கீற்றில் தேட...

அசாதாரண இக்கட்டு
இழிநிலை சூழல்
இந்த நாட்டிலும் இருந்தது.
அதுபோலவொரு
அவல நிலை
அந்த நாட்டிலும் இருந்தது.

மக்களை வதைத்து
பணக்காரன் பின்னே
பல்லக்கு தூக்கும்
பாதகமொன்று
அந்த நாட்டிலும் நடந்தது.
அது
இந்த நாட்டிலும் நடந்தது.

பணம் பதவிகளுக்கு
மதப் போர்வையில்
பச்சை துரோகமிழைக்கும்
மாபாதகக் கூட்டம்
அந்த நாட்டிலும் இருந்தது.
அது
இந்த நாட்டிலும் இருந்தது.

இரு நாட்டிலும்
அதிகாரம் சுவைக்க
அரசியல் சுயநலமிகளுக்கு
உணர்ச்சியில் மக்களைத்
திளைக்க வைத்து
ஓட்டுப் பொறுக்க
சில உயிர்கள்
அவ்வப்பொழுது தேவைப்பட்டது.

அதற்கு
தீர்க்கக் கூடாதெனும்
அச்சக் கோடுகள் எல்லைகளென
இடைஞ்சலாக எப்பொழுதும்
இருந்து கொண்டே இருந்தது.

அது எங்கள்
நிம்மதியைக் குலைத்து
நிலை தடுமாற வைத்து
எல்லையற்ற அன்பு
எங்களுக்குள்
இருப்பதையே மறந்து
நாங்கள் மனிதன்தானாவென
மறுஆலோசனைகள்
செய்ய வைத்தது.

அரிதென ஒரு சிலர்
எங்களை எங்களுக்கே
நினைவூட்ட வந்தபொழுதெல்லாம்
அவதூறுகளால்
கட்டுக்கதைகளைப் பரப்பி
தலைமுறை தலைமுறையாக
அடிமையாக வாழுவதில்
ஆனந்தம் கொள்வதாக
யாவருக்கும் இங்கு
வாழ்க்கை மாறிப் போனது.

- ரவி அல்லது