எப்போதெல்லாம்
நான் உன் பெயரைக் கேட்கிறோனோ!

எப்போதெல்லாம் என்
வெளி வெறுமை கொண்டு
ஏதோவொன்றைத் தேடுகிறேனோ!

எப்போதெல்லாம்
என் அறை இசையால் நிறைந்து ததும்புகிறதோ!

எப்போதெல்லாம்
என்னைச் சுற்றி
சிரிப்பொலி
கேட்கிறதோ!

எப்போதெல்லாம்
பெருங்கூட்டத்தில் ஒற்றைச்சீட்டாய்
உருவி வெளியேறுகிறேனோ!

எப்போதெல்லாம்
இரவில் வெகுநேரம்
விழித்துக் கிடக்கிறேனோ!

எப்போதெல்லாம்
படுத்தவுடன்
தூங்கிப் போகிறேனோ!

எப்போதெல்லாம்
நான்காம் பிறையைக்
காண்கிறேனோ!

எப்போதெல்லாம்
படிக்கிற புத்தகத்தில்
பிடித்த வரியை
அடிக்கோடிடுகிறேனோ!

எப்போதெல்லாம்
பவளமல்லி வாசத்தை
கடக்கிறேனோ!

எப்போதெல்லாம்
நான் மனம் வெதும்பி
அழுகிறேனோ!

எப்போதெல்லாம்
கண்கள் ததும்ப
சிரிக்கிறேனோ!!

எப்போதெல்லாம்
எனக்கு கவிதை
எழுத வருகிறதோ!

அப்போதெல்லாம்
நான் அந்த நிமிடம்
உனக்கானதென்று நினைத்துக் கொள்கிறேன்!

நீயென் ஆதி!

- இசைமலர்

Pin It