தொட்டெழுப்பியது மாயக்கரமொன்று
வளைக்கரத்தின் ஸ்பரிச இசையில்
தனை மறந்தவன் சுக மயக்கத்தில்
நகத்தீண்டலில் சிலிர்க்குமுடலை கரமேந்தித்
தழுவுகையில் கலக்கிறது உயிர்க்கலவை
மூச்சனலில் உருகி வழியும் காமம்
வியர்வை நதியாய்
பேசுகிறோம்;பிதற்றுகிறோம்;பித்தமென உளறுகிறோம்
அர்த்தங்களை தொலைத்த வார்த்தைகளைத் தேடிச் செதுக்கி
சிற்பமாக்கும் முயற்சி;அரூபச்சிற்பம்
ஏதொ ஒரு சுழலுக்குள்
இழுத்துப்போகிறது உருவமற்றக்குரல்
நீந்தி விளையாடலில் நேரம் போவதறியாமல்
சேவல் கூவத் திடுக்கிட்டு விலகி நாணம் குழைய
தழுவுகிறாள் காற்றாய்
அணைத்தக்களைப்பில் ஆனந்த அயர்ச்சி
கூடலை முடித்த திருப்தியில்
களைத்துறங்கிய ர்வாண உடலெங்கும்
முத்தமுத்திரைகள்
வெளிச்ச விடியலில் கலைந்த தாள்களெங்கும்
ஈரம் அழித்த கவிதைகள்
தவமிருக்கிறோம் மற்றுமொரு இரவுக்கு
புதியக் கவிதைகளுக்காய்.
- அன்பாதவன், மும்பை