1.
வாழைப்பழச் சோம்பேறிகளுக்கு
பலாக்கனியின் சுவை
என்றும் கிட்டாது.

2.
‘இவ்வளவுதான் வாழ்க்கை’
எனத் தோன்றும் கணமே
உண்மை வாழ்க்கை துவங்கும்.
அது உன்னதம்.

3.
இலைகள்
தம் இறுதி யாத்திரைக்கு
தாமே மலராகின்றன.

4.
கடல் கவிழுமா?
கப்பல் கவிழ்வதற்கே
கவலைப்படுவதா?

5.
யாரங்கே!
பூட்டிய கதவைத் தட்டலாம்,
திறந்த வீட்டை அணுகவே
சிரமம்.

6.
வெற்றிக்கு ஒரு கோப்பை,
தோல்விக்கு ஆயிரம் கவிதைகள்!

7.
சந்தோஷம் சோகம்
வெற்றி தோல்வி
விளையாட்டு சாகசம் –
எல்லாம் கலந்த செய்தித்தொகுப்பை
‘செய்திகள் முடிவடைந்தன’
என அளவான புன்னகையுடன்
துல்லிய நேரத்தில் முடிப்பார்
சோபனாரவி.

இச்செய்தியை கவிதையாக்கி
ஊடகத் திரையில் கிறுக்கியது
காலத்தின் உடைந்த எழுதுகோல்.

8.
வெற்றி பெற்றதால்
ஆணவம் கொள்ளாதீர்.
தோற்றவரிடம்தான்
உம் வெற்றி இருக்கிறது.

9.
குளிரென்றாள் –
சூடாக!

10.

தன்னைவிடப் பெரிய
தங்கையைத் தூக்க
கை நீட்டும் குழந்தைபோல
உம் இதயத்தைத் தூக்க
இக்கவிதையை நீட்டுகிறேன்,
அன்பே!

11

உன்னிடமிருந்து வருகிறேன் —
அல்லது,
உன்னை நோக்கி வருகிறேன்.

இந்தப் பயணத்தில்,
நானாக இருப்பது
எவ்வளவு எளிதாயிருக்கிறது!

- அ.சீனிவாசன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.