வயலுக்குள் நீர் பாய்ச்சப்போய்
வெள்ளத்தில் அள்ளுண்ட
அப்பாவுடன் நின்றது
மூக்குமுட்டிய மூன்றுவேளை

பன்றிக்காவலுக்குப் போன அண்ணனை
மதம்பிடித்த யானை மிதித்த இடத்தில்
நின்றுபோனது இரண்டாவது வேளை

இப்போது ஒருவேளைக்காய்
புகைந்து கொண்டிருக்கும் வாழ்வை
ஊதி, ஊதி அப்பமாக சுடுகிறாள் அம்மா

கட்டியவுடன் காவுகொடுத்துவிட்டு
பித்துப்பிடித்து
பிதற்றியபடி
முண்டச்சியாயிருக்கும் அக்காவுடன் சேர்த்து
விறகுக்காக அலையும்
சுள்ளிக்காடுகளில் வரைபடுகிறது
என்னுடையதும் தம்பியினதும்
வாழ்க்கை!

- ரோஷான் ஏ.ஜிப்ரி

Pin It