Manவிடியலின் சாம்பல் இருட்டு
ஏரிக்கரைப் பனையைத் தேடி
எங்களின் பயணம்
கருந்தோல் பிளந்து மஞ்சள் காட்டி
காற்றில் வாசமாய்ப் பேசும்
புதரில் விழுந்த பழங்கள்

வெயிலில் களைத்து
ஈச்சையின் கீழொதுங்கினால்
நாலுபழம் உதிர்த்து
பாசம் காட்டும்

கரம்பில் மாடுகள்
நாவலின் உச்சியில்
அணில்களாய் ஊர்வோம்
தவறிய பழங்கள்
கிணறு ‘சப்’புக் கொட்டி ருசிக்கும்
மீன்கள் குவிந்து
மறுபடி கலையும்

பள்ளி விட்டு வருகையில்
சடைத்துக் கிடக்கும் களாப்பழங்கள்
சோமசுந்தர வாத்தியின்
பிரம்படிக்கு மருந்து

கோடை விடுமுறை
ஒவ்வொரு கையிலும் தொரட்டு
கொடுக்காப்புளி யாவும்
முள்முடியேந்திய வள்ளல்

தோப்புக்குப் போனால் இளுப்பை
சாமியர் மலையெனில் இலந்தை
பெரியார் ரோடு முழுக்க புளி
ஏதுமற்றதொரு பொழுதில் அவிஞ்சிப் பழமென
அலைந்து திரிந்ததொரு காலம்

மரமேறிப் பழம்தேடிய வாழ்வு
பூண்டறுந்து போக
மாடியேறிப் பணம்பொறுக்கவென்று
சபிக்கப்பட்டாயிற்று.


பச்சியப்பன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.