இழவு வீட்டில்
பிணம் பிடிக்கிறீர்கள்...
பசிக்கு கை நீட்டுபவனிடம்
கேள்வி நீட்டுகிறீர்கள்...

நடிகையின் நான்காவது காதலை
நான்கு பக்கம் செதுக்குகிறீர்கள்...
விபத்தை எதுகை மோனையில்
ரத்தம் சொட்ட விளக்குகிறீர்கள்..

இடை தொடை.... உள்ளாடை
எது கிடைத்தாலும் வட்டமிட்டு
காட்டி விடுகிறீர்கள்...
படுக்கையறைக் காட்சி கிடைத்து விட்டால்
பத்து நிமிடத்துக்கொரு முறை
முகப்பறையை நீலமாக்கி விடுகிறீர்கள்...

ஆளுக்கொரு முறை
செந்தமிழைக் கொலை செய்கிறீர்கள்..
மைக்கை நீட்டி விட்டு
மனிதாபிமானத்தை மடக்கிக்
கொள்கிறீர்கள்...

இடம் பொருள் மறந்து
பேசுகிறீர்கள்..
கேள்வுக்கு கேள்வி கேட்பதை
அறிவென்று நம்புகிறீர்கள்...

அதிகார வர்க்கத்திடம் மட்டும்
அஞ்சுகிறீர்கள்...
ஆதிக்க சக்திகளிடம் மட்டும்
அடங்குகிறீர்கள்...

தெருச் சண்டைகளை
அரங்கத்துள் நிகழ்த்துகிறீர்கள்...
விளம்பரங்கள் வாயிலாக
அன்னியப் பொருளாதாரத்தைத்தான்
வளர்க்கிறீர்கள்...

இரண்டாயிரம் லஞ்சத்தை
வெளிச்சம் போட்டுக் காட்டுகிறீர்கள்..
இலஞ்சம் தவிர் என்ற
சகாயத்தை மூடி மறைக்கிறீர்கள்..

செய்திகளை கொடுக்காமல்,
உருவாக்கும் உங்களுக்கு...

வெறும் டி.ஆர்.பி.க்குள் இல்லை
இந்த நாடு என்பதை உணர்த்த
மீண்டும் துப்பத்தான் வேண்டியிருக்கிறது
"த்தூ வென"

- கவிஜி

Pin It