தனியறையில்
நிகழ்ந்த
அந்த துயர சம்பவத்தை
அக்கணமே
யாரிடமாவது
சொல்ல வேண்டுமென துடித்து
உள்ளூர் தோழியொருத்திக்கு
எண்ணழுத்தினேன்..
தொடர்பு எல்லைக்கு
வெளியேயிருப்பதாக சொல்லியது
பதிவு செய்யப்பட்ட குரல்..
அடுத்து
நெடுந்தொலைவிலிருக்கும்
தோழிக்கு அழைக்க
மாதக் கூட்டத்திலிருப்பதாகச் சொல்லி
அழைப்பைத் துண்டித்தாள்..
என்னவனுக்கு
தொடர்புகொள்ள
அழைப்பு முழுமையாய் சென்று
நின்றுவிட்டது..
வேறு எதுவும்
செய்யத் தோன்றாமல்
வலிகளையெல்லாம்
முடிந்தவரை வார்த்தைகளாக்கி
வடித்து விட்டு
கவிழ்ந்து படுத்தேன்..
===========
காதல் செய்வதா?
வேலை செய்வதா?
குழப்பத்துடன் சிந்திக்க ஆரம்பித்தேன்..
வேலை காதலையும்
காதல் வேலையையும்
அனுமதிப்பதில்லை..
சிறிது உட்கார்ந்து யோசித்தேன்..
இரண்டிற்கும் சமமான
நேரத்தை
ஒதுக்கலாமென்றல்
காதலும் வேலையும்
ஒன்றானதல்ல..
சிறிது எழுந்து யோசித்தேன்..
காதலை வேலையாகவும்
வேலையைக் காதலாகவும்
செய்யலாமெனில்
நிகழ்த்துதலில் ஏற்படும்
சிரமங்கள் உறுத்தின..
சிறிது நடந்து யோசித்தேன்..
ரகசியம் பிடிபட்டது
காதல் நேரத்தில்
காதலையும்
வேலை நேரத்தில்
வேலையையும்
செய்வதென தீர்மானிக்கையில்
அவனிடமிருந்து
குறுஞ்செய்தி வந்தது..
அலைபேசியை அணைத்து விட்டு
கணிணியை இயக்கினேன்..
இது வேலை நேரம்.
==========
எல்லாவற்றையும்
சொல்லிவிட்டால்
பின் எதைத்தான்
உள்ளிருத்தி வைப்பது?
எல்லாவற்றையும்
கேட்டுவிட்டால்
பின் என்னதானிருக்கும்
சொல்வதற்கு?
தேவையானதை கேட்டும், சொல்லியும்
அனாவசியத்தை விட்டும், விலகியும்
நடக்கலாம்..
பரிச்சயமற்ற சாலையோரங்களில்
அவ்வப்போது எட்டிப்பார்க்கும்
மஞ்சள் நிறப்பூக்களையும்
கோடை வெயிலை மறைத்து நிற்கும்
வெண்மேகத்தையும்
தந்து செல்லும்
புரிதலினூடாகும் நம் வாழ்க்கை..
=====
என் தூக்கத்தை
கனவுகள் கைப்பற்றுகின்றன..
கனவுகளில்
விரும்பும். வெறுப்புமுள்ள
அறிமுகமற்ற, அறிமுகமுள்ள
சில பேர்
தன் விருப்பம் போல் உலவுகின்றனர்..
அவர்களை விரட்டும் முயற்சியில்
வெற்றி தோல்வி காணுமுன்
அதிகாலை வந்து விடுகிறது..
சில நாட்களுக்குப் பின்
முடிவொன்றைக் கைக்கொண்டேன்
‘பழிக்குப்பழி வாங்க‘
என் கனவுகளில் துரத்தியவர்களின்
கனவுகளில் நுழைந்து
தாக்கலாமெனத் திட்டமிட்டேன்
சொல்லிவைத்தாற்போல்
அத்தனைபேர் கனவிலும்
அவரவர் உருவங்களே
உலவிக் கொண்டிருந்தது..
உடனடியாகத் திரும்பி
என் கனவில் புகுந்து
உற்றுக் கவனித்தேன்
என் நிழலையொத்த
உருவங்கள் நிழலாடின..
=====
சில காரணங்களைக்
கற்பித்துக் கொண்டு
முடியாதென்கிறாய்..
எந்தவொரு
காரணமுமில்லாமல்
முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்..
========
உன் மீதான நேசத்தை
வானில் ஒளித்து வைத்து விட்டு
ஏறிட்டுப் பாரென்றேன்
மேகத்தில் மிதந்தாய்..
மழையில் பொதித்து விட்டு
நனையச் சொன்னேன்..
வானவில்லின் வண்ணங்களில்
பிரமித்தாய்..
மண்ணில் புதைத்து விட்டு
தோண்டிப் பாரென்றேன்..
விதையொன்றை ஊன்றினாய்..
ஆலமரத்தின் பொந்தில் அடைத்துவிட்டு
சுற்றிப் பாரென்றேன்
விழுதுகளில் ஊஞ்சலாடினாய்..
இறுதியில்
உள்ளத்திலிருந்து பிடுங்கி
உதடுகளேற்றி
ஒற்றை முத்தமிட்டு நகர்ந்தேன்
பேச்சற்று பின் தொடர்ந்தாய்..
அந்த சாலையில்
இப்போது
நீயும், நானும், முதல் முத்தமும்..
======
என்னுடைய அழைப்பை
அலட்சியப்படுத்துகிறாய்..
பிறகு பேசலாமென
பதிலுக்குக் காத்திராமல்
துண்டிக்கிறாய்..
பரிதாபத்துடன்
திரும்பும்
மிதமிஞ்சிய நேசத்தின்
நிலை கண்டு
வலிக்கத்தான் செய்கிறது..
இருப்பினும்
எப்போதாவது
நீ வேண்டி நிற்க
நேருமென
பதப்படுத்தி வைக்கிறேன்
களங்கமற்ற நேசத்தை
காலத்தின் கோப்பைக்குள்..
========
நீ
முன்னர் உதிர்த்த
ஒற்றை வார்த்தையின்
கைப்பிடித்து
நெடுந்தூரம் வந்துவிட்டேன்..
இது ஒருவழிப்பாதைதான்
உடன் நீயும் வரலாம்
திரும்ப இயலாது..
மறந்துவிடாதே
திரும்பப் பெற்றுக் கொள்ள
வார்த்தைகள்
வெறும் பொருளல்ல..
========
‘சாப்பிட்டாயா’வென
வேளைக்கொரு தரம் கண்காணிப்பு..
‘எங்கே இருக்கிறாய்’ என
மணிக்கொருமுறை விசாரிப்பு..
மனநிலையறியத் துடிக்கும்
ஒருவித தவிப்பு..
எதையேனும் பகிர்கையில்
தோன்றும் பூரிப்பு..
இவையேதும் இல்லாவிடினும்
ஒன்றும் மாறப்போவதில்லை..
வெட்டாமலிருந்தாலும்
வளரும் நகத்தினைப் போல்..
பேசாமலிருந்தாலும்
பெருகும் நேசம்..
=========
-இவள் பாரதி (