muslim Sri Lanka

மீள முடியா வலியிலிருந்து
விடுவிப்பதில் தொடங்குகிறது இக்குறிப்பு
நீ அத்துமீறிய இடத்திலிருந்துதான்
சிதையத் தொடங்கியது என் இருப்பு

உன் நியாயங்களின் படி
அரசு துளிர்க்கும் இடமெல்லாம்
கடவுளும் முளைக்கிறார் என்றே
கௌரவப்படுத்தி கர்வம் கொள்கிறாய்

எனக்கு தாய் நிலம் அற்றதாயும்
போக்கிடமற்ற புறம்போக்காயும்
சிங்கவனம் முழுதும் உனதென்று
சித்தரிக்கிறாய்

சாது மிரண்டால் காடுகொள்ளாத
கதைகள் பல தெரிந்தும்
சிரமங்களுக்குள் என்னை நிறுத்தி
‘சிங்களையோ’வாக நீ மாறி
நாடற்றவனாய் பிறர் நம்ப என்னை
கத்தரிக்கிறாய்

உன் காவிப் பார்வையால்
வெளுத்த என்னிடம்
விரும்பத் தகாததாய்
எதைக் கண்டாய்?

நம்பிக்கை, இறையச்சம் தவிர
ஏழ்மையில் பூக்கும் அன்பினை
சினத்தில் கனியும் இரக்கத்தை
பிரியங்களில் துளிர்க்கும் புன்னகைகளை
பாசங்களின் உயிர்ப்புகளை
விருப்பங்களின் தியாகங்களை
மௌனங்களின் நியாயங்களை அன்றி
எதை நான் வைத்திருக்கிறேன்?

நீயோ
மனிதத்தைப் புதைக்கிறாய்
கடவுள் முளைக்கும் என்று
உனக்குத் தெரிந்ததெல்லாம்
பதிலற்ற
கேள்வி கணக்குகளும்
பகைமையைத் திணிக்கும் பிணக்குகளும்
சில.. பிக்குகளும்

முடிவில்...
நான்கு பேர் தலைமையில்
இல்லை....
நான்கு பேர் தலையின் மேல்
மதம் பிடித்தவர்கள் பின் தொடர... நீ
ஒரு மண்ணும் வேண்டாம் என்று
காலத்தின் கல்லறையை நோக்கி
கடந்து கொண்டிருப்பாய்!

- ரோஷான் ஏ.ஜிப்ரி, இலங்கை

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.