்துக் கொண்டு இருந்தேன். இன்று உங்களை சந்திக்கும் அந்தத் தருணம் கிட்டியதினை எண்ணி நான் பெரு மகிழ்ச்சி அடைகின்றேன் அத்துடன் என்னுடைய கதையினை கேட்க நீங்கள் சம்மதிப்பீர்கள் என்ற எண்ணத்திலேயே இத்தனை நாட்களாக என் மனதினுள் வைத்து இருந்த என்னுடைய கதையினையும் கூற ஆரம்பிக்கின்றேன். பொறுமையாய் கேளுங்கள்…!!!

அது ஆங்கிலேயர்கள் இந்தியாவினை ஆண்டுக் கொண்டு இருந்த காலம்.

1916 ஆம் வருடம்.

தென் தமிழகத்திலுள்ள விருதுப்பட்டி (இன்றைய விருதுநகர்) என்னும் ஊரினில் தான் நான் பிறந்தேன். கந்தக பூமியாய் அறியப்பட்டு இருந்த பிரதேசத்தில் தாகம் தணிக்க வந்த என்னை எண்ணி பூரிக்காத மக்களே இல்லை எனலாம். மண்ணின் மைந்தனான என்னை சீராட்டி, ‘காளிமார்க்’ என்று பெயரூட்டி என்னை அவர்களது இல்லத்தில் ஒருவனாகவே வளர்க்க ஆரம்பித்தனர் மக்கள்.

நானும் மக்களின் அன்பினில் தவழ ஆரம்பித்தேன்.

இவ்வாறே காலங்கள் நகர்ந்தன.

சிறிது சிறிதாக நடக்க கற்றுக் கொண்டு இருந்த என்னை ‘என்னடா பையா மெதுவாக நடந்துக் கொண்டு இருக்கின்றாய்… ஒரு இந்தியச் சிறுவன் இவ்வாறா இருப்பான்… சுறுசுறுப்பாய் ஓடடா… நாம் இந்தியர்கள்’ என்றுக் கூறி என் கையினைப் பிடித்துக் கொண்டு ஓடச் சொல்லித் தந்தார் சுதேசி இயக்க அண்ணா.

ஆங்கிலேயர்களின் அடக்குமுறை சிறுவனான என்னைத் தாக்காதவாறு என்னை பல காலம் காத்தார் அந்த அண்ணா. அவரின் கவனிப்பில் நானும் நன்றாக வளர்ந்தேன்.

இவ்வாறே காலங்கள் கழிய நாங்கள் எதிர்ப்பார்த்த அந்த நாளும் வந்தது. எங்களின் ஊரினை விட்டு அன்னியர்கள் ஒரு வழியாக வெளி ஏறினார்கள்.

சிரித்தேன்.

“ஏன் சிரிக்கின்றாய்….!!!” என்றார் சுதேசி இயக்க அண்ணா.

“விடுதலை அண்ணா… சுதந்திரம்… இனி நாம் நன்றாக வளரலாம் தானே… நாமும் நம் சகோதரர்களும் நம்முடைய மண் முழுவதும் சுற்றலாம்.. தடை ஒன்றும் இல்லையே அண்ணா… அதான்” என்றேன்.

அவரும் சிரித்தார்.”ஆமடா பொடியா… நாம் வளரலாம்…!!! இது வரை நாம் ஓடிக் கொண்டு இருந்தோம். இனி ஓடியது போதும். இது பறக்கும் தருணம்.. வா பறப்போம்… வானம் நமக்காக காத்துக் கொண்டு இருக்கின்றது” என்று கூறி என்னை அழைத்துக் கொண்டு பறக்க ஆரம்பித்தார்.

ஒரு பொற்காலம் உதயமாயிற்று.

நான் நன்றாக வளர்ந்தேன். கூடவே என்னுடைய உடன்பிறப்புகளான ‘டொரினோ’ ‘கோல்ட்ச்போட்”லெமன் ஒ’ ‘போவொண்டோ’ போன்றவர்களும் நன்றாக வளர ஆரம்பித்தனர். எங்களின் விளையாட்டுகள் ஊர் மக்களை பெரிதும் கவர்ந்தன. பொறாமை எதுவும் இல்லாத எங்களது போட்டியினைக் கண்டு பக்கத்து வீட்டுப் பசங்களான ‘மாணிக்க விநாயகர் சோடா’ போன்றவர்களும் எங்களுடன் ஆட்டத்தில் கலந்து கொண்டனர்.

எங்களை தங்களது சொந்த வீட்டுப் பிள்ளைகளைப் போலவே அனைவரும் கருதி அவர்களது இல்ல விழாக்களுக்கு அழைப்பர். நாங்கள் இன்றி எந்த நிகழ்ச்சியும் நடை பெறாது. வாழ்க்கை இனிமையாக சென்றது.

அவர்கள் வரும் வரை.

அவர்கள் வெளிநாட்டு பணக்கார ஆட்கள்.

“என்னய்யா… நாம் துரத்தி விட்ட ஆட்கள் மறுபடியும் வந்து இருக்கின்றார்கள்” என்றவாறே அரசாங்கத்தினை பார்க்க, இளித்தார் குல்லா வைத்த சிங்.

“இவங்க நல்ல பையனுங்கபா… நேர்மையா விளையாடுவானுங்க… விளையாட்டுதான சும்மா விளையாடுங்க” என்றார்.

‘சரி… போட்டினா நம்ம பயலுவ கம்பா இருப்போம்ல’ என்று எண்ணிக் கொண்டும் வேறு வழி இல்லாமலும் அவர்களுடன் போட்டியிட தயாரானோம்.

ஆனால் போட்டி தொடங்கும் முன்னரே வெற்றிக் கோப்பையை அந்த வெளிநாட்டு ஆட்களிடம் கொடுத்து விட்டார் சிங்.

“என்னங்க இது… போட்டியே தொடங்கல ஆனா கோப்பையை அவிங்களுக்கு தறீங்க” என்று அதிர்ச்சியுடன் நாங்கள் கேட்க

“அட என்னப்பா… கோப்பை 250 ரூ… அவங்க 500 ரூ கொடுத்துட்டாங்க… அப்புறம் எதுக்கு போட்டி” என்றார் பணத்தினை எண்ணிக் கொண்டே.

ஆரம்பத்திலேயே ஏமாற்றம்…!!! எங்கு சென்று முறையிட வேண்டும் என்றும் தெரியவில்லை. மெது மெதுவாக அந்த வெளிநாட்டவர்கள் தங்களின் சுய உருவத்தினைக் காட்ட ஆரம்பித்தனர்.

ஒருக் காலத்தில் பரந்து விரிந்துக் கிடந்த என்னுடைய நட்பு வட்டாரம் சுருங்கத் தொடங்கியது. “மாணிக்க விநாயகர் சோடா” இறந்தே போனான்.

இந்த நிலையில் தான் சுதேசி இயக்க அண்னாவினை காணச் சென்றேன். என்னை வளர்த்த அவரை விட்டால் எனக்கு வேறு யார் கதி?. ஆனால் அவரின் நிலைமை எங்களின் நிலைமையைக் காட்டிலும் படு மோசமாக இருந்தது. அவரை வளர்த்தக் காலம் இன்று அவரை தளர்த்தி இருந்தது. நடமாட தடுமாறிக் கொண்டு இருந்த அவரை தாங்கினேன்.

“ஏன் அண்ணா இந்த நிலைமை… என்ன தவறு செய்தோம் நாம்” என்றேன்.

இருமினார்.

“நாம் என்றும் அந்நியர்களிடம் தோற்றதில்லை…சகுனிகளிடமும் கூட இருந்தே குழி பறிப்பவர்களாலேயே தான் தோற்று இருக்கின்றோம்… சுதந்திரம் பெற்ற உடன் அந்த சகுனிகளை களை எடுக்க மறந்து விட்டோம். இன்று அவன் தலை எடுத்து விட்டான்” என்றார்.

“அண்ணா, நாம் இப்பொழுது என்ன அண்ணா செய்வது… நம் நிலைக்கு எண்ணத் தீர்வு” என்றேன்.

“புரட்சி…!!! புரட்சி பொடியனே… அதுவே தான் தீர்வு…!!! வேறு வழி இல்லை… மக்கள் உண்மையினை அறிய வேண்டும்… இந்தியன் என்ற நமது முழக்கத்தையே இன்று அந்நியன் தன கையினில் எடுத்து உள்ளான்… அதை மக்களுக்கு அறிவிக்க வேண்டும்… புரட்சியே தீர்வு!!!” என்று முழங்கினார்.

“ஆனால் அண்ணா உங்களுக்கு உடல் நலம் சரியில்லையே… நீங்கள் இருந்தால் தானே புரட்சி… நீங்கள்…” என்றேன்.

“என்னை பற்றி கவலைப் படாதே பொடியா…. இன்று நான் இவ்வாறு இருக்கின்றேன்… ஆனால் இது என் முடிவல்ல… இதை அனைவரும் அறிவர். வெளிநாட்டு கொள்ளைகாரர்கள் முதல்…!!! என் துணைக்கு நீ இருக்கின்றாய்…. உன்னை போல் மேலும் சில நண்பர்கள் இருக்கின்றார்கள். நீங்கள் என்னை தாங்கிக் கொள்வீர்கள். அப்புறம் இருக்கவே இருக்கின்றார்கள் எண்ணிலடங்கா என் மண்ணின் வாலிபச் சிங்கங்கள். அவர்கள் மட்டும் உண்மை அறிந்து தெளிவுக் கொள்ளட்டும்… அப்புறம் பாரடா என்னை… உண்மையான நாட்டுப் பற்றும் உணர்வும் கொண்ட ஒருவன் உள்ளவரை நான் இருப்பேன்… இம்மண்ணோடு… கவலைக் கொள்ளாதே… இப்பொழுது நீ புறப்பட்டு சென்று அச் சிங்கங்களை தேடு. தேடி உன் கதையினைக் கூறு…மாற்றம் அதுவாய் வரும்… இன்னும் இம் மண்ணின் இரத்தம் குளிர் அடையவில்லை!!!” என்று கூறி சிரித்தார்.

நானும் அன்று முதல் மக்களிடம் என்னுடைய கதையினை கூற அலைந்துக் கொண்டு இருக்கின்றேன். இப்பொழுது உங்களிடமும் கூறி விட்டேன்.

“நண்பர்களே இதுவே என் கதை… உலகமே ஒரு கிராமமாகிக் கொண்டு வருகின்றது என்று சொல்லுகின்றார்கள். ஆனால் அவர்களின் இந்த கூற்றினால் எத்தனை கிராமங்கள் அழிந்துப் போய் விட்டன என்று அவர்கள் கூறுவார்களா?… உலகம் ஒரு நாகரீகம் என்று சொல்லுகின்றார்கள். ஆனால் எத்தனை நாகரீகங்களை அவர்கள் அழித்து இருக்கின்றார்கள் என்று கூறுவார்களா?… நிச்சயம் மாட்டார்கள். அவர்கள் கூறும் கிராமம் பணக்காரர்களின் கிராமம். பணக்காரர்களின் நாகரீகம். பணமே அங்கே கடவுள், சட்டம், நீதி அனைத்தும். வாழ்க்கைக்கும் நிம்மதிக்கும் அங்கே இடமில்லை…உணர்ந்துக் கொள்ளுங்கள்… உங்களை நம்பியே இங்கே சிலர் இருக்கின்றோம்… உங்களுக்காகவே!!! காப்பாற்றுங்கள்!!!”.

இப்படிக்கு

95 வயதானாலும் உங்கள் அன்பையும் பாதுகாப்பையும் எண்ணி ஏங்கிக்கொண்டு இருக்கும் ஒரு சுதேசி மைந்தன்.

கவனிப்பீர்களா…???

Pin It