எனது காலின் மீது
எனது பெயரை எழுதுங்கள் அம்மா
அழியாக் கருப்பு மையில்,
நனைந்தால் வழியா வண்ண மையில்
வெயிலின் சூட்டில்
உருகி மறையா மையில் எழுதுங்கள்….

எனது பெயரை
எனது காலின்மீது எழுதுங்கள்…
கோடுகள் தடிமனாகவும்
தெளிவாகவும் இருக்கட்டும்
உங்கள் அழகிய
கையெழுத்தால் எழுதுங்கள்
நான் தூங்கச் செல்லும்போது
அம்மாவின் கையெழுத்தில்
எனது பெயரைக் கண்டு
அமைதி கொள்வேன்

எனது காலின்மீது
எனது பெயரை எழுதுங்கள் அம்மா
எனது சகோதரிகள், சகோதரர்கள்
கால்களின் மீதும் எழுதுங்கள்..
இந்த வழியில்
நாங்கள் ஒன்றாக இருப்போம்
இந்த வழியில்
நாங்கள் உங்கள் குழந்தைகளாக
அறியப்படுவோம்…

எனது கால்களின் மீது
எனது பெயரை எழுதுங்கள் அம்மா…
உங்கள் பெயரையும்
அப்பாவின் பெயரையும் கூட
உங்கள் கால்களின் மீதும்
எழுதிக் கொள்ளுங்கள்
அதனால் நாம் ஒரு குடும்பமாக
நினைவுகூரப்படுவோம்…

எனது காலின்மீது
எனது பெயரை எழுதுங்கள் அம்மா…
வெடிகுண்டு நமது வீட்டைத் தாக்கும்போது
சுவர்கள் நமது மண்டைகளையும் எலும்புகளையும்
நொறுக்கும்போது
நமது கால்கள் நமது கதையைச் சொல்லும்
எவ்வாறு நமக்கு ஓடுவதற்கு
ஓரிடமும் இல்லாமல் போனதென்று.

(நன்றி: countercurrents.org)

- ஸெய்னா அஸ்ஸாம்

தமிழில் நிழல்வண்ணன்

Pin It