தனது எஜமானனின் தோரணையோடு
அந்த பங்களாவின் வாசலில்
அமர்ந்திருந்தது அந்த நாய் ..
நீண்ட பெரு மழையின் சப்தம்
முடிந்த பின்னிரவில்
வீதியின் நிசப்தமாய் ..வீடு !
அடிக்கொருதரம் எட்டிப் பார்க்கும்
மரங்கொத்தி பறவைபோல்
அம்மாவின் அம்மா கதவுக்குப் பின்னால் !
இன்னும் கொஞ்ச நேரத்தில் வரும்
செய்திக்காக அலைபேசியை அணைத்து
விடாமல் வைத்திருக்கும் எஜமானர் !
கண்ணீர் காய்ந்த முகத்தில்
தண்ணீர் தெளிக்கப் பட்டு விழித்தாள்
கனவுகளைப் பறிகொடுத்த எஜமானின் மகள்!
இதோ... பங்களாவினுள் திமு திமுவென்று
ஓடி வரும் கைத்தடிகள் பவ்யமாக
தரையில் வைத்தன அரிவாள்களை !
வாசலில் எந்த சலனமும் இல்லாமல்
அமர்ந்திருந்தது அந்த நாய்
தனது எஜமானனின் தோரணையோடு!
- கருணா