எத்தனை வெட்டினாலும்
மீண்டும் முளைத்து விடுகிறேன்
விழுங்கி செரித்து
பின்னும் மிச்சமிருக்கிறேன்
பெரு உடலில் சுழலும்
கால சதையெனவும் நான்
மன உச்சியில் இதோ பறக்க
தயாராய் இருக்கும்
சிறு பறவையும் நான்
விடுபட்டு அலைகையில்
இலையெனவும் நானே
அயற்சி சலிப்பு ஏதுமின்றி
நாள் தாண்டியும்
மூச்சிரைத்துக் கொண்டிருக்கும்
விடுபட்ட கிளைகளில்
ஒட்டிக்கிடக்கும் என்னை
என்ன தான் செய்ய
மளமளவென அசைந்து குதித்து
தீர்ந்து விடுகிறேன்
இருந்தும்
மறுகணமே துளிர்க்கும்
சிறு விதையெனவும்
இருக்கிறேன்
காற்றோடு மனம் அசைய
மரமாகி நம்புகிறேன்
வழிப்போக்கன் ஒருவனின் நிழல்
எனவும் நான்...!

- கவிஜி

Pin It