எப்போதும் வேறொருவர் ஆகத்தான்
விரும்புகிறோம்
அவரைப் போல இவரைப் போல
அவராக இவராக
எத்தனை எத்தனை உருவம் நமக்கு
தவறு நிகழ்ந்தால்
நானில்லை என்று தப்பிக்க
தவறாகவே நிகழ்ந்தால்
நானே இல்லை என்று தப்பிக்க
அதில் தான் எத்தனை எத்தனை பருவம்
நாமாக இருப்பதில் இருக்கும் சலிப்பா
நாமாகவே இருந்து விட்டால் என்ற தவிப்பா
இன்னொருவரின் சுமை இலகுவாகிட
இது தொன்றுதொட்ட பழக்கம்
இன்னொருவரின் இடம் கனமானது என்ற
கன்றிப் போன வழக்கம்
அது அப்படியாக இருப்பதால்
அப்படியாகவே இருக்கிறது
அப்படி இல்லை என நினைக்க
இப்படித்தான் இதுதான் என்று தவிக்க
பொழுதெல்லாம் இலையாகி விட
விழுதெல்லாம் இசையாகி விட
அந்த இன்னொருவர் ஆகி விடுதலில்
இருக்கும் சுலபம் சுலபமாக இருக்கிறது
இன்னொருவராகி தப்பித்துக் கொள்தல்
புரிவதாக இருக்கிறது
நாம் நாமாகத்தான் இருந்தால் என்ன
தொடர்ந்து கேட்பவனுக்கு
தோகை விரிக்கும் பதில்
உளக்கண்ணாடியைத் துடைக்க வேண்டும்
அதற்கு முன்
உனக்கொரு பிம்பத்தை படைக்க வேண்டும்

- கவிஜி

Pin It