துவைத்த துணிகள் காய்ந்து விடக் கூடாது
உடனே மடித்து அடுக்கி பீரோவில்
இட்டு நிரப்பிட வேண்டும்
ஆண்டவன் கட்டளையாக
அரை மணிக்கொரு முறை
வீடு பெருக்குதல் நடக்கிறது
கதவு துடைத்தலென்பது
ஒரு சிற்றின்ப வியாதி போல
போகையில் வருகையில்
ஜன்னல் துடைத்தலும் அப்படியே
பார்த்துக் கொண்டிருக்கையிலேயே
டிவியை துடைத்து தீவிரம் காட்டுவது
சற்று பயமுறுத்துபவை தான்
கடைசி வில்லல் இட்லி
தட்டில் இருக்கையிலேயே
வாங்கி கழுவி விட
தயாராக நிற்கும் காட்சி
சற்றேறக்குறைய திகிலூட்டுதல்தான்
இப்பதான் தொடைச்சேன் என்பதற்காக
டைல்ஸிலிருந்து ஓரடி மேலே நடக்கும்
கால்களுக்கு எங்கு போவது
கதவடைத்து விட்டால்
பூமியிலிருந்து விலகி எங்கோ
வேறெங்கோ இருப்பதாக நம்பும்
வீட்டு ராணிகள் கவனத்துக்கு
தூசுகள் வழியே வந்த பூமியில் தான்
உங்கள் வீடிருக்கிறது
தும்மலில் கவனித்துப் பாருங்கள்

- கவிஜி

Pin It