ஒரு நாள் அக்கா
ஓடியே போய்விட்டாள்

அப்பாவின் புளியஞ்சுமுக்கு
அம்மாவின் காயவைத்த கரண்டி
ஊராரின்
அடித்தொண்டை காரிய எச்சில்
எல்லாமும்
கொஞ்சம் சீக்கிரமே ஓடவைத்தன
அக்காவை

வெட்டிப் பொலி போட்டுட்டு வர்ரேன்னு
கிளம்பிய அப்பா
நள்ளிரவொன்றில்
தலைமூழ்கிய ஈரத்தோடு
பின்வாசல் வழியே நுழைந்தார்

அக்கா வளர்த்த பூச்செடியை
மாடு மேய்ந்தது
ஒன்றிரண்டு பழைய துணி
தீயில் வெந்தது

சாப்பாட்டுத் தட்டு
பேரீச்சம் பழக்காரனிடம்
இலவசமாய்ப் போனது
அக்கா பின்னாடியே சுற்றிக் கொண்டிருந்த
ஆட்டுக் குட்டியை
அறப்புக்காரன் இழுத்துப் போனான்

எல்லா நினைவுகளையும்
கொத்தி மிதித்த பின்
‘கலா அப்பா’ என்று எவரோ கூப்பிட்டபோது
கண் கலங்கியதும்
எரவானத்தில் செருகி வைத்திருந்த
தலைமுடிகண்டு கேவி அழுததும்
நிகழ்ந்தது
நேற்றுமுன்தினம்


பச்சியப்பன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.