நேரக் காலத்தை உடைத்து
அமைதிக்காக வலம் வரும்
மலைச்சுற்றுப் பாதையில்,
யதார்த்த வாழ்வின்
நினைவுகளைப்
பாய் விரித்து
விற்றுக் கொண்டிருக்கிறார்
கைக்கடிகாரக் கடைக்காரர்.
நினைவின் சுமையை
இறக்கி வைக்க,
வலியின் நிழல் படியாத
ஒரு சித்திரம் தேவைப்படுகிறது.
காலைப் பனியில்
நனைந்த நந்தியாவட்டையாக
இருந்தால் கூட
போதுமாகிறது.
- மாரி.கிருஷ்ணமூர்த்தி