உச்சரிப்பில் உண்மை சுண்டும்
எனது பெயர் கசப்பு தான்
நிஜம் குடித்து உச்சரி நெல்லிக்கனி
காவியம் கடைசி வீட்டிலிருந்தும்
கிளம்பும் என நம்புதல் கடினம் தான்
நம்பவில்லை என மறுதலித்து
தலை கவிழ்ந்த பின்னும்
காதில் கேட்கும் விமான சத்தம்
சத்தமாக உளறுவதை விட
மௌனமாக உணர்வது
எஞ்ஞான்றும் நலம்
திரும்பும் பக்கமெல்லாம் நிற்பது சலிப்பு
திகைக்கும்படி ஒரு வழியில் நிற்கிறேன்
வியந்து கொள்
தொப்பை வளர்ப்போர் மத்தியில்
மூப்பை குறைப்போன் ஒரு மாதிரி தான்
ஒவ்வாமைக்கு நான் என் செய்வேன்
மலை உச்சியில் நிற்பவனை
வீசி எறியும் எந்த கல்லும் துளைக்காது
வீணை வாசித்து ஒருவேளை அழைக்கலாம்
வெயிலுக்கும் குடை பிடிப்பதல்ல
மழைக்கு குடை மறத்தல் தான்
எனது ஞாபகம்
நீட்டி முழங்கவும் தெரியாது
முணுமுணுக்கவும் தெரியாது
இடையே சிறு ஓடையாய் சலசலக்கிறேன்
கேள்
நிற்பது யானையெனினும் நிற்கிறது
நகர்ந்தது நத்தை எனினும் நகர்கிறது

- கவிஜி

Pin It