லஞ்சம்னு ஏன் சொல்லணும்
அன்பளிப்புன்னு பழகலாம்
போட்டுக் குடுக்கறதுன்னு ஏன் சொல்லணும்
கேட்டதைச் சொன்னோம்னு இருக்கட்டுமே

எதுத்த வீட்டுக்காரனுக்கு
அட்டாக் வந்தா
நாம என்ன செய்ய முடியும்
பிக் பாஸ் பாக்கற அவசரம் இருக்கே

வீதி முக்குல மரத்தடி கிழவி
தினமும் தான் கண்ணுல படுது
என்ன செய்ய
அது வாங்கி வந்த வரம்
சாமி குத்தமாக் கூட இருக்கலாம்

அநாதை ஆசிரமம் முதியோர் இல்லம்னு
வீடேறி வந்து
கேட்டுக்கிட்டேதான் இருப்பாங்க
எங்கிருக்கு குடுக்க
எல்லாமே பிக்சட்லல இருக்கு

சரி இன்னமும் கில்ட் இருந்தா
கவலைய விடு

இந்தா அடுத்த மாசம் நோம்பி வருதுல்ல
கோயில் சாட்டியாச்சுல
அம்மனுக்கு ஆயிரம் ரூபாய்ல
புடவை சாட்டிடலாம்
தலைக்கு நேரா தொங்க
கூட ஒரு குண்டு பல்பு வாங்கி தந்தரலாம்

எல்லாம் சரியாப் போகும்
எல்லாம்...

- யுத்தன்

Pin It