மரணம் வருகையில்
நானொரு புதுமொழி
தயாரித்திருப்பேன்
அம்மொழியில்
பெரும் கவிதையென
என் பெருங்கனவின்
நீண்ட தாளில்
தீட்டி இருப்பேன்.

கவிதையின் இறுதியில்
என் இறுதி மூச்சு
முற்றுப்புள்ளியென
பெரும் சூறாவளியின்
இறுதிப் படிமமாய்
நட்டு வைத்திருப்பேன்.

நீங்கள் யாவரும்
வாசிக்க வேண்டுமெனில்,
எனக்கான
இறுதி ஊர்வலத்திற்கு
வாருங்கள்..

எரியுமென் சடலத்தின்
பெரும் தீ....
அக்கவிதையினை வாசிக்கும்.
நான் உங்கள் தோழனென உரக்கச் சொல்லும்
உங்கள் புறக்கணிப்பிலிருந்து புறப்பட்ட
விரக்தியில்
ஏன் தனிமையில் வாழ்ந்தானெனக் கூறும்.

கேட்க இயலாது
உணருங்கள்....!
மரணத்தில் தயாரித்த
என் புது மொழியை உணர்ந்து..
பின்பு
மனிதம் இருப்பின்
கண்ணீர் சிந்துங்கள்...

இதுவரை எழுதிய கவிதைகளுக்குக்
கிடைக்காத அங்கீகாரம்
எழுதாது
என் மரணத்தில்
வாசிக்கப்படும் என் வாழ்க்கைக் கவிதையை
அங்கீகரிக்கட்டுமே
உங்கள் கண்ணீராவது.

- இரா.சந்தோஷ் குமார்

Pin It