போர் முடிந்த பின்னும்
முதுகில் குத்தியவனை
தேடி அலைகிறது மரணம்

*
வானமே எறிந்த கல் தான்
வாக்கியத்தில் தடுமாறுகிறது
எழுதும் கை

*
காற்று மழையோட்டி
சென்றால் என்ன
இலை பெய்கிறதே

*
திருவிழா கூட்டத்தில்
ஒருவன் மட்டும் உச் கொட்டினான்
தலை துண்டான கெடாவுக்கு கடவுள் தரிசனம்

*
கை விடப்பட்ட கிணற்றிலும்
கையளவு நீர் இருக்கிறது
கருங்கல் கருணை

*
எறும்பென தவறாக
பெயர் சூட்டி விட்டோம்
அது ஊர்ந்து கொண்டிருக்கும் குறும்பு

*
கடலில் சிக்கிக் கொள்கையில்
புரிகிறது
மீன் தொட்டிகள் கல்லறைகள்

*
கோலம் அழிந்தால் என்ன
தாளம் நன்றாக இருக்கிறது
லயத்தோடு மழை

*
எட்டிப் பார்க்காத மனிதர்கள் மத்தியில்
பாழடைந்தாலும் பரவாயில்லை
ஊர்க் கிணறு

*
வீடுவரை துணை
பிறகு வீதியில் காவல்
நிலவா நீ நாயின் கனவா

- கவிஜி

Pin It