துயர் மேவும் முன்னிரவை
துணைக்கு நிறுத்தி விட்டு
மறைந்து செல்கிறது
உன் நினைவு
இனி கொடுங்காற்றும்
கொட்டும் பனியும்
எனதாகட்டும்
கல்லாய் சமைந்து கிடக்கும்
விண்மீன்களோடு
எத்தனை நேரம்
வாயாடிக் கொண்டிருப்பேன் சொல் ?
ஒரு சொல்லை
ஒரே ஒரு சொல்லை
இந்த துக்கத்தை அறுத்தெறியும்
கூர்வாளாக்க
நான் எங்கிருந்து
வரம் பெறுவேன்?
இந்த நட்ட நடுநிசியில்
கொட்ட கொட்ட விழித்திருப்பது
சோளக்கொல்லை பொம்மைக்கு
பழக்கமாயிருக்கும்
எனக்கு?
நான் என்ன
செஞ்சடை விரித்த சிவபெருமானா
இப்படி இடைவிடாது
கேலி செய்து கொண்டிருக்கும்
பிறை நிலவை எடுத்து
என் சடையில் சூடிக் கொள்ள?
இதோ கரும் இதயங்களென
அசைந்து கொண்டிருக்கும்
இந்த செம்பருத்தி மரத்தின்
இலைகளுக்கு கீழே நிற்கிறேன்
அசைந்தாடும் இலையே
நீயாவது ஆதரவாக
என் தலை வருடக்கூடாதா?
- தங்கேஸ்