குளிரூட்டப்பட்ட பெட்டியில்
படுத்துக் கிடந்தாள் அம்மா
தூங்கும் போது மரணம்
நல்ல சாவென பேசிக் கொண்டார்கள்
உயர் இரத்த அழுத்தம்
புருஷனை இழந்த துக்கம்
இரண்டாவது பையனின் உடல்நிலை
ஆகாத மருமகள்களென
காரணங்கள் பல அலசப்பட்டு
மெல்லத் தொடங்கின
வெற்றிலை வாய்கள்
எப்போ பாடிய எடுக்கப் போறீங்க
என்று கேட்ட பக்கத்து வீட்டுக்காரரின்
கடைவாயில் துருத்திக் கொண்டு
தெரிந்தன கோரப்பற்கள்
RIP குறுஞ்செய்திகளில்
நிரம்பியது அலைபேசி
எல்லோரும் வந்துட்டாங்களா
என்ற கேள்விக்கு
மயான அமைதி நிலவியது
செலவுகளை எப்படி
பங்கிட்டுக் கொள்வது
உள்ளே விவாதம் தொடங்கிய
கொஞ்ச நேரத்தில்
வீசத் தொடங்கியது
பிணவாடை!

- பா.சிவகுமார்

Pin It