பெரு நெருப்பொன்றை
ஆக்கினோம்
வணங்கவே
தீபமாய்
ஈரோடு
எந்தத் திசையில் இருந்தாலும்
அது
தமிழகத்தின் கிழக்கு...
ஈரோட்டில் பிறந்த
இரண்டாம் கலகமே
தமிழ் பேரன்பே
தீத்தின்னா ஞானம்
யாருக்கு வாய்க்கிறதோ
அவனே - கவிஞன்
எல்லோரும்
இரங்கல் எழுதி ஆறுதல் தேடினார்கள்
அன்றைக்கு
எனக்கான ஆறுதல்
அழுகையாகி இருந்தது...
ஈரோட்டில் இருந்த எங்கள்
இரண்டாம் தடியையும்
இழந்துவிட்டு
ஆதிக்கச் சாக்கடையை
ஊன்றுகோல் இன்றி
எப்படிக் கடப்பது...
ஈரோட்டில்
வீழ்கின்ற பெரியோர்களால் மட்டும்
ஓர் இனமே
எழமுடியாமல் போகிறது
என்பதால்தான்
கூடுதல் அழுகை கொப்பளிக்கிறது...
மரணம் இயல்பென்று
கடந்து போவதுதான்
இயற்கையின் நியதி
ஈரோட்டு மரணங்களை
இந்த நியதிக்குள்
அடக்கிடவிட முடியாது...
எங்களுக்காக
எழுத்தாயும் ஏந்தி
ஆதிக்க நூல் அறுத்த
உங்களைக்
காலம் அறுவடை செய்வதை
நாங்கள் எப்படி
இலாபக் கணக்கில்
வைத்துக் கொள்ள முடியும்...
பழுத்து தேர்ந்த கனியாகி
விடுதலை விதைகளைச்
சுமந்துதான் வீழ்ந்திருக்கிறீர்கள்
ஈரோட்டு தமிழ் அன்பரே
தமிழ் மண்
இப்போது
காவிப் புழுதியாகிக்
கணகணத்துக் கொண்டிருக்கிறது
எல்லா விதைகளும் விருட்சமாகுமா? என்பதுதான்
இப்போதைய ஐயம்...
மகாகவிஞனே
கவிப்பசி கொண்ட
தீ நாக்குகள்
உன்னைத் தின்று
அறிவுப் பசியாறி இருக்கிறது...
அது வாசிக்க முடியாத
பக்கங்களை
ஒரு கலயத்தில்
அள்ளித் தந்ததைத்தான்
நாங்கள்
இலக்கிய மண்ணில்
உரமாக்கி இருக்கிறோம்
மண்
இனி எங்களின்
தமிழ் விடுதலையை
வாசிக்கப் பழக்கிக் கொண்டே இருக்கும்...
எல்லைக் காவலர்களுக்கும்
அரசியலாளர்களுக்கும்
வாய் திறந்தழுத
துப்பாக்கிக்கிகள்
அண்மைக் காலமாய்
எழுத்தாளர்கள்
பிரிவிலும்
வாய் திறந்து அழுகின்ற
உரிமை பெற்றிருக்கிறது
அந்த வரிசையில்
நீ
கவி முதலானாய்...
மகாகவியே
உன் கவிதையை
வாசிக்கும் ஒவ்வொருவருக்கும்
நீ
ஏதோ ஒன்றைப் பரிசாக்குகிறாய்...
உன்
கவி ஞானம்
கற்பக விருட்சம்
மணம் கேட்பவனுக்கு
அது
மலர்களைப் பரிசளிக்கிறது...
வரம் கேட்பவனுக்கு
அது
கனிகளைப் பரிசளிக்கிறது...
உரம் கேட்பவனுக்கு
அது
வேரை விழுதாக்குகிறது...
நிழல் கேட்பவனுக்கு
அது
கிளை நீட்டுகிறது...
பசியோடு பத்தாவது முறை
வீழ்பவனுக்கு மட்டும்
அது
எழக்கற்றுத் தருகிறது...
உன்
மரக்கிளையின்
கொம்புகளில்
நிறவேறுபாடின்றி
எல்லா பறவைகளும்
அமர்ந்து ஓய்வெடுக்கின்றன...
வாசிப்புத் தஞ்சம் அடைபர்கள் எல்லாம்
புத்தராகி விடுகிறார்கள்
உன்
கவிதை போதிமரம்...
அது எப்படி?
உன்
கவிதைப் பெருங்காட்டில் விளைந்த
எல்லா மூங்கிலும்
புல்லாங்குழலாகின்றன...
எங்கள்
சிந்தனைக்குள்
எப்போதும்
பிச்சை போடும்
கவிஆதிரை
நீ...
சாகா வரம் பெற்றவள்
தமிழ்த்தாய்
தம் குழந்தைகள்
வீழ்ந்து புதைவதைத்
தடுக்கத்தான்
சிலரை
இலக்கிய நூலால் கட்டி
தன்னோடு வைத்துக் கொள்கிறாள்...
அந்த வரிசையில்
உடல் மறைத்துக் கொண்டாலும்
நீ
கவிதைத் தனலில்
கண கணத்துக் கொண்டிருக்கிறாய்...
எங்களின்
தாகம் தணிக்காமல்
ஓடுவதற்கு
நீ ஒன்றும்
சரஸ்வதி அல்ல
காவிரி...
பெரிதாய் பாடு பொருளாக்கி
இது வரையில்
எதையும் பாடியவன் அல்ல
உன்னைப்
பாடுவதற்கும்
வெறும் கையோடுதான்
புறப்பட்டேன்
உன் கவிதைகளை
வாசித்தேன்
உன் கவிமரத்தின்
எட்டாத உயரக்கிளையில்
வணக்கம் வள்ளுவ
பழுத்திருந்தாலும்
அது
கொய்யாக் கனி...
இறந்து போனது நாய்
புதைக்கப்பட்டேன்
நான்
இது பாப்லோ நெருடாவின் அழுகை
இதே பேரன்பு
மூலக்கவிதையில் வடியுமா என்பது
எனக்குத் தெரியாது
பேரன்பு கொண்டு
நீ தமிழ்படுத்திய
கவிதையை வாசித்த போது
பாப்லோ நெருடாவோடு
சேர்ந்து
நாயின் அன்பின்
புதைந்து போனேன்
நான்...
நீ கவி நெருப்பு
உன்னைச் சும்பவன்
எவனும்
இருளில் வாழ்ந்துவிடவே முடியாது...
எங்கெல்லாம்
இருள் சூழ்கிறதோ
அங்கெல்லாம்
உன் ஞானக் கவிதையை
ஏற்றி வைப்போம்
எங்களுக்காக
அப்போதும்
ஒளி செய்வாய்
வழி காட்டுவாய்
உன்
விரல் பிடித்துதான்
ஆதிக்க மேடு இடித்து
அநீதியின் பள்ளம் நிரப்பி
சமத்துவக் கீதம்
இசைப்போம்
அப்போது
உன் பாடல்களை
நாங்கள்
எங்களுக்கான தேசிய கீதமாக இசைப்போம்
நீயும்
எங்களோடு
எங்களின் இருப்பாய்
எப்போதும்
இருப்பாய்...
- மகா.இராஜராஜசோழன்
குழந்தைகளுக்கான தமிழ் பயிற்றுநர், இயக்குநர்,
செம்மொழி தமிழ்க்கூடம், சீர்காழி.