கீற்றில் தேட...

இருக்கு இல்லை
வேண்டும் வேண்டாம்
நீ நான்
அவன் இவன்
முடியும் முடியாது
இதற்கிடையேதான் வாழ்வு இருப்பதாக
மனிதன் கற்பனித்துக் கொண்டான்.
பிறகு அதையே
பின் தொடரவும் செய்தான்.

*
தோன்றலுக்கும் பிறப்புக்கும்
தொடர்பில்லை
தீர்வுக்கும் சாவுக்கும்
தொடர்பில்லை

*
தூரத்தில் இருக்கும் தூரம்
எளிமையானது
கிட்டத்தில் இருக்கும் தூரம்
சவாலானது

*
இன்னும் வேகமாய்
முன்னேறி
போயிருக்க வேண்டியவன்
மனிதன்
சறுக்கிய இடம் கடவுள்

*
தேவதைகள்
வருவார்கள் போவார்கள்
மனுஷி மட்டுமே
உடன் இருப்பாள்

*
பாதை இல்லை
என்பதற்காக
பாதை முடிந்து விட்டது
என்று அர்த்தம் இல்லை

*
மொட்டை மரத்தில்
காய்க்கும் கனிகள்
வெற்றுக் கண்களுக்குத்
தெரியாது

*
அமைதியாய் ஓடும்
பத்து வண்டிகளை
பாராட்டாத மனம்தான்
தறிகெட்டு ஓடும்
ஒற்றை வண்டியைத்
திட்டித் தீர்க்கிறது

யுத்தன்