இதழாசிரியர் குறிப்பு: இந்தக் கடிதம் கருணாநிதியை விமர்சிப்பதாகப் பேர் பண்ணிக்கொண்டு என்னை வெகு கூர்மையாகச் சாடுகிறது. அதை மதிக்க வேண்டும் எனத் தோன்றியதால் இங்கு முழுமையாக வெளியிடப்படுகிறது. இதை எழுதிய நண்பர் தன்னை மோகிக்கவோ முன்நிறுத்தவோ முயலாமல், பொது நோக்கத்திற்காகத் தன் அரசியல் நிலைப்பாட்டில் நின்று என்னை விமர்சிக்கிறார். அதை நான் வரவேற்கிறேன். உள்விளக்கங்கள் தேவையில்லை. அதை வாசகர்கள் பார்த்துக்கொள்ளட்டும். என் கட்டுரை ஒரு புதிய எழுத்தியல் முயற்சியை வெற்றிகரமாகச் செயல்படுத்திவிட்டதாகப் பெருமைப் பட்டுக்கொண்டிருந்தேன். தமிழ் வாசகத் தளத்தில் அது வெறும் நேர்கோட்டு அரசியலாகவே புரிந்துகொள்ளப்பட்டு விட்டது என்பதற்கு இக்கடிதம் ஒரு சான்று. உண்மை ஒருவனைக் குற்றவாளியாகச் சுட்டுகிறது. நியாயம் அவனை நிரபராதியாக விடுவிக்கிறது.

இதன் மறுதலையாக, உண்மையில் நிரபராதியாய் இருக்கிறவன் நியாயத்தின் பட்டியலில் குற்றவாளியாகப் புனையப்படுகிறான். சமூகம் இந்த நியாயங்களாலேயே ஆளப்படுகிறது; வழி நடத்தப்படுகிறது. உண்மையானது உச்சிப் பொழுதைப் போல வெட்டவெளிச்சமாய்ச் சுட்டாலும் அது ஏறெடுத்துப் பார்க்கப்படுவதில்லை. சாட்சியாகவும் முன்நிறுத்தப்படுவதில்லை. நமக்குப் பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் நமது வாழ்வின் வெளி அதுவாகத்தான் இருக்கிறது. வாழ்ந்து தீரும்போது அதைப் பற்றிப் பேசியும் தீர வேண்டியுள்ளது. என் கட்டுரை உண்மையையும் நியாயத்தையும் ஊடும் பாவுமாய் நெய்ய முயன்றது. எனக்கு அது புது முயற்சி. நான் அறிந்தவரை முதல் முயற்சியும்கூட. புரிபடாமலோ, அல்லது என் போதாமையாலோ, சரிவரப் புலப்படாமல் போனமைக்கு நான் வருந்திப் பயனில்லை. போகட்டும். இந்த வாசக நண்பரிடம் எனக்கொரு கேள்வியுண்டு. இவரைத் தனக்கான அரசியலோடு கூடிய தேர்ந்த அறிவாளியாக மதிக்கிறேன். விடுதலைப் புலிகள் அப்பாவிப் பொதுமக்களைக் கேடயமாக வைத்துப் போராடுகிறார்கள் என்பது இந்த நண்பரின் நிலைப்பாடு. இங்கிருக்கும் இலங்கைத் துணைத் தூதர் அம்சாவின் நிலைப்பாடும் இதுதான். அவரோடு விருந்துண்டு மகிழும் மேலும் சிலருக்கும் அதுதான் நிலைப்பாடு.

எனக்குத் தெரிந்த உண்மைகளோடும் இன உணர்வின்பாற்பட்ட சார்புகளோடும்கூட நான் அதை மறுக்கலாம்; விளக்கலாம். அதற்காக நான் அவர்களையே மறுக்கவோ விலக்கவோ தேவையில்லை. அவ்வகை அரசியல் நிலைப்பாட்டை இங்கே தவிர்க்கலாம். ஆனால் இந்த வாசக நண்பர் ஒரு கட்டத்தில் அவரது அறிவால் விட அவருடைய நேர்மையால் என்னை வசீகரிக்க, மகிழ்விக்க ஏன் மறந்தார் என்று தெரியவில்லை. சென்ற இதழ்க் கட்டுரையைத் தொடர்ந்து, 'கவனம்” தலைப்பில் 'தலித் முஸ்லிம்” பற்றி நான் குறிப்பிட்டிருந்தேன்; மனம் நொந்திருந்தேன். நண்பர் தன்னெழுச்சியாக அதைப் பற்றித்தான் முன்னுரிமை கொடுத்துப் பேசி என்னைத் தெளிவுபடுத்தியிருக்க வேண்டும். அதற்கு முற்றும் பொருத்தமுள்ள நண்பர் இவர்.

இஸ்லாத்தையே வெற்று மதமாக, பத்தோடு பதினொன்றாக மலினப்படுத்திவிடும் நோய்ச்சுட்டு அது என்னும் வருத்தம் எனக்குண்டு. நண்பரோ, கருணாநிதி பற்றிய கண்டடைதலே தனக்குத் தலை போகிற விஷயம் என்று தன்னை அத்தோடு ஏறக்கட்டிக்கொண்டுவிட்டார். மொழியைவிட மதம் முக்கியமில்லை என்று பங்களாதேஷ் பிறந்தது. மதத்தைவிட மொழியோ இனமோ முக்கியமில்லை என்பதாக இலங்கையும் தமிழ்நாடும் அணி மாறுகிறது. இனத்தைவிட, மதத்தைவிட எது முக்கியம் என்று தெரியாமல் இஸ்ரேலை ரௌடியாக வளர்த்துக்கொண்டிருக்கிறது அரபுலகம். எல்லாரும் அவரவர் தோதுக்கேற்றபடி வாய்மை பற்றியும் நேர்மை பற்றியும்தான் பேசிக்கொண்டிருக்கிறோம். வாழ்வதற்காயினும் தாழ்வதற்காயினும் நாம் எதையும் பேசித்தானே ஆக வேண்டும்.


******

அன்புமிகும், ஐயா, சரண் அவர்களுக்கு, தாங்களும், உயர்திரு அம்மா அவர்களும் நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன். இறைவனின் ஆசிகள் என்றும் உங்களை வந்தடையுமாக...!

''கவிதாசரண்” ஆகஸ்ட் - செப்டம்பர் 2008 இதழில் ''பாலையாய் திரிந்த மருதமும் சிகரமாய் உயர்ந்த மனிதரும்” - என்ற நெடிய கட்டுரை கண்டேன். அது குறித்து எனது எண்ணங்கள் சிலவற்றை இங்கே பதிவு செய்யலாம் என விரும்புகிறேன். கடந்த பல இதழ்களில் தங்களது அறிவுத் தீட்சண்யமும், தர்க்கத் திறமையும், தெளிவான சிந்தனைப் போக்கும் உள்ள கட்டுரைகளில், எழுத்தோவியங்களில் எனது மனதைப் பறி கொடுத்துள்ளேன். உங்களின் சொல்லாடல்கள் கண்டு வியந்திருக்கிறேன். ஆனால், முதன் முறையாக, ஒரு தவறான நபருக்கு, தவறான நோக்கத்தின் அடிப்படையில் தாங்கிப் பிடிக்கும் துரதிருஷ்டத்தை இந்த இதழில் கண்டேன். வேதனையில் மனம் நொந்தேன்.

நரகலை மிதிப்பவனின் கால்கள் மட்டுமல்ல, மனமும்கூட ஒரு கணம் கூசி நடுங்கும். அந்த நடுக்கம் உங்களையறியாமலே, உங்களுக்கு வந்திருக்கும் போலும்! அதனால்தான் என்னவோ, இக்கட்டுரையின் 13ஆம் அங்கத்தில் இப்படி எழுதுகிறீர்கள்:-

''இக்கட்டுரையிலிருந்து அங்கொன்றும், இங்கொன்றுமாகச் சில தொடர்களையோ, வாக்கியங்களையோ, உருவியெடுத்து, அவற்றின் நிறம், குணம், மணம் பற்றி பகுப்பாய்வு செய்யத் தொடங்கினால் நீங்கள் ஏமாந்து போக வாய்ப்புண்டு.”

எதையும் உருவவோ, புதிதாகச் செருகவோ, அவசியமில்லை. என்னை மன்னிக்க வேண்டும் அய்யா! இந்தச் சிற்றறிவு பெற்றவனின் கண்ணோட்டப்படி முழு மொத்த கட்டுரையையுமே இதழிலிருந்து உருவி எடுத்தால்தான் நல்லது என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம். ஏனெனில் கருணாநிதி பற்றிய தங்களது வாதம் முழுவதுமே, எவ்விதப் பாகுபாடும் இன்றி ஒரு தலைப்பட்சமாக எழுதப்பட்டுள்ளது என்றே நான் நினைக்கிறேன். அதில் தங்களது அறிவின் தீட்சன்யமும் தவறான முறையில் உபயோகிக்கப்பட்டுள்ளது. இது செப்டம்பர் மாதம். அண்ணா பிறந்த மாதம் அண்ணா நூற்றாண்டு விழாவை அரசும், மக்களும் கோலகலமாகக் கொண்டாடுகிற ஒரு நேரம் இது. அண்ணாவின் அரசியல் பங்குப் பணி பற்றி ஒரு கட்டுரையை நீங்கள் எழுதி இருந்தால், நேரப் பொருத்தம் கருதி, அது இந்த இதழுக்கும் அணி சேர்த்திருக்கும். அண்ணாவைப் பற்றிய ஒரு அரிய, ஆராய்ச்சி கட்டுரை என் போன்றவர்களுக்கும் படிக்கக் கிட்டியிருக்கும். ஆனால் - மூன்று மாதங்களுக்கு முன்பே பிறந்த நாள் கொண்டாடி தீர்த்து விட்ட மு.க.வைப் பற்றித் தாங்கள் இப்போது ''போற்றிச் சீரடி” பாடுவதன் அவசியம்தான் என்ன! அவசரம்தான் என்ன! கருணாநிதியை அவரது கூட்டணித் தோழர்களும் கைவிட்டு, மக்களும் கிட்டதட்ட கைவிட்ட நிலையில் அவர் மீது ஏதும் அனுதாபம் பிறந்துவிட்டதா உங்களுக்கு?

தாங்கள் பயப்படவோ, கவலை கொள்ளவோ வேண்டாம். கருணாநிதிக்கு தமிழக வரலாற்றில் எப்போதும் இடம் உண்டு. அதை யாரும் தட்டிப் பறிக்கப் போவதில்லை. பத்தாயிரம் பக்கங்களில் ஒருவன் மகாத்மா காந்தியின் வரலாற்றை எழுதுகிறான் என வைத்துக் கொள்வோம். கடைசி இரண்டு பக்கங்களிலாவது அவன் கோட்சே பெயரை எழுதித்தான் ஆக வேண்டும். அது வந்தே தீரும். அது காலத்தின் கட்டாயம். இயங்கியல் விதியின் ஒரு சின்ன துகள். கருணாநிதி கோட்சே அல்ல. ஆனால் கலைஞர் என்ன விதமாக சரித்திரத்தில் இடம் பெறுவார் என்பதில்தான் உங்களோடு நான் மாறுபடுகிறேன்; வேறுபடுகிறேன்.

ஒரு விதத்தில் பார்த்தால் தாங்களும் கலைஞரின் ஒரு யுக்தியை கனகச்சிதமாகப் பின்பற்றுகிறீர்கள் என்றே நினைக்கிறேன். அதாவது கருணாநிதி தன்னால் எதிர்கொள்ள முடியாத அரசியல் நெருக்கடிகள் ஏற்படும் இக்கட்டான நேரங்களில், ''நான் நாலாம் வர்ணம், சூத்திரன். எனவேதான் என்னை எல்லோரும் கவிழ்க்கப் பார்க்கிறார்கள்” என்று புலம்புவார்.

அதையேதான் தாங்களும் கட்டுரை முழுவதும் புலம்பி, அவரைத் தாங்கிப் பிடிக்கிறீர்கள். ஒன்றை மட்டும் இங்கே தெளிவுபடுத்த விரும்புகிறேன். ஜெயலலிதா பார்ப்பனர் குலத்தில் பிறந்ததோ, கருணாநிதி இசை வேளாளர் குலத்தில் பிறந்ததோ, அவர்கள் விரும்பிச் செய்த காரியம் அல்ல. பல்லாயிரம் வருடங்களாக இந்த நாட்டில், ஏற்கனவே இருந்த மனிதர்களால் செய்வித்த பகுப்பில், சிக்கிக்கொண்ட கோடானு கோடிப்பேரில் அவர்களும் ஒருவர் அவ்வளவுதான். எனவே, பார்ப்பனர் என்பதற்காக ஒருவரின் நடவடிக்கைகள், செயல்கள் எல்லாம் மேன்மைப்படுத்துவது எப்படி தவறான செயலாகுமோ - அது போன்று, சூத்திரன் என்பதற்காகவும், ஒருவரின் செயல்களை, அவர் புரியும் தவறுகளைப் புனிதப்படுத்துவதும் தவறு.

இது இன்னொரு விதமான புதிய பார்ப்பனீயம்! மேற்சொன்ன கட்டுரை முழுவதும், முழுக்க முழுக்கத் தாங்கள் செய்வது அதைத்தான்! தாங்கள் கருணாநிதியை பலவாறாக விமர்சனம் செய்துள்ளேன் என்கிறீர்கள். அவரது அன்றாட அரசியல் நடவடிக்கைகள், செயல்களை விமர்சிக்க நிறையப்பேர் உள்ளனர். அதைச் செய்ய ஒரு ராமதாஸ் - ஒரு நாஞ்சில் சம்பத் போதும்! ஆனால் அடிப்படையாக கருணாநிதியிடம் எதையெல்லாம் விமர்சனம் செய்ய வேண்டுமோ, அவை அத்தனையிலும், அவரைத் தூக்கிப் பிடித்திருக்கிறீர்கள்.

என்ன, மு.க. மீது திடீர் பரிவு! தாங்கள் சொல்கிறபடி மு.க. அடிமட்டத்திலிருந்து, தனது உழைப்பால், திறமையால் மேலே வந்தவரா...? அதையும் பார்ப்போம். முதலில் தி.மு.க. ஆரம்பிக்கும்போது திருவாளர் மு.க. அண்ணாவுடன் இல்லை. அவர் பெரியாருடன் இருந்தார். முதலே கோணல்தான்! ''ஆணை இடுகிறார் அய்யா... ஊளையிடுகிறார் அண்ணா” என்று 'குடிஅரசில்' எழுதியவர்தான் மு.க. அதன் பிறகு காற்று திசைமாறி அடிக்கவே, அண்ணாவிடம் வந்தார் மு.க. தி.மு.க.வின் அன்றைய மேல்மட்டத் தலைவர்கள் எல்லோருமே படித்தவர்கள். பட்டதாரிகள்! மேல்மட்ட அரசியலை மிக நாகரிகமாக நடத்தியவர்கள்!

கருணாநிதிக்குத் தான் படிக்கவில்லையே என்ற தாழ்வு மனப்பான்மை எப்போதுமே உண்டு! அதுமட்டுமல்ல, கபடம், சூதுவாது, ஆள் சேர்ப்பது, நைச்சியமாகப் பேசுவது, எல்லாமும் உண்டு! அவர் கழகத் தலைவரானது இந்தப் படிகளில் ஏறித்தான்! ஆனானப்பட்ட எம்.ஜி.ஆரே அவரிடம் ஏமாந்து போனார். மற்றவர்களைப் பற்றிச் சொல்ல என்ன இருக்கிறது...?

கருணாநிதி நல்ல பேச்சாளர்தான்! எழுத்தாளர்தான்! அவரைவிடவும் பேச்சிலும் எழுத்திலும் கெட்டிக்காரர்கள் அன்றைக்கு தி.மு.க.வில் நிறையபேர் இருந்தார்கள். ஏன் - இன்றைக்கும் இருக்கிறார்கள்! தமிழிலும், ஆங்கிலத்திலும் சிம்ம கர்ஜனையிடும் ஈ.வி.கே. சம்பத், நாவலர், சி.பி. சிற்றரசு, 'டார்பிடோ” ஜனார்த்தனம், ஏ.வி.பி.ஆசைத்தம்பி, இப்படிப் பலர்! எழுத்தில் எடுத்துக் கொண்டால், ஏ.கே. வேலன், டி.கே. சீனிவாசன், ராதா மணாளன், தில்லை விள்ளாளன், எஸ்.எஸ். தென்னரசு, இன்னும் பலர்! இவர்களை மீறிக்கொண்டு தன்னால் முன்னேற முடியாது என்பதைக் கருணாநிதி - எப்படியோ உணர்ந்திருந்தார்.

அதுமட்டுமல்ல, கொஞ்ச நாட்களிலேயே அண்ணாவுக்கு நெருக்கமாகியும் விட்டார். தி.மு.க. ஈடுபட்ட முதல் தேர்தலிலேயே அவர் சட்டமன்ற உறுப்பினராயும் ஆனார். நாவலர், கண்ணதாசன் போன்றோர் அப்போது தோற்றுப்போயினர் (தேர்தலில்). கட்சியை விட்டு சம்பத்தை வெளியேற்றியதில் கருணாநிதியின் பங்கு கணிசமானது. கட்சியில் சம்பத்தின் இருப்பு தனது முன்னேற்றத்திற்குப் பெரும் தடைக்கல் என்பதை கருணாநிதி சரியாக உணர்ந்திருந்தார். சம்பத்தும் சரி, நாவலரும் சரி கொஞ்சம் புத்திசாலித்தனமாக நடந்திருந்தால், கருணாநிதி முதலமைச்சர் பதவியைக் கனவில்கூட நினைத்துப் பார்த்திருக்க முடியாது. அதுதான் உண்மையும்கூட.

கருணாநிதி என்பவர் இயல்பில் யார்? அவர் எப்படிப்பட்டவர்? என்பதைக் கண்ணதாசனின் ''வனவாசம்” (சுயசரிதை நூல்) படிப்பவர் யாரும் உணர முடியும். பண பலமும், பத்திரிக்கை பலமும் உள்ள ஆதித்தனாரையும், கட்சியிலும் வெளியிலும் ஏகோபித்த செல்வாக்கு பெற்ற எம்.ஜி.ஆரையும் கைக்குள் போட்டுக்கொண்டு கபடமாக அவர் அடைந்ததுதான் முதலமைச்சர் பதவி. இந்தக் கபடமும், சூதுவாதும், இச்சகம் பேசுதலும்தான் ஒரு சூத்திரனின் பின்னணியில் உள்ள ''உழைப்பு(?)” என்றால், 'உழைப்பு” என்பதன் உண்மையான பொருளை நாம் இனி அகராதிகளில் புதிதாகத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். கட்சிக்குள் நிறைய குழப்பம் செய்பவராக கருணாநிதி மீது அடிக்கடி புகார்கள் வந்தன அண்ணாவிடம்!

அண்ணா எல்லாவற்றையும் தட்டிக் கழித்தார். அல்லது சமாதனமாகப் போகும்படி சொன்னார். கருணாநிதி ''முன்னேறிய” வரலாறு இதுதான்! ஜெயலலிதா ஒரு முப்பது வருடத்திய அரசியல்வாதிதான். ஆனால் அவருக்கும் முன்பே, எம்.ஜி.ஆருக்கும் முன்பே, காமராஜர் காலத்திலேயே, கருணாநிதி தன்னை சூத்திரன் என்றும், நாலாம் வர்ணத்தவன் என்றும் சொல்லி 'சாதி அரசியல்” செய்தவர்தான் கருணாநிதி. அப்போதெல்லாம் இவருக்கு எதிராக எந்தப் பிராமணத் தலைமை இருந்தது? என்பதை நீங்கள்தான் சொல்லவேண்டும். எம்.ஜி.ஆரை எதிர்த்து 'மலையாளி” அரசியல் செய்தவர், இன்று ஜெயலலிதாவை எதிர்த்து பிராமண அரசியல் செய்கிறார். நாளை விஜயகாந்தை எதிர்த்து 'தெலுங்கு” அரசியல் செய்வார்.

அய்யா, சரண் அவர்களே... இவரது (கருணாநிதியின்) சூத்திர இருப்பு - நீங்கள் நினைப்பது போல, அவருக்கு அவமானமோ, அசிங்கமோ அல்ல. அது, அவரது அரசியல் ஏற்றத்திற்கு, பொருளாதார ஏற்றத்திற்கு ஏறிச் செல்லும் ஏணிப்படி. இது தெரியாமல் தமிழ் என்றும், இனம் என்றும் சும்மா வெறுதே கூச்சல் போட்டுக் கொண்டு, கருணாநிதி என்னும் ''பிழைப்புவாத சூத்திரனை” - ஏதோ குடிசையில் ஒருவேளை கஞ்சிக்கும் வழியின்றி செத்துப் பிழைக்கும் ஏழை சூத்திரன் போல - தாங்கிப் பிடிப்பதைக் கண்டு அழுவதா? சிரிப்பதா? எனப் புரியவில்லை.

ஒருவன் தாழ்ந்த சாதியில் பிறந்துவிட்டால் மட்டுமே போதும் அவன் என்ன அக்கிரமங்கள், அநியாயங்கள், பழிக்கு அஞ்சா பாவங்கள் செய்து சமூக மேல்மட்டத்திற்கு வந்தாலும், அதை எல்லாம் கண்டு கொள்ளாமல், ''ஆஹா... அதனாலென்ன! அவன் எப்படியோ முன்னுக்கு வந்தான் பாருங்கள்.. அதை மட்டுமே பார்க்க வேண்டும்? அது பெரிய சாதனை அல்லவா...?” என்று ஒருவன் கணித்தால், அவனைப்பற்றி நாம் என்ன சொல்ல...! உங்கள் கட்டுரை கிட்டதட்ட இதுபோன்ற கணிப்பைத் தரும் ஒன்றாகவே இருக்கிறது.

சாய்பாபா ஒரு போலி ஆன்மீகவாதி. கருணாநிதி ஒரு போலி பகுத்தறிவுவாதி. (சரி, போகட்டும்.) ஆனால் வெளிக்கு இருவரும் இருவேறு துருவங்கள். ஒருவர் கன்னியாகுமரி, இன்னொருவன் காஷ்மீர். சாய்பாபாதான் தமிழக அரசுக்கு ஏதோ நிதி உதவி செய்வதாக, அது சம்பந்தமாக முதலமைச்சரைச் சந்திக்க வருகிறார். முதலமைச்சரும் சந்திக்கிறார். அதில் ஒன்றும் தவறில்லை. அதுவும் சரி. அரசு காரியமாக, தன்னில் இருந்து முற்றிலும் முரண்பட்ட ஒருவர், தன்னைச் சந்திக்க வரும்போது, அவரை முதல்வர் தனது அலுவலகத்தில் வைத்துத்தான் சந்திக்க வேண்டும். அதுதான் முறையும்கூட. அனால் கருணாநிதி அவரை தன் வீட்டில் வைத்துச் சந்தித்ததன் பின்னணியே, தனது பெண்டு பிள்ளைகள் அவரிடம் ஆசி பெற வேண்டும் என்பதற்காகத்தானே அய்யா...! மாயமந்திர மோசடியில் வரவழைக்கப்பட்ட ஒரு தங்க மோதிரத்தை ஒரு அமைச்சரே (துரைமுருகன்) பெற்றுக் கொள்கிறார். இதனை விமர்சிப்பவர்களைத் தாங்கள் குறை சொல்கிறீர்கள். அவர்களது விமர்சனங்களில் தாங்கள் என்ன குறை கண்டீர்கள்!

- கோவில் விழாவில் தீ மிதித்ததற்காக அந்தியூர் பெரியசாமி என்ற தனது அமைச்சரைப் பதவியிலிருந்து நீக்கிய கருணாநிதியை,
- தன்னை வரவேற்க வந்த தொண்டனின் நெற்றில் தீற்றிய குங்குமம் இருப்பதைக் கண்டு, 'என்னய்யா, நெற்றியில் இரத்தம்” என்று கிண்டலடித்த கருணாநிதியை, அவரது சாய்பாபா சந்திப்புக்காக விமர்சித்தால் அதில் என்ன தவறு? கருணாநிதிக்கு ஒரு நியாயம்? மற்றவர்களுக்கு இன்னொரு நியாயமா?

''உபதேசம் ஊருக்குத்தான். உனக்கல்ல,” என்றானாம் ஒருவன் தன் மனைவியை பார்த்து. தயாளு அம்மாள் நெற்றியில் தினமும் ஒரு ரூபாய் சைசுக்கு குங்குமம் இட்டுக்கொண்டு வருகிறாரே... அது ஏன்? உங்கள் வாதப்படி இது கருணாநிதியின் பெண் சுதந்திரத்தைக் காட்டுகிறது. கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை. எதிர்வரும் தேர்தலில் கருணாநிதி தனது வீட்டுப் பெண்கள் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்தால் அதை ஏற்றுக்கொள்வாரா? அல்லது, குறைந்தபட்சம் உங்கள் இஷ்டப்படி வாக்களியுங்கள் என்றாவது சொல்வாரா? அவ்வாறு சொல்லி, அதற்கு அனுமதியும் அளித்தால், அதுவல்லவோ பெண் சுதந்திரம்!

அவரது மஞ்சள் துண்டு விவகாரத்தை, தாங்களே மூட நம்பிக்கை என - சொல்லிவிட்டதால், அதுபற்றி இங்கு விவாதமில்லை. அடுத்து மதுவிலக்கு விவகாரத்திற்கு வருவோம். மது அருந்துதல் - சோமபானம் - சுராபானம் - அருந்துதல் என்பதெல்லாம் பண்டை காலத்துப் பழக்கங்கள்தான், மறுக்கவில்லை. வரலாற்றின் ஒவ்வொரு காலகட்டத்திலும், ஒவ்வொரு விதமான கொள்கைகள், கோட்பாடுகள், தர்மநெறிகள் பின்பற்றப்பட்டு, அவைகள் அந்தந்த காலகட்ட வாழ்க்கை நெறிகளாகப் பின்பற்றப்பட்டன. நாம் விரும்பியோ, விரும்பாமலோ, சமூக வாழ்வுடன் ஒன்றிப்போக, நாமும் சில சுய கட்டுப்பாடுகளுக்கு ஆட்படுகிறோம். மது அருந்தாமை என்பது அவற்றில் ஒன்று!

ஆதி மனிதன் நிர்வாணமாகத் திரிந்தான் எனில், இன்று நாம் என்ன ஆடை அணியாமலா திரிகிறோம்...? இல்லைதானே! மது அருந்துதல் மட்டுமல்ல - பெண்களின் களவொழுக்கமும் கூட அன்று அனுமதிக்கப்பட்ட ஒன்றுதான்! பரத்தைமை பாவமில்லை - அன்று! அன்று அது அனுமதிக்கப்பட்டதெனில், அது அன்றைய கலாச்சாரவாழ்வு சார்ந்த செயல்! ஆனால், இன்று அதே செயலை நமது வீட்டுப் பெண்கள் செய்ய, நாம் ஒப்புவோமா? நாம் வாழ்வது இருபத்தொன்றாம் நூற்றாண்டில்! சங்க காலமல்ல. குடியை மறந்திருந்த ஒரு தலைமுறையை, மீண்டும் குடிக்கத் தூண்டிய புண்ணியவான் கருணாநிதி!

''மதுவை தயவு செய்து கொண்டு வரவேண்டாம்” - என்று அன்று மு.க.வை கெஞ்சியது ராஜாஜி மட்டுமல்ல! காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிபும்கூடத்தான். இஸ்மாயில் சாகிப்புக்கு என்ன 'பார்ப்பன” பின்னணி இருக்கிறது? இன்றும்கூட மேலைநாட்டுக் கலாச்சார வாழ்வில் 'குடிப்பது” ஒரு அம்சம்தான்! மது அருந்துவது பாவமல்ல என்பது உங்கள் அறம் சார்ந்த நெறியாக இருக்கலாம். மதுவால் சீரழிந்த குடும்பங்கள் எத்தனை! குடை சாய்ந்த கோபுரங்கள் எத்தனை எத்தனை? தெரியாதவர்களா நீங்கள்? கருணாநிதியை தூக்கிப் பிடிக்கும் ஆர்வத்தில், இன்னொரு சமூகத்தீமையையும் சேர்த்து தூக்கிப் பிடிக்கிறோம் என்பது கூடத் தெரியாமல் போவது, எத்துணை துரதிருஷ்டம்!

கருணாநிதி அன்று ஆரம்பித்து வைத்த பாவச் செயலை, எந்த அரசுகள் வந்தபோதும் திரும்ப பெற்றுக்கொள்ள முடியவில்லையே, பார்த்தீர்களா! எம்.ஜி.ஆரிடம் பணம் வாங்கி, இவரிடம் (கருணாநிதி) பணம் வாங்காமல் போனதற்காக பிரபாகரன் ஏன் கருணாநிதியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்? ஈழத் தமிழர்களுக்காக எந்தத் துரும்பைக் கிள்ளிப் போட்டார் கருணாநிதி? ஈழத் தமிழர்களையே தனது அரசியல் பகடைக்காயாக உருட்டி விளையாடியவர் கருணாநிதி! தனக்கு ''வேண்டப்பட்ட” போராளிக்குழுக்களை தமிழகத்தில் அனுமதித்து தமிழ் மக்களின் நிம்மதியைக் கெடுத்தவர் கருணாநிதி! பட்டனம்காத்தான் சாவடிச் சம்பவமும், பத்மநாபா படு கொலையும் இவர் நாடாண்ட காலத்தில்தான் நடைபெற்றன. இன்று தமிழ் மக்களைக் கொன்று குவிக்க, ஆயுதங்களையும், பிற ராணுவத் தளவாடங்களையும் மத்திய அரசு, சிங்கள ராணுவத்திற்குக் கொடுக்கிறது.

- மறத் தமிழன் கருணாநிதி துடித்தெழ வேண்டாமா?
- இதுவே, இவர் பங்கு பெறாத மத்திய அரசாக இருந்தால் மாலை நேர மேடைகளில் போர்ப்பரணி பாடியிருப்பாரே!
- உடன்பிறப்புக்கு உணர்ச்சி மிகு கடிதம் தீட்டியிருப்பாரே!
-இப்போது எங்கே போனது இவரின் இனமானம்? தன்மானம்?
- இதற்கும் கூட உங்கள் பாணியில் ஒரு விளக்கம்! ஒரு சால்ஜாப்பு!

அய்யா அவர்களே! உங்கள் விளக்கத்தைப் படித்தால் கருணாநிதியே கூட சிரிப்பார்! ஏதேது! நமக்கே தெரியாத விளக்கங்களை எல்லாம் கவிதாசரண் அழகாக கொடுத்திருக்கிறாரே என்று! (அநேகமாக உங்கள் கட்டுரை 'முரசொலி”யில் மூன்று நாட்களுக்கு மறு பிரசுரம் காண வாய்ப்பிருக்கிறது! ஏனெனில் பதினான்கு பக்கமல்லவா எழுதி தீர்த்திருக்கிறீர்கள்?) கருணாநிதியின் இன்றைய ''தேசிய அமைதிக்கு” என்ன காரணம்?

- மத்திய அரசை எதிர்த்துப் பேசினால் - மந்திரி பதவி போகும்!
- மந்திரி பதவி போனால் மாதாமாதம் வரும் 'கப்பம்” வராது!
- தனது செல்ல மகள் கனிமொழியை மந்திரியாக்க முடியாது!
- சேதுசமுத்திரத் திட்டத்தால், கப்பலோட்ட முடியாது! கப்பம் பார்க்க முடியாது!
- இது, இது மட்டும்தானே காரணம்!

'தென்னாட்டு முஜிபுர்ரகிமான்” எல்லாம் பழைய கதையாயிற்றே! நெடுமாறன், ராமதாஸ், வைகோ, பற்றி எல்லாம் எழுதி இருக்கிறீர்கள்.

- இவர்கள் கருணாநிதிக்கு எதிராகச் செயல்படுவதைக்கூட விமர்சித்திருக்கிறீர்கள்! தி.மு.க.வின் அப்பாவி பாமரத் தொண்டன் கேட்பது போல, “அய்யய்யோ, இவர்கள் ஜெயை விமர்சிக்க மாட்டேங் கிறார்கள். எப்போதும் நமது தலைவருக்குத்தான் டப்பா கட்டுகிறார்கள்,” என்றெல்லாம் ஆதங்கப்படுகிறீர்கள்.

- என்ன செய்ய! இவர்கள் கவிஞர்களுமல்லர். இவர்களுக்கு கவிதை எழுதத் தெரியவும் செய்யாது! அதனால் பேசுகிறார்கள்!
- அரசு நிர்வாகத்தில் யார் இருக்கிறார்களோ, அவர்களைப் பற்றிய விமர்சனம்தான் அதிகமிருக்கும்! அதைத் தாங்கிக்கொள்ளத்தான் வேண்டும்!
- ஜெ. இருந்தபோது அவரைப் பற்றித்தான் பேசினார்கள்!
- இப்போது நமது ''மும்முடிச் சோழன்” இருக்கிறார். இவரைப் பற்றிப் பேசுகிறார்கள்!!
- ராமதாஸ் கூட்டணி தர்மம் பேண வேண்டும் என்கிறீர்கள். கருணாநிதி எந்தக் கூட்டணி தர்மத்தைப் பேணினார்?
- கருணாநிதியின் இந்த 60 ஆண்டுகால அரசியல் அனுபவத்தில், அவர் எத்தனையோ பேருக்கு 'ஆப்பு” வைத்திருக்கிறார். ஆனால் அவருக்கு 'ஆப்பு” வைத்த முதல் நபர் ராமதாஸ்தான்! இதற்காக ராமதாஸ் வரலாற்றில் இடம் பெறுவார்!
- கருணாநிதியை அவரது அரசியல் தளத்திலேயே எதிர்கொண்டவர் ராமதாஸ்.
- ராமதாஸ் தன்னை 'அய்யா” என்றும், தனது மகனை 'சின்ன அய்யா” என்றெல்லாம் அழைக்க விரும்புவது சரியில்லைதான்.
- ஆனால் அதையும் கூட அவருக்குக் கற்றுத் தந்தவர் தி.மு.க.வினர்தான்!
- யாரையும் பெயர் குறிப்பிடாமல், இடுகுறிப் பெயரால் அழைக்கும் வழக்கத்தைத் தமிழகத்தில் முதன்முறையாக அமுல்படுத்தியவர்கள் அவர்கள்தான்.
- ''நாஞ்சிலார்”, ''ஆற்காட்டார்”, ''வீரபாண்டியார்” - இப்படியெல்லாம் அழைத்தவர்கள் யார்? ஏன், டாக்டருக்கே படிக்காத கருணாநிதி தன்னை 'டாக்டர்” என்று அழைக்கும் போது, நிஜமாகவே வைத்திய சாஸ்திரம் படித்த ராமதாஸ், தன்னை அழகான தமிழில் ''மருத்துவர்” என அழைக்கிறாரே, அதை ஏன் குறிப்பிட மறந்தீர்கள்?

சொல்லச் சொல்ல விரியும். எழுத எழுதப் பெருகும். உங்களது கட்டுரையின் அடிப்படைக் கருத்தையே நான் மறுக்கிறேன்.

- ஒரு அம்பேத்கர் போலவோ,
- ஒரு காமராசர் போலவோ,
- ஒரு கக்கன் போலவோதான் வரலாற்றில் கருணாநிதியின் இடமும் இருக்கிறது என்பதாக, உங்கள் நெஞ்சைத் தொட்டுச் சொல்ல முடியுமா? உண்மையாகவே அப்படித் தாங்கள் நினைத்தால், இந்தக் கடிதத் தாள்களைக் கிழித்துப்போட உங்களுக்கு உரிமை உண்டு.

அவ்வாறில்லை எனில் -
- கருணாநிதியை பற்றிய தாங்கள் முழு மதிப்பீடும் வெற்று அபத்தக் களஞ்சியமே!
- இதைச் சொல்வதற்காக என்னை தயை கூர்ந்து மன்னிக்க வேண்டும்.
ஒருவனது செயல்கள் அவன் பிறந்த சாதியைக் கொண்டே மதிப்பிடப்படுகின்றன என்பது சனாதனவாதிகளின் கூற்று!
- அதை நீங்கள் மெய்ப்பிக்க ஏன் படாத பாடு படுகிறீர்கள்?
- கருணாநிதிக்கு வக்காலத்து வாங்கியதில் இதைத்தான் செய்திருக்கிறீர்கள்.
தமிழ், தமிழ் என முழங்கி, அதீத தமிழ் உணர்ச்சி முழக்கத்தால், இன்று தமிழ் தெருவில் நிற்கிறது, ஆங்கிலம் அரசோச்சுகிறது. அது போல,
அதீத பார்ப்பனிய வெறுப்பால், பார்ப்பனியமே பாராளும் நிலைமையை தயவு செய்து உருவாக்கி விடாதீர்கள்! புதிய பார்ப்பனியத்திற்கு இடம் கொடுத்து விடாதீர்கள்!! ஏனெனில், பார்ப்பனியம் என்பது ஒரு நெறிமுறை. அது பார்ப்பனர்களிடம் மட்டும்தான் இருக்கிறது என்பது உண்மையல்ல. புரியும் உங்களுக்கு. போதும் முடிக்கிறேன்.

நன்றி. வாழ்த்துக்கள்!

அன்புள்ள
கே.எஸ். முகம்மத் ஷுஐப்

Pin It