பெற்றோர்கள் இருக்கும்வரை
கவலை என்பது
வெளியில் பெய்யும் மழை.
நாம்
நனைந்து விடாமல்
இருப்பதற்காக
அவர்கள்
கூரையாக இருந்து கொள்கிறார்கள்...

இப்போது
மழை
நம்மீதே பொழிகிறது..
நாமோ
குளிருக்குத் தவிக்கும்
குழந்தைகளுக்கான
இன்னொரு கூரையாக
முயல்கிறோம்...

நாம்
நம் பெற்றோரை
அழைத்த
அதே சொற்களில்
நம்மை குழந்தைகள்
அழைத்துக் கொண்டிருக்கிறார்கள்..

எல்லாம்
இப்போது நடந்தது போலவே
இருக்கிறது...
ஒரு நதி
தன் கரைகளை அறியாமல்
அரிப்பதைப் போல
மெல்ல மெல்ல
நம் குழந்தைமையை
காணாமல் ஆக்கி விடுகிறது
காலம்.

காலச் சுழற்சியின்
இலக்கணம் புரிவதற்குள்
கணமாய் மாறி
மறைந்து விடுகிறார்கள்
மனிதர்கள்.

காலம்
ஒரு சங்கிலியைப் போல,
தன்னை
தொடுத்துக் கொள்கிறது..
முதிர்ந்த வளையத்தின்
பாரம்
அடுத்த கண்ணியின்
கரம்பற்றித் தொடர்கிறது.

- அ.உமர் பாரூக்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.