கிளையின் நுனியில்
முள்ளைப் பூக்கும்
ஒரு சொல்லை
நீ பிரசவித்த நேரம்
கருப்பை கிழிந்த
ஓநாய் போல
இந்தப் பிரபஞ்சம் கதறுகிறது
குருதியில் தோய்ந்த வார்த்தை
யோனியிலிருந்து
உருவி எடுக்கப்பட்ட
பச்சிளம் சிசு போல
துடிதுடித்துக் கொண்டிருக்கிறது
சல்லடையாகத் துளைக்கப்பட்ட
நுண்துளைகளின் வழியே
காற்று உள்ளே நுழைய
முயற்சிக்கையில்
திணிக்கப்பட்ட இரணத்தின் வலியில்
உடல் திருகி
சுருண்டு கொள்கிறது
உதிர்த்தவன் மறந்தாலும்
உதிர்ந்த துளிகள்
தங்களின் சிவப்பு நிறத்தை
தரையோடு தரையாக
சொட்ட மறப்பதில்லை
வல்லூறுகள் வானத்தில் வட்டமிட
என் குருவிக் குஞ்சுகள்
தரையோடு தரையாக
முகம் புதைத்து
பூணும் சமாதிகள்
வான் கோழிகள் போலன்று
கல்லுக்குள் புதைந்து விடும்
தேரைகள் போன்றவை
என் பிரியமே
அன்பே!
வனாந்தரத்தில்
ஒரு சொல்லை
தன்னந்தனியாக
வீசி எறிந்து விட்டுச் செல்கின்றாய்
எந்த யுகத்தில் மீண்டும் தோன்றி
இதை நீ எடுத்துச் செல்வாய் சொல்?
- தங்கேஸ்