இருப்பதான வருகையின் அசௌகரியம்

கவனம் பெறாத
அன்றாடங்களின்
சிலதைப் போல வந்துபோனவென்
பிரசன்னம்
பதிவேட்டில்
பதிவாகி இருக்கிறது
பார்த்து மகிழ.
இம்முறை
இதயம் தொடாத
இன்னலில் தரிசனமற்றதாக
போனதென் பொழுதுகள்
விதியாக்கிய உணவுகளை
வெறுப்பாகத் தின்று
வீணாக திரும்பியதைத் தவிர.

வழிதவறி விட்ட வான்காவ்

எடுத்து வந்து
வீட்டில் வைத்ததை
மறந்துபோன தயக்கம்
வியாபித்து தான் இருக்கிறது
சிறு வேதனையாக
அசௌகரியம் கொள்ளுமாறு.

வாய்ப்புகளற்ற பொழுதும்
பார்த்துவிடும் ஆசையில்
அவரைத் தேடியதில்
முட்டாள்தனமில்லை
குறை சதவிகிதத்திலும்
நிறை நம்பிக்கைகள்
நிறைந்திருப்பதால்‌.

முன்பொரு முறை
நடை பயணத்தில்
இருபது ரூபாய்த் தாளை
சித்திரமாகக் கிழித்திருந்ததை
எடுத்த இடத்தில்
பைத்தியமொருவர்
இருப்பார் என்பதில்
எனக்கு உடன்பாடில்லை
என் புரிதல்கள்
எப்பொழுதும் வேறானதால்.

தீவிர‌ எண்ணமொன்றில்
திண்டாடுமவரை
காண முடியாதெனத் தெரிந்தும்
சித்திரமாக்கிய
அந்தத் தாளை அவ்விடத்திலேயே
வைத்து விட்டேன்
ஆயிரமாயிரம் எண்ணங்களில்
அமைதியற்று அலைபவர்கள்
எடுக்காமல் இருக்க வேண்டுமென்ற
ஆசையில்.

- ரவி அல்லது

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.