இது தான்
நான் குடிப்பது கடைசி
என அப்பா சொன்ன
எண்ணிக்கை நூறைத்
தாண்டியிருந்தது...

மகனுக்கான
நூற்றி ஐம்பது ரூபாய்
கட்டணத்திற்கு சொன்ன
தவணை நூற்றி ஐம்பதைத்
தாண்டியிருந்தது...

பெரிய மனுஷி ஆகிவிட்ட
மகளுக்கு
தாவணி வாங்கித் தருவதென்பது
கானலாகவே மாறியிருந்தது...

வயதான அம்மாவின்
மருத்துவ செலவு செய்ய
முடியாமல்
இன்னும் இருக்கும் ஆயுளை
முன் கூட்டியே குடித்திருந்தது...

வீட்டிற்கு சீதனமாய் வந்த
மனைவியின் பொருட்கள் எல்லாம்
கடன் வாங்கியவர்களிடம்
அடைக்கலமாயிருந்தது...

அதிகமான போதையில்
நான்கு சக்கர வாகனத்தில்
மோதிக் கொண்டதில்
இரண்டாக
இருந்த கால்களின் எண்ணிக்கை
ஒன்றாகியிருந்தது....

பள்ளிக்கட்டணம் செலுத்த
முடியாததால் பள்ளிக்கு
முன்பு மிட்டாய் விற்றுக் கொண்டிருந்த மகனும்,
துணிக்கடை ஒன்றில்
தாவணி விற்றுக் கொண்டிருக்கும் மகளும்
மதுக்கடையைக் கடக்கும் போது
செத்து செத்துப் பிழைக்கிறார்கள்...
அப்பாவைப் போலவே!

- மு.முபாரக்

 

Pin It