பாலச்சந்திரனை படுகொலையாளர்களிடம்
ஒப்படைத்ததுதான் - உங்கள் ராஜதந்திரம்;
இசைப்பிரியாக்களை வேட்டைப்பொருளாக்கியதுதான்
உங்கள் இறையாண்மை.
பாலகர்களின் படுகொலைகளையும்,
வன்புணர்வுகளையும் கொண்டாடும் தேசத்தில்,
எந்தவித நியாயங்களும் மிச்சமிருக்கப் போவதில்லை.
எல்லாச் சுயநலமும்,
உலகின் எல்லோரின் சுய நலமும் ஒருமித்த
ஒரு புள்ளியில் எழுதி விட்டீர்கள்
உங்கள் வெற்றியை;
இனி, இதில் பேச எதுவுமில்லை- இது
என் நாடு, என் இனம், என் நியதி என்கிறீர்கள்;
தேசத்தின் பெயரால்
பட்டினிச் சாவுக்கும், பாலியல் வன்முறைக்கும்,
படுகொலைகளுக்கும் உரிமை தந்த உலகம்
என்ன பேசும்? - அதுவும்
உங்கள் குரல், உங்கள் வார்த்தை.
தெரிந்த உண்மைக்கு பொய்யர்களின்
பதிலையே தேர்வு செய்கிறீர்கள் - அதில்
உங்களைப்போலவே உண்மையின் திசை இல்லை.
வாழ்ந்து வெற்றி கொள்ளமுடியாத தேசத்தை
அழித்து உங்களதென்கிறீர்கள்;
அதில் கல்லறைகளுக்கும் இடமில்லை என்கிறீர்கள்.
தேசத்தை இழந்தவனுக்கு பெயரில்லை,
வீடில்லை, நாடில்லை
அவன் காணாமல் போனவனும் இல்லை என்கிறீர்கள்.
எதுவும் இல்லாதவனின், எதுவுமாய் இல்லாதவனின்
கனவை என்ன செய்வீர்கள்?- அவனை
எரித்த எச்சத்தை என்ன செய்வீர்கள்?
இந்த மண்ணில் விதைப்பதைத் தவிர.