ஏற்ற இறக்கங்கள்
குப்பைகளாய்க்
குவிந்து கிடக்கும்
தெருக்களில் இப்போது
அச்சுறுத்துகின்றன கோரைப் பற்கள்

திரைத் துணி கதவுகளான
வீடுகள் முதல்
கடின இரும்புக் கதவுள்ள
வீடுகளில் வசிப்போரும்
அஞ்சிக் கிடக்கிறார்கள்

திரையில் வாழ்பவர்களெல்லாம்
தெருவில் இறங்கியிருக்கிறார்கள்
கருணையே வடிவான பதாகைகளோடு

வெறிக்கு பலி
வெறிபிடித்து
பலியென நீள்கிறது
இறப்புப் பதிவேடுகள்

குப்பைகளால்
குப்பையாக்கப் படுகின்றன
உரிமைப் போராட்டங்கள்
பசியாற்றும் கூலிக்காக
ஓங்கும் குரல்களின்
குரல்வளைகளில்
அதிகாரத்தின் பூட்சுகள்

கோடிகளுக்குள் விழுந்து
புரண்டு கொண்டிருக்கும்
கூலிக்கு சுடச்சுட வழங்கப்படுகின்றன
பாராட்டுகள் வாழ்த்துகள்

குப்பைகளை நீக்கி
தூய்மையைத் தந்தவர்கள்
குப்பைகளாய்
அப்புறப் படுத்தப் படுகிறார்கள்
உயரும் கைகள் முறிக்கப் படுகின்றன

அதிகாரங்களின் எலும்புகளுக்கு
நீதிகள் வாலாட்டுவது
வரலாறாகி வருகிறது

அதிகார வெறிக்கு
இருப்பவர்கள்
இல்லாமலாக்கப் படுகிறார்கள்
இல்லாதவர்கள் கூட
வாக்காளாராகிறார்கள்

மெல்ல சர்வாதிகாரம்
நோக்கிச் செல்கிறதிந்த நிலம்

பொறுங்கள்

இவையாவும் மறக்கும்படி
புதுச் சட்டமொன்று வரும்

புது ஊழலொன்று
வெளிச்சத்துக்கு வரும்
புதுப் புகாரொன்று வரும்

பிரபலமானவர்களின் விவாகரத்தோ
இரண்டாம் திருமணமோ
செய்தியாய் வரும்
க்ளாசிக் நாயக/ நாயகிகளின்
டீ ஏஜிங் கூட வரும்.

- ஹிதாயத், கோவை

More articles by ஹிதாயத்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.