இப்போதெல்லாம் என்னுள்
ஏதொவொரு மாற்றமிருப்பதாய்
முணுமுணுத்துக் கொண்டேயிருக்கிறாய்
காரணமற்று எனை விலகிச்செல்வதும்
காரணம் கேட்டு எனை அடித்து மிரட்டுவதுமாயிருக்கிறாய்

எனக்கான நகர்தலை தடைசெய்வது போல்
எங்கு சென்றாலும் எனைப் பின்தொடர்ந்தே
உன் நிழல் ஊடுருவிப் பார்க்கிறது
உடுத்தும் உடையிலிருந்து பேசும் அலைபேசி எண் வரை
அத்தனையிலும் ஆராய்ச்சியை மேற்கொள்கிறது

வழக்கமாய் வேலைமுடிந்து வருகிற நேரமென்றாலும்
புதிதாய் கேள்வியெழுப்புகிறாய் ஏன் தாமதமென
அலுவலகத்திற்குள் நுழைந்து சகபணியாளர்களிடம்
எனைக் குறித்தான நடவடிக்கைகளை
கேள்விகளால் நிரப்பிச் செல்கிறாய்

எனக்குத் தெரியாத காரணமொன்று
உன் கைப்பிடிக்குளிருப்பதை என்னால் உணரமுடிகிறது
வெளிப்படையாய் மனம்விட்டுப் பேசிப்போக
மறுதலிக்கும் நீ ஊரார் மத்தியில்
நான் யார் என்பதை தெரிந்துகொள்ள
ஊர்க்கூட்டம் போட்டு உரையாடிப் போகிறாய்

சந்தேகம் உன்னுள் கொழுந்துவிட்டெறிகிறது
எரிகிற தீயை என்னுள் நட்டுவைத்து
உனக்கும் எனக்குமான பந்தத்தை முறியடிக்க
முகவரி தேடியலைகிறது

நேற்று வரை உனக்குள் நம்பிக்கையாயிருந்த நான்
ஏனோ இன்று சந்தேகமாயிருக்கிறேன்
நீ ஆணாயிருப்பதாலேயோ… இல்லை
நான் பெண்ணாயிருப்பதாலேயோ…

- வழக்கறிஞர் நீதிமலர்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.