மொத்தமாக சந்தித்ததில்லை
இதுவரை...
அலுவலகம்விட்டுச் செல்லும்போது
அப்படியொரு கணம்
மனதிலே...
வீட்டிற்கு சென்றால்
அனைவரிடமும் எரிந்துவிழும்
மனநிலையில் நான்!
பேருந்தில் ஏறினேன்...
கூட்டம் அதிகமில்லை...
நகரத்தில் நெரிசலில்லா
பேருந்து பயணம்
கிடைத்தற்கரிய இன்பம்தான்
என்றாலும்...
மகிழும் நிலையில்
இல்லையென் மனநிலை!
“வீட்டிற்கு சென்றவுடன் தூங்கிடவேண்டும்.
யாரிடமும் எரிச்சல் கொள்ளக்கூடாது”
எண்ணிக் கொண்டிருக்கையில்
பிரகாசமானது பேருந்து!
ஒரு பெண்...
ஒரு அழகிய பெண்...
அழகு என்றால்
அனைவரும் காணத்துடிக்கும்
நாயகியின் அழகெல்லாம் இல்லை...
என்னால் மட்டும் உணரமுடிந்த
அமைதியான அழகு...
பார்த்ததும் பார்த்துவிட்டோமென்று
மனம் குதூகலிக்கும் அழகு!
கண்டதும் காதலிலெல்லாம்
நம்பிக்கையில்லை எனக்கு...
காதலுக்கு அழகையும் தாண்டி
அகமென்றொன்று உள்ளதல்லவா?
இவளை என் காதலியென்று
சொல்லமாட்டேன்... ஆனால்
இவள் என் காதலியானால்
அதிர்ஷ்டமென சொல்வேன்...
உளறத்தொடங்கியது உள்ளம்!
அவளுக்கும் அலுவலகத்தில்
பிரச்சனைகள் அதிகம் போலும்...
அவள் முகத்தில்
அப்படியொரு அசதி...
அழகான அசதி!
அமர்வதற்கு இடம்தேடி
சுற்றும்முற்றும் பார்த்தாள்...
இடமில்லாத ஏமாற்றத்தில்
இன்னமும் அழகு!
எழுந்து இடம்கொடுக்க
இதயம் துடித்தாலும்
தன்மானம் தடுத்தது!
அமர்ந்து கொண்டே
ரசித்துக் கொண்டிருந்தேன்!
பேருந்தின் நான்காவது கம்பி
பூர்வ ஜென்மத்தில்
புண்ணிய புருஷனாய்
இருந்திருக்க வேண்டும்...
அதை கட்டிக்கொண்டுதானே
நின்றுகொண்டிருந்தாள் அவள்!
உழைப்பாய் உழைத்து
தேடப்போவதில்லை யென்றாலும்
அவள் யாரென்றறிந்துகொள்ள
தவியாய் தவித்தது மனம்!
யாரைக் கேட்டால் தெரியும்?
விண்ணுலகம் சென்று
இந்திரனைக் கேட்டால் தெரியும்...
தேவலோகக் கன்னிகளில்
யாரங்கு இல்லையென்று?
கடல்நீல வண்ணச் சுடிதாரிலிருந்து
முழுநிலவாய்த் தோன்றியிருந்த முகத்தை
மிகஅழகாய் கம்பியில் சாய்த்துக்கொண்டு
ஜன்னலின் வழி
வெளி உலகிற்கு
ஒளி பரப்பிக்கொண்டிருந்தாள்!
சிறிது நேரத்திற்கெல்லாம்
உறக்கம் அவள் விழிகளை
ஆட்கொண்டது!
நித்திரையுடன் அவள் இமைகள்
நடத்திய அஹிம்சை யுத்தம்
சில நொடிகள் கூட
நீடிக்கவில்லை...
நித்திரை வென்றது!
மலர் மூடிக்கொண்டு
மீண்டும் மொட்டாவதுபோல்
இமைகள் இரண்டும்
மெதுவாய்...
மிக மெதுவாய்...
கட்டிக்கொண்டு விட்டன!
ஆச்சர்யம்...
குமரியாகத்தானே இருந்தாள்...
உறக்கம் தழுவியதும்
குழந்தையாகி விட்டாளே!
உறங்கும் மழலையை
வாஞ்சையுடன் காணும்
தாயின் ஸ்தானத்தில்
என் விழிகள்
அவளையே பார்த்துக்கொண்டிருந்தன!
பாழாய்ப் போன பேருந்து
இப்படியா நிற்கும் அவசரமாய்...
திடுக்கிட்டு விழித்தாள்...
விழித்ததும் வேகமாய் குனிந்து
வாசல் வழி நோக்கினாள்...
“இறங்கிவிடுவாளோ?”,
பதைபதைத்தது மனம்.
தான் இறங்கும் இடமில்லையென்றதும்
நிம்மதி அவளுக்கு...
அவள் இங்கே இறங்கவில்லையென்றதும்
நிம்மதி எனக்கு!
மீண்டும் சிறிது நேரம்
என் விழியின் பணி
தடையின்றிச் சென்றது!
திடீரென்று ஒரு உருவம்
அவளை மறைத்து
குறுக்கே வந்தது...
நல்ல வேளையாய்
உடனடியாய் விலகிச் சென்றது.
இன்னும் சிறிது நேரம்
நடுவில் நின்றிருந்தால்
போர்க்களமாகியிருக்கும் பேருந்து!
அமைதியாய் நின்றுகொண்டிருந்தாள்...
அவ்வளவு நேரமாய்
காற்றை சமாளித்துக்கொண்டிருந்த
அவள் கூந்தல்
லேசாகக் கலைந்தது...
அந்தக்
கரு நிற அருவியின்
ஒரு சிலத் துளிகள்
அவள் நெற்றிவழி வழிந்து
விழிகளின் குறுக்கே பாய்ந்து
கன்னத்தில் முத்தமிட்டன...
கூசியிருக்க வேண்டும்...
மின்னல் போலவள்
விரல்கள் வந்து
சிகையை சரிசெய்த
அழகைக் காண
இருவிழிகள் போதாது!
பேருந்து வேகம் குறைந்தது...
அவள் கைப்பையை எடுத்தாள்...
வாசலை நோக்கி விரைந்தாள்...
அவள் இறங்கியதும்
ஏதோ ஒன்று
என்னைவிட்டு வெளிவந்து
அவளைநோக்கி செல்வதாய்
ஒரு உள்ளுணர்வு!
உயிரென்னை நீங்கிச் செல்வதுபோல்
இதயத்தில் ஒரு வலி...
வலியின் வீரியம்
மெதுவாய் குறைந்து
மீண்டும் உயிர்பெற
சில நொடிகள் பிடித்தன!
தலையில் கைவைத்துக்கொண்டு
பைத்தியம் என்று
என்னைநானே திட்டிக்கொள்ள
லேசாகவொரு புன்னகை வந்து
மெதுவாக இதழ்களில் அரும்பியது!
மனக்கண்ணின் முன்னே
அவள் முகத்தாமரை
மங்கலாகி...
அலுவலகம் தெரியத்தொடங்கியது.
ஆனால் இம்முறை
எரிச்சல் தோன்றவில்லை...
மாறாக பிரச்சனைகள்
சுருங்கிவிட்டது போல்
மனதிலொரு நிம்மதி!
எது வந்தாலும் பார்த்துவிடலாமென
ஒரு நம்பிக்கை!
நான் இறங்குமிடமும்
வந்துவிட்டது...
பேருந்தில் ஏறியபோது
இருந்த மனதின் கணம்
எள்ளளவும் இல்லை இப்போது!
மகிழ்ச்சியாய் சென்றேன் வீட்டுக்கு!
அவளே அறியாமல்
அவளெனக்கு செய்த
பேருதவிக்கு என்
கோடானுகோடி நன்றிகள்
சமர்ப்பணம்!
- இரா.சங்கர் (