இடைச்சுவர் முன்பிருந்தே இருக்கிறது
இருந்தாலும் சுவர் ஊடுருவும் கண்கள்
இரு பக்கமும் இருக்கின்றன
டிவி சத்தத்தின் வழியோ
கறிக்குழம்பு வாசத்தின் வழியோ
அவை எப்படியும் வந்தும்
போயும் தான் இருக்கின்றன
சொந்தம் கூடும் நாளில்
கவனம் மறு வீட்டில் தான்
கால் மடக்கி நின்று
கைகள் விரித்து சாய்ந்து
புகைப்பட சிரிப்பு சத்தம்
இருபக்கமும் இயல்பு தான்
அப்பக்கமிருந்து இலைகள் விழும் நாளில்
இப்பக்கமிருந்து துணிகள் விழவும்
அனுமதி உண்டு
சேரன் பாண்டியன் ரேஞ்சுக்கு பகை இல்லை
இருந்தும் இன்னதென தெரியாத ஒரு மூடாக்கு
ஆனாலும்
சுவருக்கு ஷிப்பிட்டு இணைக்கும்
பூனையை
இரு வீடுகளும் வெறுப்பதில்லை

- கவிஜி

Pin It