உங்கள் சுதந்திரத்தைப் போல
அழகாக இருக்கிறது வார்த்தைகள்.
அவையால்
எத்தனை கவரும்படியாக நீந்துதலை உந்தித் தள்ளுகிறீர்...

எவரொருவருக்கும் இல்லாது போல்
எல்லாமே நீங்கள் நீந்தும்
நீரென நீந்துகிறீர்

அழகான உறுமீன்களையும்
வறியோருக்கு வைத்திருந்த
குறு மீன்களையும் லபக்கென கவ்வி,
உங்களுற்றோர்
திருப்தியடையத் தான்
அனேக
வண்ணங்கள் நிரம்பியிருக்கிறது
உங்கள் சொற்களில்...

வயப்பட்ட வார்த்தைகள்
தளர்வுறும் வாக்கில்...
வாரிசுகளுக்கு வார்த்து விடவும்
அவ்வபோது சொற்களால்
நீந்துகிறீர்

எத்தனை சொட்டு இரத்தத்தை
நீரென உறிஞ்சியோ
நீரென நீந்தியோ
கடந்திருப்பீர்

சாதூர்யமாக எங்களை
கடந்துவிட
விழுங்கிட இனியும்
நீங்கள் வரையிருக்கும்
ஏட்டுப்பொன் மீன்த்தொட்டிக்குள்
கனவு கானத் தயாராக
இல்லை...

இதோ
எங்கள் கைகள்
எழுதத் தொடங்கிவிட்டன
உங்கள் சொற்களோடு
நாக்குகளைப் பிடுங்கும்
வார்த்தைகள் அதிலிருக்கும்...
நீங்களிதை
ஏதோ நீந்துதல்
இல்லை
எழுதுதல் எனச் சொல்லி
வளைந்து விடலாம்
ஆனால் இது எம் புறப்பாடு.........
எழுதுதல் என்பது எழுதல்
எழுதல் என்பது எதுவாகவும்
எத்தனைக் கூராகவும் இருக்கும் இனி...

- முருகன்.சுந்தரபாண்டியன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.