மழை நீர் பட்டுத்தெறித்து
பளபளக்கும்
இலைகளின் பசுமையையொத்த
உன் மென் சிரிப்பில்
பூத்திருக்கிறது
எனக்கான ஒற்றைச்சொல்
செவ்விதழ் மறைத்துப்போராடும்
உன் வெண் முத்துப்பரல்கள்
வார்த்தைகளை பூச்சரமாய்
உன் பாதத்தில் கிடத்துகிறது
தனிமை குறித்தான
நீல மேகக்களைப்பில்
தளர்ச்சியான சொற்கள்
உன் குவளைக்கண் ஒத்தடத்தில்
சரிந்து வீழ்கிறது
பாதி மயக்கத்தில்
உன்னைக்கடந்து போகும்
போதெல்லாம்
உன் காலடிச்சொற்கள்
பட்டாம் பூச்சிகளாக உருமாறி
நிறம் வளர்க்கப்போராடுகிறது
என்னைச்சுற்றி
என் கண்களிலிருந்து
வழியும் நிறங்களும்
வான வில்லினை பா¢கசிக்க
மனம் முழுவதும்
மீண்டுமொரு குழந்தையின்
பண்டிகைக்கால மகிழ்ச்சி
இளம் வயதினிலேயே
கணவனுடன் நிறங்களை இழந்து
முதல் முதலாக
ஊர்த்திருவிழ காண வரப்போகும்
உன்னிடம் என் காதலைத்தொ¢விக்க
சேகரித்துக்கொண்டிருக்கிறேன்
ஒரு கோடி நிறங்களை
உனக்காக மட்டுமே
-பிரேம பிரபா