என் நிழலை மடித்து
சட்டைப் பைக்குள்
வைத்துக் கொண்டேன்

பாதி இருளில்
மொட்டை மாடி படிக்கட்டுகளில்
ஏறிச் செல்லும் போது
உன்னை முத்தமிட்ட ஒரு சமயம்
புல்லாங்குழலில் இருந்து கசிந்த இசை
என் சுவாசமான ஒரு பொழுது
என் நிழலை மடித்து
சட்டைப் பைக்குள்
வைத்துக் கொண்டேன்

மோப்பம் பிடித்து வந்த
என் பிரிய பூனையோ
திரைச்சீலைக்கு அந்தப்புறம்
தன் வாளிப்பான
ஏற்ற இறக்கங்களைக் காட்டி
ஒரு அழகான வாக்கியம் போல
அசைந்தாடிக் கொண்டிருக்கிறது

என் நிழலை மடித்து
சட்டைப் பைக்குள் தான்
வைத்திருக்கிறேனா என்று
நான் தடவிக் கொண்டிருக்கும் போதே
அது அங்கிருந்து தாவி
தான் மோகித்த பூனையின் முன்
போய் விழுகிறது

ஒரு கெண்டை மீனைப் போல
அதை அப்படியே
விழுங்கி கபளீகரம் செய்து விட்ட
என் பூனை
நாவினால் தன் முகவாய் கட்டையை
நீவிக் கொண்டிருக்கிறது
இது அசல் பிராணி தானா?

சிறு அசைவிற்கே
ஒரு பிராணியின்
வயிற்றில் உருண்டு கொண்டிருக்கும்
சிறு குமிழ் தானோ
என் இருப்பு?

சிறு இச்சைக்கே
மதிமயங்கி தாவிப் போய்
அடி ஆழத்தில்
சிறு துரும்பென உழன்று கொண்டிருக்கும்
என் பிரிய நிழலே
என்று நீ சுய வெழுச்சி கண்டு
என் கனவில் முளைத்தெழுவது
சொல்?

- தங்கேஸ்

More articles by தங்கேஸ்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.