முன்பொரு நாள் அப்பா
வணங்கத் தலை குனிந்தார்
அங்கிருந்துதான் அந்த வியாதி
தொற்றி இருக்க வேண்டும்.
அது பல இடங்களில்
தனித்து அடையாளப்படுத்தியது.
படிப்பில் சிறந்து
கிட்டாதுபோன பட்டங்களை
நிகர் செய்ய இந்த உபாயம்
வெகுவாகக் கை கொடுத்தது.
அனுபவத்தின் உச்சமாக
முக்கோணத்தில் முதுகும் இடுப்பும்
ஆசனமாக ஆச்சரியப்படுத்தியது.
ஒரு நாளின் ஒரு பொழுதில்
பதவி வெறி
கண்களை மறைத்து
தன்மானம் இழந்தபொழுது
என் முதுகுத் தண்டை முழுவதுமாக
உருவி எடுத்துவிட்டேன்
வெகு சாதாரணமாக.
இத் தவழ்தலை
தலைமை ரசித்தது.
பார்த்தறியாத பணிவென
உலகம் வியந்து
அதனதன் போக்கில் ஏதேதோ சொன்னது.
காலச் சூழல்
தலைமைப் பொறுப்பைத் தந்து
தலைவனாக்கியது.
தக்க வைத்துக் கொண்ட
தலைமைக்கு
யாதொரு
பொல்லாப்புமில்லைதான்
எப்பொழுதும் ஒன்றித்
தவழ்வதில் உச்சம் கண்டதால்.
நியாயக் கூச்சல்கள்
நெஞ்சைத் தொடும் தருணங்களில்
எட்டிப் பார்க்கும் தன்மானத்தை
தக்க வைக்க
உருவிய முதுகுத் தண்டை
துலாவிக் கொண்டே இருக்கிறேன்
தொலைத்த இடம்
மறந்து போனதால்.

- ரவி அல்லது

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.