இரு லாரிகளுக்கிடையே நுழைந்து
முன்னும் பின்னும் போகவிடாமல்
பயணிப்பது போலவே
வழிகிறது
நீயற்ற பகலின் அனல்.
நீ நிரப்பி அனுப்பிய செங்காதலின் டீசல் குடித்து
மணல்துகளாய் மனத்துகள்கள்
பறந்து விழிகளில் விழுந்து
உறுத்துகிறதுன் நினைவுகள்.
நெடுஞ்சாலை வகிடுகளின்
பொன்னரளிப் பூக்களாய்
வெந்தும் தணியாமல் பூத்துக் குலுங்குது
உன் விரல் தீண்டாத
மஞ்சளேறிய காமங்கள்,
பொக்கலின் மேயும் ஊருக்குள்தான்
திமிலுடன் காளைகள்
நுரைதள்ளி திரிகின்றது,
நெஞ்சுக்கு நடுவே மண்டிக் கிடக்கும்
பெரும் பசலைக் காதலை
வேருடன் தழுவிடும் வெயில்
தடுமாறி நிற்கிறது
எப்பக்கம் இறங்கினாலும்
விபத்து நேரிடும் என்ற
அச்சமற்று வீசுகிறது காற்று.
என்னை ஒட்டிவைத்த புருவமத்தியில் சிக்கி
கடக்க வழியற்றுத்
தவித்திடும் கால்நடையாகிறேன்.
நீயின்றி எப்படி ஊர்ப் போய்ச்சேரும்
இந்தப் பாதை?

- சதீஷ் குமரன்

Pin It