வழக்கம் போல
இன்றெழுதியதையும்
அனுப்பி விட்டேன்
நேற்று முந்தாநாளும் கூட
அனுப்பியிருக்கிறேன் தான்
சட்டென வந்த நினைவில்தான்
நிற்க என
எனையே கூர்ந்தேன்
இதயம் நின்ற வாட்சப் வழியே
எப்படி அது சாத்தியம்
எனக்கு பெரும் மறதி
அதே எனக்கு சிறு நினைவும் தான்
பிரியங்களின் நிகழ்வை
தள்ளி வைக்க இயலாத
புலனத்தில்
தொடர்ந்து நெருங்குகிறேன்
தூரம் துயரம் துக்கமென நகர்கிறது
நம்பிக்கையற்ற பொழுதில்
கிடைத்த தெளிவில் மீண்டும் மீண்டும்
தொடுதிரை யாசிக்கிறேன்
கட்புலன வாசல் வரை வந்து
பாராட்டும் புன்னகை முகம்
இனி இல்லை எனும்போது
இயலாத தவிப்பை
எழுதி எழுதி அடிக்கிறேன்
அடிக்கோடிடும் ஆற்றாமை
நீலக் கோட்டில் ஒன்று கூட
விழுவதில்லை என்பது
இருந்தும் இருந்தும்
பார்வை மூடிக் கிடக்கும்
உன் வாட்சப் கண்கள்
நல்ல கவிதை
எழுதும் போதெல்லாம்
திறந்து கொள்வதை
எப்படித்தான் உன்னிடம் சொல்வது
அக்கா...!

- கவிஜி

Pin It